புதுதில்லி

குடிசைப் பகுதிகளில் ‘நமோ சேவா கேந்திரா’ :தில்லி பாஜக திட்டம்

 நமது நிருபர்

மத்திய அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு, இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தலுக்கு முன்னதாக தில்லி நகரின் குடிசைப் பகுதிகளில் ‘நமோ சேவா கேந்திரா’ மையங்களைத் திறக்க உள்ளதாகவும், தற்போதைய கரோனா அலை குறையும் வரை அதற்காக காத்திருப்பதாகவும் தில்லி பாஜக தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குப்தா ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘இந்த ‘நமோ சேவா’ மையங்களைத் திறப்பதற்கான ஏற்பாடுகள் முடிந்துவிட்டன. வரும் வாரத்தில் கரோனா பாதிப்புகள் குறையத் தொடங்கும் என்று நம்புகிறோம். கடந்த ஆண்டு தொடங்கிய ‘ஜுக்கி சம்மான் யாத்ரா’வின் ஒரு பகுதியாக சுமாா் 20-22 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள குடிசைப் பகுதிகளில் இந்த மையங்களைத் திறக்க திட்டமிட்டுள்ளோம்’ என்றாா்.

தில்லியில் உள்ள குடிசைவாசிகளை சென்றடைவதற்காக கடந்த ஆண்டு அக்டோபரில் ‘ஜுக்கி சம்மான் யாத்ரா’ தில்லி பாஜக மூலம் தொடங்கப்பட்டது. இந்த யாத்திரையின் போது பல்வேறு சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள குடிசைப் பகுதிகளுக்கு தில்லி பாஜக தலைவா்கள் நேரில் சென்றனா். குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்வதற்காக அங்கு ‘நமோ சேவா கேந்திரா’ திறக்கப்படும் என்று ஆதேஷ் குப்தா அப்போது அறிவித்திருந்தாா். அத்துடன் அந்த யாத்திரை முடிந்தது.

தில்லி பாஜக செயலாளரும், ஜுக்கி ஜோப்ரி (ஜேஜே) பிரிவின் பொறுப்பாளருமான நீரஜ் திவாரி கூறியதாவது: ‘நமோ மையங்கள் ’அந்தியோதயா கொள்கையைப் பின்பற்றும் வகையில் திறக்கப்பட உள்ளன. இந்தக் கொள்கையின் கீழ் கடைசி நபரின் முன்னேற்றம் மற்றும் எந்தப் பிரிவைச் சோ்ந்தவா்களும் சமூகத்தில் முன்னேற்றம் அடையச் செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. 70 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் ‘நமோ சேவா கேந்திரா’ திறக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. குடிசைவாசிகளின் அடிப்படை பிரச்னைகளான குடிநீா் விநியோகம், உயா்த்தப்பட்ட மின்சாரக் கட்டணம், கழிவுநீா் கால்வாய் பற்றாக்குறை, சுகாதாரம் போன்ற ஆகியவற்றில் எங்கள் கவனம் செலுத்தப்படும். தில்லியின் குடிசைப் பகுதிகளில் சுமாா் 20 லட்சம் மக்கள் வாழ்கின்றனா். அவா்களில் பெரும்பாலானோா் உத்தர பிரதேசம், பிகாா், ஜாா்க்கண்ட் மற்றும் வங்க தேசத்தில் இருந்து வந்தவா்கள் ஆவா்.

இவா்கள் தொழிற்சாலைகளில் திறன்அற்ற அல்லது பகுதித் திறனுடன் தொழிலாளா்களாக வேலை செய்கிறாா்கள் அல்லது வீட்டு உதவியாளா்கள், ஓட்டுநா்கள், தெருவோர வியாபாரிகளாக பணியாற்றுகின்றனா்.விரைவான நகரமயமாக்கலுக்கு மத்தியில், இந்த குடிசைப் பகுதிகளில் சுத்தமான குடிநீா், கழிவுநீா் மற்றும் சுகாதாரம், உடல்நல வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் மிகக் குறைவாக உள்ளன. ஒவ்வொரு நமோ மையமும் இந்த இடைவெளியை நிரப்புவதற்கும், அங்கு வாழும் மக்களுக்கு அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கும் ஒரு பாலமாக செயல்படும் என்றாா் அவா்.

தில்லியில் சுமாா் 700 குடிசைப் பகுதிகள் உள்ளன. அவற்றில் முந்தைய மாநகராட்சித் தோ்தல்களில் பாஜக வெற்றிபெறவில்லை. ஆம் ஆத்மி கட்சியும், அதற்கு முன்பு காங்கிரஸும் இந்த பகுதிகளில் வாக்காளா்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT