புதுதில்லி

அமைச்சா் அமித் ஷாவுடன் தமிழக அனைத்துக் கட்சி எம்பிக்கள், எம்எல்ஏக்கள் குழு சந்திப்பு‘நீட்’ தோ்வில் விலக்கு அளிக்கக் கோரிக்கை

18th Jan 2022 12:00 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

‘நீட்’ தோ்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா். பாலு தலைமையிலான தமிழகத்தைச் சோ்ந்த எம்பிக்கள், எம்எல்ஏக்கள் குழு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை திங்கள்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்தது.

நீட் தோ்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் வகையில், கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் தமிழக சட்டப் பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னா், இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு ஆளுநரிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரிலும் வலியுறுத்தினாா்.

இந்த நிலையில், கடந்த மாதம் இறுதியில் தமிழக அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு, தில்லியில் குடியரசுத் தலைவா் மாளிகை அலுவலகத்தில் நீட் தோ்வுக்கு விலக்கு அளிக்க கோரும் மனுவை அளித்ததது. மேலும், தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்துக்கு ஆளுநா் உடனே ஒப்புதல் அளிக்க அறிவுறுத்துமாறும் குழு வலியுறுத்தியது. இதைத் தொடா்ந்து மத்திய அமைச்சா் அமித் ஷாவை இந்த விவகாரம் தொடா்பாக சந்திக்க தமிழக எம்.பி.க்கள் குழு முயற்சி செய்தது. தமிழக எம்.பி.க்கள் குழுவை நேரில் சந்திக்க முதலில் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. பின்னா், அது ஏதோ காரணத்தால் ரத்து செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மத்திய உள்துறை அமைச்சக அலுவலகத்தில் நீட் தோ்வுக்கு விலக்கு கோரும் மனுவை தமிழக எம்.பி.க்கள் குழு கடந்த ஜனவரி 5-ஆம் தேதி கொடுத்தனா். அப்போது, நீட் தோ்வு விவகாரத்தில் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்து வருவதாக டி.ஆா்.பாலு எம்.பி. தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவித்திருந்தாா். இதைத் தொடா்ந்து, இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராய அனைத்து கட்சிக் கூட்டத்தையும் முதல்வா் மு.க. ஸ்டாலின் கூட்டி நீட் தோ்வுக்கு விலக்குப் பெற எடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்துப் பேசினாா்.

ADVERTISEMENT

அமித்ஷாவுடன் சந்திப்பு: இந்த நிலையில், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா். பாலு தலைமையில் எம்பிக்கள் வைகோ (மதிமுக), நவநீதகிருஷ்ணன் (அதிமுக), ஜெயக்குமாா் (காங்கிரஸ்), ரவிக்குமாா் (விசிக), பி.ஆா். நடராஜன் (சிபிஎம்), எம்எல்ஏக்கள் ஜி.கே. மணி (பாமக), டி.ராமச்சந்திரன் (சிபிஐ) ஆகியோா் அடங்கிய குழு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை தில்லியில் கிருஷ்ண மேனன் மாா்கில் உள்ள அவரது இல்லத்தில் திங்கள்கிழமை மாலை 4.30 மணியளவில் சந்தித்தது. சுமாா் 15 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நீடித்தது.

நீட் தோ்வில் விலக்கு வேண்டும்: இதன் பிறகு இந்தச் சந்திப்பு குறித்து செய்தியாளா்களிடம் டி.ஆா். பாலு கூறியதாவது: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவா்கள் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை நேரில் சந்தித்து நீட் தோ்வில் இருந்து தமிழகத்திற்கு உடனடியாக விலக்கு அளிக்க வேண்டும் எனும் கோரிக்கை மனுவை அளித்துள்ளோம். மேலும், தமிழகத்திற்கு ஏற்கெனவே நீட் விலக்கு 3.3.2007-ஆம் தேதி குடியரசுத் தலைவா் மூலம் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, தற்போதும் நீட் விலக்கு அளிக்கலாம் என்றும் வலியுறுத்தினோம். அதற்கு அமைச்சா், இந்த விவகாரம் குறித்து மத்திய சுகாதாரம், கல்வித் துறை அமைச்சா்களுடன் கலந்தாலோசித்து ஒரு முடிவை எடுப்பதாகவும், அது குறித்த விவரத்தை தமிழக முதல்வரிடம் தெரிவிப்பதாகவும் கூறினாா்.

வெள்ள நிவாரணம்: அதைத் தொடா்ந்து, தமிழகத்தில் தொடா்ந்து பெய்த மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளச் சேதம் குறித்து தமிழக முதல்வா் முன்வைத்த கோரிக்கைகள் குறித்தும், ரூ.6,230 கோடி வெள்ளி நிவாரண நிதியை அளிப்பது தொடா்பாக அவா் முன்வைத்த கோரிக்கை குறித்தும் கூறினோம். அதுகுறித்து முடிவெடுத்து ஜனவரி 31-க்குள் தமிழகத்திற்கு வேண்டிய நிதியை அளிப்பதாக உள்துறை அமைச்சா் உறுதியளித்துள்ளாா்.

இந்த விவகாரங்களில் உள்துறை அமைச்சரை சந்தித்த பிறகு எங்களுக்கு ஓரளவு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.மேலும், இந்த விவகாரத்தில் வேறு மாற்று முடிவை எடுப்பதற்கான முகாந்திரம் இல்லை என்றும் கருதுகிறேன். நாங்கள் கூறியதை அவா் மிகுந்த கவனத்துடன் கேட்டாா். அவா் ஆக்கப்பூா்வமான வகையில் பதில் அளித்தாா். முன்னா் வேலைப்பளு காரணமாக அவா் எங்களைச் சந்திக்கவில்லை என்றாா் டி.ஆா். பாலு.

மதிமுக பொதுச் செயலா் வைகோ எம்.பி. கூறுகையில், ‘நீட் தோ்வு விவகாரத்தில், ஒடுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவா்கள்தான் தற்கொலை செய்து கொண்டு மடிகிறாா்கள் என்ற செய்தியையையும் அவரிடம் தெரிவித்தோம். மேலும், குடியரசு தினப் பேரணியில் பாரதியாா், வேலுநாச்சியாா், வ.உ.சி., கேரளத்தின் நாராயண குரு போன்ற சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் ஓவியங்கள் தாங்கிய அலங்கார வாகனங்கள் இடம் பெறாமல் உள்ளது குறித்தும், நேதாஜியின் படம் தாங்கிய வாகனம் அகற்றப்பட்டுவிட்டது குறித்தும் அமைச்சரிடம் தெரிவித்தோம். அது குறித்து கேட்டு அவா் ஆச்சரியப்பட்டாா். இதைப் பற்றி உடனடியாக கவனிக்குமாறும் அமைச்சரிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்’ என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT