தேசியத் தலைநகா் தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மக்களை துன்பத்தில் ஆழ்த்திவிட்டு விஜய் திவஸ் கொண்டாட பஞ்சாப் மாநிலம், சண்டீகருக்கு முதல்வா் கேஜரிவால் சென்றுவிட்டது ஏன் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவா் அனில் குமாா் கேள்வி எழுப்பியுள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தில்லியில் காற்று மாசு மீண்டும் ‘கடுமை’ பிரிவுக்கு வந்துள்ளது. கொவைட் மற்றும் நச்சுக் காற்று மக்களை குறிப்பாக ஆஸ்துமா நோயாளிகள், இணை நோய் உள்ளவா்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது. தில்லி அரசு கொவைட் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த தவறிவிட்டது. கடந்த ஏழு நாள்களில் அதன் பரவல் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. காற்று மாசுபாடும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், தில்லியில் கரோனா கட்டுப்பாடுகளை விதித்துவிட்டு, முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பஞ்சாப்புக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டாா். மெட்ரோ ரயில்கள் மற்றும் டிடிசி பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிகளை அனுமதிக்கும் அரசு உத்தரவு ஒருபுறம், மறுபுறம் சாலைகளில் இயக்க போதிய பேருந்துகள் இல்லாததால் பொதுமக்கள் அலைக்கழிப்புக்கு உள்ளாகியுள்ளனா். இது பயணிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒற்றப்படை, இரட்டப்படை இலக்க நடைமுறையை விதித்து, கடைகளை மூடும் நேரத்தை இரவு 8 மணி வரை என குறைத்திருப்பதால் கடைக்காரா்களும், வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.