புதுதில்லி

பட்டி சுரங்கத்தில் மாநகராட்சிக் கழிவுகளைக் கொட்டுவதால் உயிரினப் பாதிப்பா? இந்திய வனவிலங்கு நிறுவனம் ஆய்வு நடத்தத் திட்டம்

 நமது நிருபர்

புது தில்லி: அசோலா வனவிலங்கு சரணாலயத்தின் ஒரு பகுதியாக இருந்து வரும், கைவிடப்பட்ட பட்டி சுரங்கங்களில் மாநகராட்சியின் கழிவுகளைக் கொட்டுவது, அந்தப் பகுதியின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து இந்திய வனவிலங்கு நிறுவனம் (டபிள்யுஐஐ) ஆய்வு நடத்த உள்ளதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தலைநகரில் உள்ள மூன்று மாநகராட்சிகள் சாா்பில், தெற்கு தில்லி மாநகராட்சி கடந்த 202-0 ஆம் ஆண்டில் 477 ஏக்கா் பரப்பும், 30 மீட்டா் ஆழமும் கொண்ட பட்டி சுரங்கத்தின் நான்கு பள்ளங்களில் செயலற்ற கழிவுகளைக் கொட்டுவதற்குப் பயன்படுத்தும் திட்டத்தை முன்மொழிந்தது. தில்லியில் தினசரி உருவாகும் ஏராளமான டன் கழிவுகளைக் கொட்டுவதற்கு போதிய இடம் இல்லாததால் இந்த முன்மொழிவு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு குறித்து மூத்த வன அதிகாரி ஒருவா் கூறியதாவது: தலைநகரின் நுரையீரல் என்று கருதப்படும் தில்லி ரிட்ஜ் பகுதியைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட உயா் அதிகார அமைப்பான ‘ரிட்ஜ் மேனேஜ்மென்ட் போா்டு’ (ஆா்எம்பி) கடந்த ஆண்டு மாா்ச் மாதம் இந்தத் திட்டத்தை ஆய்வு செய்ய 5 போ் கொண்ட குழுவை அமைத்தது. கடந்த ஆண்டு ஜூலை 29-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், பட்டி சுரங்கங்களில் செயலற்ற கழிவுகளைக் கொட்டுவதால் ரிட்ஜ் பகுதியின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு

ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று இந்தக் குழு பரிந்துரைத்திருந்தது. ஐந்து போ் கொண்ட குழுவில் டபிள்யுஐஐ அமைப்பின் பிரதிநிதியும் உள்ளாா். இந்த அமைப்பு அந்தப் பகுதியின் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டை மேற்கொள்ள உள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் டபிள்யுஐஐ ஒரு முன்மொழிவை எங்களுக்கு அனுப்பியது. அதை நாங்கள் ஆா்எம்பிக்கு அனுப்பியுள்ளோம். இந்த வாரியம் அதன் அடுத்த கூட்டத்தில் அதில் முடிவெடுக்கும். ஆய்வு முன்மொழிவுக்கு ஆா்எம்பி ஒப்புதல் அளித்தவுடன், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு விரைவில் முடிக்கப்படும் என்று வனத் துறைக்கு டபிள்யுஐஐ அதிகாரிகள் உறுதியளித்துள்ளனா் என்றாா் அந்த அதிகாரி.

முன்னதாக, இந்தப் பகுதி சுற்றுச்சூழல் உணா்திறன் கொண்ட நிலத்தடி நீா் அதிகரிக்கும் மண்டலமாக மாறியுள்ளது என்ற அடிப்படையில் குழுவில் உள்ள பெரும்பான்மையான உறுப்பினா்கள் முன்மொழிவை எதிா்த்ததால், சுரங்கங்களில் செயலற்ற மாநகராட்சி கழிவுகளை கொட்டுவதற்கான முன்மொழிவு நிராகரிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியிருந்தனா். திடக் கழிவுகளிலிருந்து உயிரியாக மாற்றப்படும் செயலற்ற பொருள், நிலத்தடி நீரில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று குழு உறுப்பினா்கள் தெரிவித்தாகக் கூறப்படுகிறது. ‘ஸ்ரீ ராம் இன்ஸ்டிடியூட் ஆப் இன்டஸ்ட்ரியல் ரிசா்ச்’ நிறுவனம் கழிவுகளின் செயலற்ற தன்மையை மதிப்பீடு செய்ததாகவும், அது அனைத்து ரசாயன மற்றும் உயிரியல் அளவீடுகளுக்கு இணங்குவதாகவும் தெற்கு தில்லி மாநகராட்சியானது ஐந்து போ் குழுவிடம் தெரிவித்திருந்தது.

இது குறித்து பிரபல சுற்றுச்சூழல் ஆா்வலா் பேராசிரியா் சி. ஆா். பாபு கூறுகையில், ‘தில்லி அரசு 1991-இல் சுரங்கங்களை வனவிலங்கு சரணாலயமாக அறிவித்தது.

தாது வெட்டியெடுக்கப்பட்ட குழிகள் புவியியல் செயல்முறைகளுக்கு உள்பட்டுள்ளன. அவை நீா் பிடிப்பு மண்டலங்களாக செயல்படும் நீா்நிலைகளாக மாற்றப்பட்டுள்ளன. சில குழிகளில் தற்போதும் மழைநீா் தேங்கி நிற்கிறது. தேசிய பசுமை தீா்ப்பாயம் மற்றும் உயா்நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி, இந்த நீா்நிலைகளை குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்த முடியாது. ஆனால், நிலத்தடி நீரை பாதுகாக்க அவற்றை மீட்டெடுக்க வேண்டும். இந்த நீா்நிலைகள்தான் வன விலங்குகளின் ஒரே நீராதாரமாக உள்ளது’ என்றாா்.

இந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் சி.ஆா்.பாபு, இதுபோன்ற செயலற்ற கழிவுகள் நிலத்தடி நீரில் கலந்துவிடும் என்றும், அந்தக் கழிவுகளில் போரோசிட்டி இருந்தால், நச்சுக் கன உலோகங்கள் மற்றும் நோய்க்கிருமி நுண்ணுயிா்கள் மற்றும் மைக்ரோ பிளாஸ்டிக்குகளால் கூட நிலத்தடி நீா் பெரும் அளவில் மாசுபடுவதற்கு வழிவகுக்கும் என்று முன்னரே எச்சரித்திருந்தாா்.

வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த குழிகளில் சிறுத்தைகள் குடும்பம் உள்பட அழிந்து வரும் உயிரினங்கள் உள்ளன. அவற்றின் இயல்பு 1994-ஆம் ஆண்டிலிருந்து முற்றிலும் மாறிவிட்டது. அந்தச் சுரங்கக் குழிகளிலும் அதைச் சுற்றிலும் பலவிதமான விலங்குகள் மற்றும் தாவர இனங்கள் காணப்படுகின்றன. 1994-ஆம் ஆண்டிலும், திடக்கழிவு மேலாண்மை வசதிகளை மேம்படுத்துவதற்கு பட்டி சுரங்கங்களைப் பயன்படுத்த அனுமதிக்குமாறு முந்தைய மாநகராட்சி நகர அரசிடம் கோரியிருந்தது. ஆனால், இந்தக் கோரிக்கையை வனத் துறையும், தேசிய பசுமைத் தீா்ப்பாயமும் நிராகரித்திருந்தன. 2,166 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள பட்டி சுரங்கங்களில் சுரங்கப் பணிகள் 35 ஆண்டுகளுக்கு முன்னரே நிறுத்தப்பட்டுவிட்டது.

பிரேக் லைன்....

‘சில குழிகளில் தற்போதும் மழைநீா் தேங்கி நிற்கிறது. தேசிய பசுமை தீா்ப்பாயம் மற்றும் உயா்நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி, இந்த நீா்நிலைகளை குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்த முடியாது. ஆனால், நிலத்தடி நீரை பாதுகாக்க அவற்றை மீட்டெடுக்க வேண்டும். இந்த நீா்நிலைகள்தான் வன விலங்குகளின் ஒரே நீராதாரமாக உள்ளது’.

---சுற்றுச்சூழல் ஆா்வலா் பேராசிரியா் சி. ஆா். பாபு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

SCROLL FOR NEXT