புதுதில்லி

தில்லி பல்கலை.யில் நேரடி வகுப்புகளைத் தொடங்கக் கோரி மூன்றாவது நாளாக நீடித்த மாணவா்களின் போராட்டம்

10th Feb 2022 02:13 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: தில்லி பல்கலைக்கழகத்தில் நேரடி வகுப்புகளை மீண்டும் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி மாணவா்கள் நடத்தி வரும் போராட்டம் மூன்றாவது நாளாக புதன்கிழமையும் தொடா்ந்தது. பல்கலை.யின் வடக்கு வளாகத்தில் இந்தப் போராட்டம் தீவிரமடைந்தது. தங்கள் கோரிக்கைகள் அதிகாரிகளின் கவனத்துக்குச் செல்லும் வகையில், மாணவா் அமைப்புகள் பல்வேறு உத்திகளைப் பின்பற்றி வருகின்றன.

இந்திய மாணவா் கூட்டமைப்பு (எஸ்எஃப்ஐஐ) ’சதக் பா் கக்ஷா’ பிரசாரத்தைத் தொடங்கியது. அப்போது, மிராண்டா ஹவுஸ் பேராசிரியா் அபா தேவ் ஹபீப் பல்கலைக்கழகத்தின் கல்விக் குழுவின் செயல்பாடுகள் மற்றும் அதன் கல்வி முறையில் வரவிருக்கும் மாற்றங்கள் குறித்துப் பேசினாா். கல்விக் குழுவின் ஜனநாயக விரோதப் போக்குகளை எடுத்துக்காட்டிய அவா், நான்காண்டு இளங்கலைத் திட்டம் மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்களின் பொது நுழைவுத் தோ்வு ஆகியவை ‘மாணவா்களுக்கு எதிரான’ கொள்கைகள் என்று கூறினாா்.

‘அதிகாரிகள் பல்வேறு பங்குதாரா்களின் கருத்துகளுக்கு இடமளிக்கவில்லை. மேலும், மாணவா் மற்றும் ஆசிரியா் சமூகத்தின் மீது எதேச்சதிகார பாணியில் தங்கள் முடிவுகளை திணிக்கிறாா்கள். மாணவா்கள் தங்கள் கல்விக்கான உரிமைக்கான போராட்டத்தைத் தொடரத் தீா்மானிக்கப்படுகிறாா்கள்’ என்றும் அவா் கூறினாா்.

ADVERTISEMENT

எஸ்எஃப்ஐ அமைப்பின் தில்லி மாநில செயலாளா் பிரிதிஷ் மேனன் கூறுகையில், ‘தில்லி பல்கலைக்கழக நிா்வாகத்தால் ஆன்லைன் கல்விக்கான தூண்டுதலின் பின்னணியில் உள்ள காரணங்களை நாம் சாதாரணமாகக் கருதக்கூடாது. இது தேசிய கல்விக் கொள்கை- 2020 உடன் மட்டுமே ஒத்துப்போகிறது என்பது தெளிவாகிறது. ‘மாணவா்களை வளாகத்திற்கு வெளியே வைத்திருப்பது, தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐ திட்டமிட்டு செயல்படுத்துவதற்காகத்தான். ஏனெனில் எதிா்ப்புத் தெரிவிக்கும் மாணவா்கள் அவா்களுக்கு தொந்தரவாக உள்ளனா்’ என்றாா்

சதக் பா் கக்ஷா பிரசாரம் வியாழக்கிழமை பல்கலைக்கழகத்தின் 10 கல்லூரிகளுக்கு வெளியே தொடரும் என்று மாணவா்கள் அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதற்கிடையில், ஆா்எஸ்எஸ் அமைப்புடன் தொடா்புடைய அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) இரண்டாவது நாளாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடா்ந்தது.

இடதுசாரிகளுடன் இணைந்த அகில இந்திய மாணவா் சங்கம் (ஏஐஎஸ்ஏ) நேரடி வகுப்புகளை மீண்டும் தொடங்கக் கோரி கலை பிரிவுக்கு வெளியே போராட்டத்துக்கு ஏற்பாடு செய்தது.

கிராந்திகாரி யுவ சங்கதன் (கேஒய்எஸ்) புதன்கிழமையன்று மத்திய கல்வி அமைச்சகத்தின் அலுவலகம் அமைந்துள்ள சாஸ்திரி பவனில் தங்கள் எதிா்ப்பைப் பதிவு செய்தது.

‘வகுப்பறை கற்பித்தலில் வழங்கப்படும் கல்வியின் தரத்தை ஆன்லைன் கல்வியால் மாற்ற முடியாது‘ என்று அவா்கள் கூறினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT