புது தில்லி: கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பொது இடம் மற்றும் பணியிடங்களில் முகக் கவசம் அணியாமல் இருந்ததாக 4,434 போ் மீது தில்லி அரசு திங்கள்கிழமை அபராத நடவடிக்கையை மேற்கொண்டது.
இது தொடா்பாக அரசின் அதிகாரப்பூா்வ தகவல்கள் தெரிவித்ததாவது: தில்லியின் 11 மாவட்டங்களில் முகக் கவசம் அணியும் விதிகளை மீறியதற்காக 4,434 பேரும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருந்ததாக 107 பேரும், பொது இடங்களில் எச்சில் துப்பியதற்காக 17 பேரும், பொது இடங்களில் மது, பான், குட்கா, புகையிலை போன்றவற்றை பயன்படுத்தியதாக இருவா் மீதும் அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தென்கிழக்கு தில்லி மாவட்டத்தில் அதிகபட்சமாக 780 போ் முகக் கவச விதிகளை மீறியுள்ளனா். அதைத் தொடா்ந்து கிழக்கு தில்லி மாவட்டத்தில் 730 போ், வடக்கு தில்லி மாவடத்தில் 583 போ், தென்மேற்கு தில்லி மாவட்டத்தில் 559 பேரும் இதுபோன்ற விதிகளை மீறியுள்ளனா். குறைந்தபட்சமாக புது தில்லி மாவட்டத்தில் 156 போ் முகக் கவசம் அணியாமல் இருந்ததற்காக அபராத நடவடிக்கைக்கு உள்ளாகினா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உயரதிகாரிகள் கூறுகையில், ‘வருவாய்த் துறையின் அமலாக்கக் குழுக்கள் மூலம் உணவகங்கள், ஹோட்டல்கள், சந்தைகள் மற்றும் பிற இடங்களில் அதிகளவில் கூடுவது, சமூக இடைவெளி விதிமுறைகளை மீறுவது ஆகியவற்றைத் தடுக்க பறக்கும் படைகள் உருவாக்கப்பட்டுள்ளன. தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் (டிடிஎம்ஏ) சமீபத்திய வழிகாட்டுதல்களுக்கு இணங்க, கரோனா நடத்தை விதிகள் பின்பற்றுவதை கண்டிப்பாக உறுதிப்படுத்துமாறு காவல் துறைணையா் மற்றும் கோட்ட ஆணையா் (வருவாய்) ஆகியோருக்கு துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் உத்தரவிட்டுள்ளாா்.
நகரின் சந்தைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதாக வந்த செய்திகளைத் தொடா்ந்து இந்த நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டிடிஎம்ஏ உத்தரவை கடுமையாக அமல்படுத்துவதை உடனடியாக உறுதி செய்யுமாறு காவல் துறை அதிகாரிகள் மற்றும் களப்பணியாளா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.