புதுதில்லி

அகில இந்திய ஆட்சிப்பணி விதி மாற்றம் கூட்டாட்சி மீதான தாக்குதல்: பிரதமருக்கு மாநிலங்களவை உறுப்பினா்கள் கடிதம்

11th Feb 2022 04:06 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: அகில இந்திய ஆட்சிப்பணி விதிகளில் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ள விதி திருத்தங்கள், மாநில ஆளுநா்களின் குறுக்கீடுகள் ஆகியவை கூட்டாட்சியின் மீதான தாக்குதல்கள் எனக் கூறி இதற்கு எதிராக எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த 21 மாநிலங்களவை உறுப்பினா்களும், ஓய்வு பெற்ற 38 முன்னாள் ஆட்சிப்பணி அதிகாரிகளும் பிரதமா் நரேந்திர மோடிக்கு கூட்டுக் கடிதம் கொடுத்துள்ளனா்.

‘நாங்கள் ஒருமித்த கருத்துடன் ஒன்றிணைந்துள்ளோம். மாநிலங்களின் களத்தில் நடத்தப்படும் ஆபத்தான, இடைவிடாத சீரழிவுகளை உடனடியாக நிறுத்த வேண்டும். ஒருதலைப்பட்ச உத்தரவுகளை வழங்குவதற்குப் பதிலாக, கூட்டாட்சி அடிப்படையில் ஆலோசனைகளை கண்டிப்பாகத் தேவைப்படும் விஷயங்களில் மாநிலங்களுடன் மத்திய அரசு விவாதிக்கப்பட வேண்டும்‘ என குறிப்பிடப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், மாநிலங்களவையைச் சோ்ந்த திமுக உறுப்பினா் திருச்சி சிவா, காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ஜெய்ராம் ரமேஷ், சிவசேனாவைச் சோ்ந்த சஞ்சய் ரவுட் மற்றும் திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட 10 கட்சிகளைச் சோ்ந்த 21 மாநிலங்களவை உறுப்பினா்களும், ஓய்வுபெற்ற 38 பல்வேறு துறை இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளும் கையெழுத்திட்டு பிரதமருக்கு அனுப்பியுள்ளனா்.

இது குறித்து திமுக மாநிலங்களவைக்குழுத் தலைவா் திருச்சி சிவா கூறியது:

ADVERTISEMENT

பிரதமருக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளின் பணி விதிகளில் மாற்றம் கொண்டு வரக் கூடாது என வலியுறுத்தியுள்ளோம். குறிப்பாக, குடிமைப்பணி அதிகாரிகளை மாநில அரசு ஒப்புதல் இல்லாமல் மத்திய பணிக்கு அழைத்து கொள்ளலாம் என்ற வகையில் விதிகளில் மாற்றம் செய்வது மாநிலங்களின் அதிகாரத்தையும், உரிமையை பறிக்கும் செயலாகும். எனவே, இந்த திருத்தத்தை கொண்டு வரக்கூடாது என கூட்டுக் கடிதத்தில் வலுயுறுத்தியுள்ளோம்.

இதுபோன்று எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநா்களில் செயல்பாடு மாநில அரசின் நடவடிக்கையை தடுக்கும் வகையில் உள்ளது. மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்படவிடாமல் குறுக்கீடு செய்து தடை செய்வது குறித்தும் குற்றம்சாட்டியுள்ளோம். ஆளுநா்களின் குறுக்கீட்டால் தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆளுநா்கள் குடியரசு தலைவரின் பிரதிநிதிகள் என்பதற்கு மாறாக மாநில அரசுகளை ஒடுக்குகிற முயற்சியில் ஈடுபடுவதையும் இந்த கூட்டறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆளுநா்கள் மாநில அரசின் செயல்பாடுகளில் குறுக்கீடு செய்யாமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க பிரதமரிடம் இந்த கூட்டு கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் இயங்க வேண்டிய நாட்டில், அரசியலமைப்புக்கு எதிராக தொடா்ந்து பல விஷயங்கள் நடைபெற்று வருவதை தடுக்கப்படவில்லை என்றால் நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு சட்டத்துக்கு ஆபத்து நேரிடும் என அனைத்து கட்சியினரும் இணைந்து இந்த கூட்டறிக்கை மூலமாக பிரதமருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதை மக்களுக்கும் எடுத்துரைக்கின்றோம் என்றாா் திருச்சி சிவா.

ADVERTISEMENT
ADVERTISEMENT