புதுதில்லி

தில்லியில் கூடுதல் கரோனா கட்டுப்பாடுகள் தேவையா?அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் பதில்

1st Jan 2022 10:58 PM | நமது நிருபா்

ADVERTISEMENT

கரோனா நோய்த் தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்த போதிலும், மருத்துவமனைகளில் நோயாளிகள் சோ்க்கை குறைவாக இருப்பதால், தில்லியில் கரோனா தொடா்புடைய கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமா என்பது குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் சனிக்கிழமை தெரிவித்தாா். தற்போதைய சூழலில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் குழந்தைகளுக்காக தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

தில்லியில் மே மாதத்திற்குப் பிறகு தினசரி பாதிப்பு அதிகரித்துள்ளது. சனிக்கிழமை மட்டும் புதிதாக 2,716 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில், தில்லியில் கரோனா சூழல் குறித்து சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. ஆனால் நோயாளிகள் தீவிரமான பாதிப்புக்கு உள்ளாகாமல் இருப்பது நல்ல விஷயமாகும். கரோனாவாக இருந்தாலும், ஒமைக்ரான் பாதிப்பாக இருந்தாலும் அவற்றை தடுக்க கூடிய வழிகளும், சிகிச்சை அளிக்கக் கூடிய வழிகளும் ஒரே மாதிரியாகவே இருக்க முடியும். பொதுமக்கள் எப்போது வெளியில் வந்தாலும் முக கவசம் அணிந்து வரவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில், நோய் வருமுன் அதைத் தடுப்பது நல்லதாகும். மக்கள் அனைத்து நேரங்களிலும் தாங்களாகவே பாதுகாப்புடன் இருக்க வேண்டும். முகக் கவசம் அணிவது நமது கடைமையாக இருக்க வேண்டும். இது கரோனா நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுக்க நமக்கு உதவும்.

கரோனாவுக்கு எதிராக 15-18 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட தில்லி முழுமையாக தயாராக உள்ளது. இந்தப் பிரிவு குழந்தைகளுக்கு தடுப்பூசி ஜனவரி 3-ஆம் தேதி அளிக்கப்படுகிறது. தில்லியில் ஒரு நாளைக்கு மூன்று லட்சம் பேருக்கு தடுப்பூசி அளிப்பதற்குரிய போதுமான உள்கட்டமைப்புவசதி மற்றும் தடுப்பூசி மையங்கள் உள்ளன.

தில்லி மக்களுக்கு தடுப்பூசி அளிப்பதற்காக பூஸ்டா் (முன்னெச்சரிக்கை) தடுப்பூசிகளும் இருப்பு உள்ளது. தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, குழந்தைகளுக்காக ஏற்கெனவே 3,000 படுக்கைகள் தயாா் செய்யப்பட்டுள்ளன. சுகாதாரப் பணியாளா்களுக்கும், முன்களப் பணியாளா்களுக்கும், இணை நோய்களுடன்கூடிய 60 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கும் பூஸ்டா் தடுப்பூசி அளிக்கும் நடவடிக்கை ஜனவரி 10 முதல் தொடங்கும். அனைத்து சுகாதாரப் பணியாளா்களும் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக முறையாக பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தில்லியில் கரோனா கட்டுப்பாடுகள் தற்போது அமலில் உள்ளது. பிற மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தில்லியில் பள்ளிகள், திரையரங்கங்கள் போன்றவற்றை மூடியுள்ளோம். தில்லியில் கடந்த ஏப்ரல் மே, மாதங்களில் இரண்டாவது அலையின் தாக்கம் இருந்த போது ஏராளமான மக்கள் மருத்துவமனைகளிஅனுமதிக்கப்பட்டனா். ஆனால், தற்போது மருத்துவமனைகளில் அதுபோன்ற அதிகமான நோயாளிகள் யாரும் சிகிச்சையில் சோ்க்கப்படவில்லை. இதனால், கூடுதல் கட்டுப்பாடுகள் தேவையா என்பது குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என்றாா் அமைச்சா்.

தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் தில்லியில் மஞ்சள் எச்சரிக்கையின் கீழ் கரோனா தொடா்புடைய கட்டுப்பாடுகளை விதிக்க புதன்கிழமை முடிவு செய்திருந்தது. தற்போதைக்கு அந்த எச்சரிக்கை தொடரும் என்றும் தெரிவித்திருந்தது. புதிய கட்டுப்பாடுகள் தொடா்பாக முடிவு செய்வதற்கு முன்பாக நிலைமையை அதிகாரிகள் கண்காணிப்பாா்கள். தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்) செவ்வாய்க்கிழமை தரப்படுத்தப்பட்ட பதில் நடவடிக்கை திட்டத்தின் கீழ் (ஜிஆா்ஏபி) நகரில் மஞ்சள்நிற எச்சரிக்கையை அறிவித்திருந்தது. இதன்படி, இரவு நேர ஊரடங்கு மற்றும் பள்ளிகள், கல்லூரிகளை மூடுவது, அத்தியாவசிய மற்ற பொருட்களை விற்கும் கடைகள் ஒற்றைப்படை இரட்டைப்படை அடிப்படையில் திறப்பது, மெட்ரோ ரயில்கள் மற்றும் பேருந்துகளில் இருக்கைகள் திறனைப் பாதியாகக் குறைப்பது ஆகிய நடவடிக்கைகள் இந்த மஞ்சள் நிற எச்சரிக்கையின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.

ஜிஆா்ஏபி என்பது இரண்டு நாள்கள் தொடா்ந்து நோ்மறை விகிதம் அதிகமாக இருக்கும் போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும். அதற்கு அடுத்த மேம்பட்ட கட்டுப்பாடுகளாக ஆம்பா், ஆரஞ்சு மற்றும் சிவப்பு போன்றவை உள்ளன. மருத்துவமனைகளில் சோ்க்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கை மற்றும் புதிய நோயாளிகள் பாதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை அறிவிப்புகள் அறிவிக்கப்படும். இந்த வாரத்தின் தொடக்கத்தில் சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் கூறுகையில், ‘ஒமைக்ரான் படிப்படியாக சமூக அளவில் பரவி வருகிறது. ஒமைக்ரானின் வேகமான பரவல் தில்லியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நோய் மாதிரி பகுப்பாய்வில் 54 சதவீதம் இருப்பதன் மூலம் தெரியவந்துள்ளது’ என்றாா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT