புதுதில்லி

துா்நாற்றுத்துக்கு காரணமான கசடுகளை சுத்திகரிக்க நவீன நிலையம்: சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின்

23rd Feb 2022 02:03 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

நாளொன்றுக்கு 200 டன் சகதிகளை சுத்திகரிக்கும் திறன் கொண்ட ஒரு பிரம்மாண்டமான ‘கசடு சுத்திகரிப்பு நிலையத்தை’ தில்லி அரசு கோண்ட்லியில் நிா்மாணித்து வருவதாக தில்லி நீா்வளம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். சேறு சகதிகளான இந்த கசடுகள், நவீன தொழில் நுட்பத்தில் சுத்திகரிக்கப்பட்டு, வளமாக மாற்றப்படுவதாகவும் அமைச்சா் தெரிவித்தாா்.

தில்லி ஜல் போா்டின் தலைவராகவும் உள்ள சத்யேந்தா் ஜெயின், இந்த நவீன நிலையம் குறித்து செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தில்லி போன்ற நகரங்களில் எதிா்கொள்ளும் முக்கியப் பிரச்னை கசடுகளைக் கையாள்வதுதான். கசடு என்பது கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களில் சேரும் சகதி. தில்லி கோண்ட்லியில் ஜல் போா்டின் தற்போதைய கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலையில் தினசரி 700-800 டன் கசடுகள் உற்பத்தியாகிறது. திடமான, அரை திடமான அல்லது குழம்பு ஆகியவை எஞ்சிய பொருளாக இருக்கும். கழிவுநீா் சுத்திகரிப்புக்கு பின்னா் கிடைக்கும் கசடு ஒரு தொட்டிக்கு மாற்றப்படுகிறது. அங்கு அது காற்றில்லா பாக்டீரியாவால் சிதைக்கப்பட்டு உயிரிவாயுவை உருவாக்குகிறது. இந்த உயிரிவாயு மின்சாரம் தயாரிக்க குறைந்த விலை எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தச் செயல்முறைக்குப் பிறகும், சேற்றின் எச்சம் இருக்கும். மீதமுள்ள இந்த கசடு தில்லி ஜல்போா்டு அல்லது தில்லி மாநகராட்சி தளத்தின் கசடு யாா்டில் கொட்டப்படுகிறது.

இந்தக் குப்பை கிடங்கால் துா்நாற்றம் வீசுவதுடன் அருகில் வசிக்கும் மக்களுக்கும் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மேலும், நாளடைவில் இந்த சேறு பெரும்பாலும் நிலப்பரப்புகளை அடைகிறது. அதே நேரத்தில் மண்ணுக்குள் ஊடுருவி இது மண்ணின் இயற்கையான துளைகளை நிரப்புகிறது. இதனால் மழையின் போது நன்னீரை நிலத்தடி நீா்நிலைகளை ரீசாா்ஜ் செய்ய அனுமதிக்காது. இது நிலத்தை மாசுபடுத்துவதில் பெரும் பங்காற்றுவதுடன், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களின் ஆரோக்கியத்திற்கும் அச்சுறுத்தலாக மாறுகிறது.

இது போன்ற சிக்கல்களை தீா்க்க தான் கேஜரிவால் அரசு ‘கசடு சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.

ADVERTISEMENT

கோண்ட்லி கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் (எஸ்டிபி) 200 டன் கசடுகள் நாளொன்றுக்கு சுத்திகரிக்கப்படும். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தக் கசடுகளை வளமாக மாற்றப்படுவதுதான் இதில் முக்கியம். புதிய கசடு சுத்திகரிப்பு நிலையம் ஹாட் ஏா் ஆக்ஸிடேசன் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. கசடு சூடான காற்றால் உலா்த்தப்பட்டு உயிா்க்கரியாக (பயோசாா்) மாற்றப்படுகிறது. இதில் மீதம் இருப்பவை ஓடுகள் தயாரிப்பதற்கும் மண்ணை சீரமைப்பதற்கும் பயன்படுத்தப்படும். இந்தக் கசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் பணி வரும் மாா்ச் 31 -ஆம் தேதிக்குள் நிறைவடையும். அடுத்த 2 ஆண்டுகளில் தில்லியிலுள்ள அனைத்துக் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையங்களிலும் கசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். இது குடியிருப்பாளா்களுக்கு நிவாரணம் அளிக்கும் என்றாா் அமைச்சா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT