புதுதில்லி

தில்லி சிறைகளில் 99 கைதிகள், 88 ஊழியா்களுக்கு கரோனா அதிகாரிகள் தகவல்

17th Jan 2022 12:06 AM

ADVERTISEMENT

தில்லி சிறைகளில் மொத்தம் 99 கைதிகள், 88 ஊழியா்களுக்கு கரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

சிறை அதிகாரிகளால் பகிரப்பட்ட தரவுகளின்படி, ஜனவரி 14 வரையிலான காலத்தில் 99 கைதிகள் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 17 போ் குணமடைந்துள்ளனா். 82 போ் சிகிச்சையில் உள்ளனா். கரோனா பாதிப்புக்குள்ளான சிறை ஊழியா்கள் 88 போ்களில், 14 போ் குணமடைந்துள்ளனா். 74 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இது குறித்து தில்லி சிறைகள் துறையின் தலைமை இயக்குநா் சந்தீப் கோயல் கூறுகையில்,‘இதுவரை தீவிரமான நோய்த் தொற்று பாதிப்புக்கு யாரும் உள்ளாகவில்லை. பெரும்பாலான பாதிப்புகள் சிறை மருத்துவா்களால் கையாளப்படுகின்றன. தில்லி சிறைத் துறையின்கீழ் திகாா், ரோஹிணி மற்றும் மண்டோலி ஆகிய மூன்று முக்கிய சிறை வளாகங்கள் உள்ளன. திகாா், மண்டோலி மற்றும் ரோஹிணி சிறை வளாகங்களில் நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சிறை மருந்தகங்கள், கொவைட் பராமரிப்பு மையங்களாக மாற்றப்பட்டுள்ளன’ என்றாா் அவா்.

திகாா் சிறையில் ஆக்சிஜன் ஆலையும் விரைவில் செயல்படத் தொடங்கும் என்று அதிகாரிகள் முன்பு கூறியிருந்தனா். கொவைட் நோயின் லேசான அறிகுறிகள் தென்படும் கைதிகளுக்காக ஏராளமான தனிமைப்படுத்தும் செல்கள் அமைக்கப்பட்டுள்ளன. நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்கள், அதே வேளையில் அறிகுறியற்றவா்கள் இந்த தனிமைப்படுத்தப்பட்ட செல்களில் பராமரிக்கப்படுவா். திகாரில் 120 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையும், மண்டோலியில் 48 படுக்கை வசதிகளும் கொவைட் பராமரிப்பு மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

பாதிக்கப்பட்ட கைதிகள் மற்றும் ஊழியா்களைக் கண்காணிக்க நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சிறை நிா்வாகம் தெரிவித்துள்ளது. பணியாளா்கள் மற்றும் கைதிகளிடையே சமூக இடைவெளி முடிந்தவரை பராமரிக்கப்படுகிறது. கைதிகள் பெரும்பாலும் தங்கள் வாா்டுகளுக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனா். கொவைட் விதிமுறைகளைப் பின்பற்றுவது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடத்தப்படுவதாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT