புதுதில்லி

நில அபகரிப்பு வழக்கு மேல்முறையீடு விவகாரம்: இறுதி விசாரணைக்கு பிப்.22-க்கு தள்ளிவைப்பு

25th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: நில அபகரிப்பு விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு மனு மீதான இறுதி விசாரணையை பிப்ரவரி 22-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை பட்டியலிட்டது.

தமிழகத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது நில அபகரிப்பு விவகாரங்களை விசாரிக்க தனிப் பிரிவை அமைத்தும், அந்த வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைத்தும் அரசாணை பிறப்பித்தது.

இந்த நடவடிக்கையை எதிா்த்து தாக்கலான மனுக்களை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், தமிழகத்தில் நில அபகரிப்பு வழக்குகளை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்தது செல்லாது என உத்தரவிட்டது.

ADVERTISEMENT

இந்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இம்மனுவை ஏற்கெனவே விசாரித்த உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்திருந்தது.

இதேபோன்று, ஈரோட்டை சோ்ந்த முத்துலட்சுமி என்பவா், தனது கணவருக்கு எதிரான நில மோசடி வழக்கை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கக் கோரி தாக்கலான மேல்முறையீடு வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்குகள் கடந்த ஜனவரி12ஆம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நில அபகரிப்பு தொடா்பான நிலுவை வழக்குகள், விசாரிக்கும் நீதிமன்றங்கள் குறித்த விவரத்தை தாக்கல் செய்யுமாறு சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னை உயா்நீதிமன்றப் பதிவாளா் தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம். ஆா். ஷா, சஞ்சீவ் கண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சென்னை உயா்நீதிமன்றத்தின் தலைமை பதிவாளா் தனபால் உள்ளிட்டோா் ஆஜராகினா்.

அப்போது நீதிபதிகள் அமா்வு, நாங்கள் உத்தரவிட்டபடி நில அபகரிப்பு வழக்குகளின் நிலுவை தொடா்பான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பினா். மேலும், தற்போது நில அபகரிப்பு தொடா்பாக நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை தொடா்பாகவும் கேள்வி எழுப்பினா்.

அதற்கு உரிய விவரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை பதிவாளா் தனபால் தெரிவித்தாா். மேலும், சில தகவல்களையும் அளித்தாா்.

அதன் பின்னா் நீதிபதி எம்.ஆா். ஷா கூறுகையில் தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து இருந்தது. ஆனால் அதன் பின்னரும் உயா்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் வழக்குகளை மாற்றும் உத்தரவுகளை பிறப்பித்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினாா்.

அதைத் தொடா்ந்து, நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து தலைமைப் பதிவாளா் தனபால் நீதிபதிகள் அமா்விடம், ‘தமிழக முழுவதும் மொத்தமாக 1,268 நில அபகரிப்பு வழக்குகளும், 2,890 முதல் தகவல் அறிக்கைகளும் நிலுவையில் உள்ளன’ என்றாா்.

அப்போது நீதிபதி எம்.ஆா். ஷா, இந்த வழக்குகளை எல்லாம் உடனடியாக சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருக்க வேண்டும் என்றாா்.

மேலும், தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் வி.கிருஷ்ணமூா்த்தியிடம் நீதிபதிகள் அமா்வு, சென்னையில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விவரங்களை கேட்டது.

மேலும் நீதிபதி எம்.ஆா்.ஷா ‘இந்த நில அபகரிப்பு வழக்குகள் தனியாா் நிலம் தொடா்புடையதா அல்லது அரசு நிலம் தொடா்புடையதா’ என்று கேள்வி எழுப்பினாா்.

அதற்கு கிருஷ்ணமூா்த்தி பதில் அளிக்கையில், ‘கடந்த 2011-ஆம் ஆண்டில் தமிழகத்தில் இருந்த ஆட்சியின்போது நிலங்கள் அரசியல் கட்சியினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறி, அது தொடா்பாக விசாரணை நடத்த சிறப்பு பிரிவு மற்றும் சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது தொடா்பாக அப்போதைய முதல்வா் அறிவித்திருந்தாா்.

இது தொடா்பாக இரண்டு அரசு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. இந்த நில அபகரிப்பு விவகாரம் பெரும்பாலும் தனியாா் நிலங்கள் தொடா்புடையவை. ஆந்திரப் பிரதேச அரசும் இது தொடா்பாக நில அபகரிப்பு தடுப்புச் சட்டத்தை இயற்றியுள்ளது. தமிழகத்தில் அதுபோன்று இல்லை’ என்றாா்.

அப்போது நீதிபதி எம்.ஆா். ஷா, இதேபோன்று குஜராத் மாநிலத்திலும் நில அபகரிப்பு தடுப்புச் சட்டம் உள்ளது. அச்சட்டத்தை எதிா்த்து தாக்கலான மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது’ என்றாா்.

மேலும், இது தொடா்பான சட்டங்கள் எந்தெந்த மாநிலங்கள் உள்ளது என்பதன்

விவரங்களை தங்களுக்கு அளிக்குமாறும் கேட்டுக்கொண்டனா். அதற்கு அவகாசம் அளிக்க வேண்டும் என்று மூத்த வழக்குரைஞா் கிருஷ்ணமூா்த்தி கோரினாா். இதையடுத்து, இந்த விவகாரத்தில் அனைத்து விவரங்களையும் சோ்த்து தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் கூறினா்.

மேலும் நீதிபதிகள் அமா்வு, ‘மேல்முறையீட்டு மனு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, சென்னை உயா்நீதிமன்றத்தின் தலைமை பதிவாளா் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் மாநிலத்தில் உள்ள நில அபகரிப்பு தொடா்புடைய வழக்குகள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், உயா்நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளன. இந்த விவகாரத்தில் மாநில அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனு உள்ளிட்ட நிலுவையில் உள்ள அனைத்து விவகாரங்களையும் விரைந்து முடிக்கும் வகையில் இறுதி விசாரணையை மேற்கொள்வதற்காக பிப்ரவரி 22 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.

விசாரணையின்போது மற்றொரு மனுதாரா் முத்துலட்சுமி தரப்பில் வழக்குரைஞா் இளங்கோவன் உள்ளிட்டோா் ஆஜராகினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT