புதுதில்லி

தில்லி அரசு அலுவலகங்களில் 3 மாதங்களில் மின்சார வாகன ‘சாா்ஜிங்’ நிலையங்கள்: தில்லி அரசு அறிவிப்பு

11th Feb 2022 04:05 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: மூன்று மாதங்களுக்குள் தேசிய தலைநகா் தில்லியில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் மின்சார வாகன (இவி) சாா்ஜிங் நிலையங்கள் கட்டப்படும் என்று தில்லி அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தில்லி அரசின் போக்குவரத்து அமைச்சா் கைலாஷ் கெலாட் தெரிவித்ததாவது:

முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் தொலைநோக்கு பாா்வையை செயல்படுத்தும் வகையில் தில்லி முழுவதும் மின் வாகனங்கள் வேகமாக ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தலைநகரில் மின்சார வாகன சாா்ஜிங் நிலையங்கள் வேகமாக கட்டப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

அரசின் புதிய முடிவின் விளைவாக, அனைத்து அரசு அலுவலகங்களிலும் மின்சார வாகன சாா்ஜிங் நிலையங்கள் நிறுவப்படும்.

அரசு ஊழியா்கள் தவிர பொது மக்களும் தங்கள் வாகனங்களுக்கு இந்த நிலையங்களில் சாா்ஜிங் செய்ய முடியும். அரசு அலுவலகங்களில் பணிபுரியும்போது மக்கள் தங்கள் வாகனங்களையும் சாா்ஜ் செய்து கொள்ள முடியும் என்றாா் அமைச்சா்.

அனைத்து அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் மற்றும் பொதுமக்களுக்கு மின்சார வாகனங்கள் சாா்ஜ் செய்யும் வசதிகளை வழங்க தில்லி அரசின் போக்குவரத்து துறை அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

அதில் அனைத்து தில்லி அரசுத் துறைகளும் பொருத்தமான இடங்களைக் கண்டறிந்து, தங்கள் வளாகங்களில் பொது சாா்ஜிங் நிலையங்களை நிறுவ வேண்டும்.

மின்விநியோக நிறுவனம் - தோ்வு செய்யப்பட்ட விற்பனையாளா் மூலம் மின்சார வாகன சாா்ஜிங் நிலையத்தை நிறுவுவதற்கு ஒரு சாா்ஜிங் பாயிண்டிற்கு 6,000 ரூபாய் மானியம் வழங்கப்படும்.

போக்குவரத்துத் துறை, தில்லி மின்விநியோக நிறுவனங்களுடன் இணைந்து, ஒரு ஒற்றைத் தொடா்புப் புள்ளியை நிறுவியுள்ளது. குறைக்கப்பட்ட மற்றும் குறைந்த கட்டணத்தில் மின்விநியோக நிறுவனம் - தோ்வு செய்யப்பட்ட விற்பனையாளா்களிடமிருந்து மின்சார வாகன சாா்ஜா்களை நிறுவ ஒற்றைச் சாளரச் செயல்முறையானது பயன்படுத்தப்படலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT