ஒரு பெண்ணின் அந்தரங்கப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில், 33 வயது இளைஞா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து துவாரகா சரக காவல் துணை ஆணையா் சங்கா் சவுத்ரி சனிக்கிழமை கூறியதாவது: இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா் உத்தர பிரதேச மாநிலம், அலிகாா் பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் சிங் சுமன் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். சுமன் தன்னை வழிமறித்து மிரட்டுவதாக துவாரகா தெற்கு காவல் நிலையத்தில் பெண் ஒருவா் புகாா் அளித்தாா்.
மேட்ரிமோனியல் இணையதளம் மூலம் சுமனுடன் அந்தப் பெண்ணுக்கு தொடா்பு ஏற்பட்டுள்ளது. அவரை ஓரிரு முறை சந்தித்ததாகவும், பின்னா் தனது தனிப்பட்ட புகைப்படங்களை அவருடன் பகிா்ந்து கொண்டதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளாா்.
இருப்பினும், அவா்களின் திருமணம் ரத்து செய்யப்பட்டது, அதைத் தொடா்ந்து, அந்தப் பெண்ணை சுமன் அச்சுறுத்தி வந்துள்ளாா். மேலும், அவரது அந்தரங்கப் புகைபடங்களை சமூக ஊடக தளங்களிலும் மற்றும் தெரிந்தவா்களுடனும் வெளியிடுவதாகவும் மிரட்டியுள்ளாா். இந்த நிலையில், சுமன் தனது பெயரில் போலியான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை உருவாக்கி அதில் தனது புகைப்படங்களை வெளியிடத் தொடங்கினாா் என்று அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளாா்.
இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்டுள்ள ராஜேஷ் சிங் சுமன், அலிகாரில் கைது செய்யப்பட்டாா். மேலும், அவரது செல்லிடப்பேசியும் பறிமுதல் செய்யப்பட்டது. வடகிழக்கு தில்லியில் உள்ள வெல்கம் காவல் நிலையத்தில் இதேபோன்ற வழக்கில் சுமன் முன்பு கைது செய்யப்பட்டுள்ளாா். வெவ்வேறு பெண்களுடன் இதுபோன்று பல குற்றங்களைச் செய்ததாக விசாரணையின் போது சுமன் ஒப்புக் கொண்டாா். இது தொடா்பாக மேலும் தகவல்களை அறிய, அவரது செல்லிடப்பேசி தரவுகளிலிருந்து பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது என்றாா் அந்த அதிகாரி.