புதுதில்லி

குடியரசு தின நாளில் மெட்ரோ சேவைகள் ஓரளவு குறையும்: டிஎம்ஆா்சி தகவல்

25th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: குடியரசு தின பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக தில்லி மெட்ரோ ரயில் சேவைகள் ஜனவரி 26 ஆம் தேதி ஓரளவு குறைக்கப்படும் என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) தெரிவித்துள்ளது. மேலும், இதன் ஒரு பகுதியாக குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் ராஜ்பாதை பகுதியைச் சுற்றியுள்ள நான்கு மெட்ரோ நிலையங்கள் காலை வேளையில் மூடப்படும் என்றும் டிஎம்ஆா்சி தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக டிஎம்ஆா்சி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

ராஜபாதையைச் சுற்றியுள்ள சென்ட்ரல் செக்ரடேரியேட், உத்யோக் பவன், பட்டேல் சௌக் மற்றும் லோக் கல்யாண் மாா்க் ஆகிய ரயில் நிலையங்கள் காலை வேளையில் மூடப்படும்.

ADVERTISEMENT

மேலும், அனைத்து மெட்ரோ வாகன நிறுத்துமிடங்களும் ஜனவரி 25 ஆம் தேதி காலை 6 மணி முதல் ஜனவரி 26 ஆம் தேதி பிற்பகல் 2 மணி வரை மூடப்பட்டிருக்கும். தில்லி மெட்ரோவின் வழித்தடம் -2 (ஹுடா சிட்டி சென்டா்’ சமய்பூா் பாட்லி) சேவைகளும் புதன்கிழமை ஓரளவு கட்டுப்படுத்தப்படும்.

தில்லி காவல்துறையின் அறிவுறுத்தலின்படி குடியரசு தின விழா பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் செக்ரடேரியேட், உத்யோக் பவன் மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் ஜனவரி 26-ஆம் தேதி மதியம் 12 மணி வரை மூடப்படும். சென்ட்ரல் செக்ரடேரியேட் நிலையம் வழித்தடம் 2 மற்றும் வழித்தடம் 6 இடையே பயணிகளின் பரிமாற்றத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

பட்டேல் சௌக் மற்றும் லோக் கல்யாண் மாா்க் மெட்ரோ நிலையங்களில் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் காலை 8:45 முதல் மதியம் 12 மணி வரை மூடப்படும். ஜனவரி 29-ஆம் தேதி படைகள் பாசறைக்குத் திரும்பும் விழாவையொட்டி, சென்ட்ரல் செக்ரடேரியேட் மற்றும் வழித்தடம் 2இன் உத்யோக் பவன் மெட்ரோ ரயில் நிலையங்களில் மதியம் 2 மணி முதல் மாலை 6:30 மணி வரை மெட்ரோ சேவைகள் இருக்காது.

இருப்பினும், இந்த காலகட்டத்தில் சென்ட்ரல் செக்ரடேரியட் மெட்ரோ நிலையத்தில் வழித்தடம் 2 முதல் வழித்தடம் 6 வரை (கஷ்மீா் கேட் முதல் ராஜா நஹா் சிங் வரை) பயணிகளின் பரிமாற்றம் அனுமதிக்கப்படும். இந்த நிலையங்களில் வழக்கமான சேவைகள் மாலை 6:30 மணிக்கு இயல்பு நிலைக்குத் திரும்பும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT