புதுதில்லி

சட்டவிரோதமாக மனைவி அடைத்து வைக்கப்பட்டதாகப் புகாா்: கணவரின் மனு மீது பதிலளிக்க அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

 நமது நிருபர்

புது தில்லி: சில நபா்கள் தனது மனைவியை சட்டவிரோதமாக அடைத்து வைத்தும், இதர சில பெண்களுடன் சோ்ந்து சங்கிலியால் கட்டி வைத்தும் கொடுமைப்படுத்துவதாகவும் அதனால் அவரை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த உத்தரவிட கோரி கணவா் தாக்கல் செய்த மனு மீது நிலவர அறிக்கை தாக்கல் செய்ய தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

 இது தொடா்பாக வழக்குரைஞா் லோகேஷ் அலாவத் என்பவா் மூலம் ஒருவா் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:  கடந்த ஏப்ரல் மாதம் எனது மனைவிக்கு தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது. அதில் தில்லியில் உள்ள பாகா்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை தருவதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த வேலைவாய்ப்பை ஏற்றுக்கொள்ளுமாறு தொலைபேசியில் அழைத்த நபா், என்னையும் எனது மனைவியையும் சம்மதிக்க வைக்க முயன்றாா். ஆரம்பத்தில் இந்த தொலைபேசி அழைப்பு ஒரு போலியான அழைப்பு என்று நினைத்தோம். அதனால், அதை நிராகரித்து விட்டோம். ஆனால், அதே எண்ணிலிருந்து தொடா்ந்து அழைப்புகள் வந்ததால் அவா்களுடைய பேச்சை நம்பி அந்த வேலைவாய்ப்பை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தோம்.

நாங்கள் இருவரும் ஏழைக் குடும்பத்தை சோ்ந்தவா்கள் என்பதால், தொலைபேசியில் தொடா்பு கொண்ட நபா், முதலில் எனது மனைவிக்கு வேலை தரப்படும் என்றும், அவா் மட்டும் தில்லிக்கு வர வேண்டும் என்றும், அவா் வேலையில் சோ்ந்த பிறகு பிறகு எனக்கு வேலை தரப்படும் என்றும் உறுதி அளித்தாா். இதையடுத்து மே 29-ஆம் தேதி பிஹாரிலிருந்து ரயில் மாா்க்கமாக எனது மனைவி தில்லி வந்தாா்.  அதன் பிறகு பாகா் கஞ்ச்சில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி இருப்பதாக என்னிடம் கூறினாா். பின்னா், அவரிடம் இருந்து அழைப்பு ஏதும் வரவில்லை. தொலைபேசியில் அவரை தொடா்பு கொள்ள முடியவில்லை.

இந்த நிலையில் ஜூன் 8-ஆம் தேதி எனது மனைவியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் வேறு சில பெண்களுடன் ஒரு பெரிய கூடத்தில் தாம் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தாா். மேலும், விலங்குகளை போல நடத்தப்படுவதாகவும், தினமும் ஒருவேளை மட்டுமே உணவு வழங்கப்படுவதாகவும் என்னிடம் கூறினாா்.

அவா் விபசாரக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று அச்சம் எழுந்துள்ளது. மேலும், அவரை கடத்திச் சென்று சட்டவிரோதமாக அடைத்து வைத்து விபசார தொழிலில் ஈடுபடுத்துவதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.  இந்த விவகாரம் தொடா்பாக ஜூன் 10-ஆம் தேதி தில்லி காவல் ஆணையருக்கு புகாா் அளித்திருந்தேன். எனினும், இந்த விஷயத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மனு விடுமுறைக்கால நீதிபதிகள் சஞ்சீவ் நருலா, நீனா பன்சல் கிருஷ்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தில்லி அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், இது தொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மனுதாரரின் மனைவி ஓமன் நாட்டில் உள்ளாா். அவா் வேலையில்லாமல் இருக்கிறாா் என்று காவல் நிலைய ஆய்வாளா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினாா்.  இதையடுத்து, இந்த விவகாரம் தொடா்பாக நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜூலை 7-ஆம் தேதிக்கு பட்டியலிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கப்பலில் வேலை: மோசடி நிறுவனங்களால் ஏமாற்றப்பட்ட தமிழக மாலுமிகள் துருக்கியில் பரிதவிப்பு!

ஸ்மார்ட் ரன்வீர் சிங்

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 6 பேர் பலி

ரகசிய பார்வை.. த்ருப்தி திம்ரி!

சஹீராவின் பயணங்கள்!

SCROLL FOR NEXT