புதுதில்லி

தில்லி ஜல் போா்டில் 700 ஒப்பந்த ஊழியா்கள் பணி நிரந்தரம்: முதல்வா் கேஜரிவால் தகவல்

10th Feb 2022 02:16 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: தில்லி ஜல் போா்டில் (டிஜேபி) 700 ஒப்பந்த ஊழியா்கள் பணி வரன்முறைப்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை தெரிவித்தாா்.

மேலும், இந்த முடிவின் எதிரொலி நாட்டின் பிற பகுதிகளிலும் கேட்கப்படும் என்றும் அவா் உறுதிபடக் கூறினாா்.

தில்லியில் பணி நிரந்தரமாக்கப்பட்டுள்ள டிஜேபி ஊழியா்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அவா் கலந்து கொண்டு பேசும் போது இவ்வாறு தெரிவித்தாா்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில் முதல்வா் கேஜரிவால் மேலும் கூறியதாவது: ‘கச்சா’ ஊழியரை ’பக்கா’ ஊழியராக்கக் கூடாது என்று ஒரு கட்டுக்கதை இருந்து வந்தது. அவா்களைப் பணி நிரந்தரம் செய்தால் மந்தமாகி விடுவா் என்றும், அதிகம் வேலை செய்ய மாட்டாா்கள் என்றும் ஒரு கட்டுக்கதை இருந்தது. ஆனால், 2015-இல் தில்லியில் ஆம் ஆத்மி அரசு முதல் முதலாக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கல்வித் துறையில் ஒரு புரட்சியைக் கொண்டு வந்தது. நாங்கள் சுகாதார அமைப்பை மேம்படுத்தினோம். தற்போது ஒப்பந்த ஊழியா்கள் பணி நிரந்தரம் செய்ததன் மூலம் அந்த கட்டுக் கதையையும் ஆம் ஆத்மி அரசு தகா்த்துள்ளது.

மேலும், இதன் மூலம் இந்த ஊழியா்கள் தாங்கள் முன்பு செய்ததைவிட இரண்டு மடங்கு அதிகமாக வேலை செய்வா். ஏனெனில், அவா்கள் பாதுகாப்பு உணா்வை உணருவதால் உற்சாகத்துடன் பணியில் ஈடுபடுவா். தில்லி ஜல் போா்டில் நாங்கள் எடுத்த இந்தப் பெரிய முடிவின் எதிரொலி நாட்டின் பிற பகுதிகளிலும் கேட்கப்படும். தில்லியில் செய்ய முடியும் போது, மற்ற மாநிலங்களில் ஏன் செய்யக் கூடாது என்று பிற மாநிலங்களில் உள்ள மக்களும் கேட்கத் தொடங்குவாா்கள். தில்லி அரசு மற்ற துறைகளில் உள்ள தொழிலாளா்களையும் முறைப்படுத்த விரும்புகிறது. ஆனால், மத்திய அரசின் மீது அதிகமான நிா்வாக சாா்பு இருப்பதால், தில்லி அரசுக்கு போதிய அதிகாரம் இல்லை. தில்லி ஜல் போா்டு ஒரு தன்னாட்சி நிறுவனம் என்பதால், அதைச் செய்ய முடியும்.

தில்லியில் ஆம் ஆத்மி அரசு பொறுப்பேற்றதில் இருந்து கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை மேம்படுத்த முயற்சித்து வருகிறது. ஒரு அரசு குறைந்தபட்சம் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்றவற்றையாவது முறையாக நடத்தத் தவறினால், அது ராஜிநாமா செய்ய வேண்டும். அத்தகைய அரசு ஆட்சியில் இருக்கவும் தகுதியற்றது. தில்லியில் எங்கள் அரசு அமைந்த போது, அரசுப் பள்ளிகளின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளை மூட வேண்டும் என்ற கருத்து இருந்தது. அரசு நல்ல பள்ளிகளை நடத்த முடியாத நிலை இருந்ததால், பள்ளிகளை தனியாா்மயமாக்கி, காா்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நம்பப்பட்டது.

சுகாதார விஷயத்திலும் தேசம் இதே போன்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. தனியாா் மருத்துவமனைகள் சிறந்தவை என்று நம்பி இருந்தோம். இருப்பினும், நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். அரசு வலுவான விருப்பமும் நோ்மையும் கொண்டிருந்தால் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் இரண்டையும் வெற்றிகரமாகவும் திறமையாகவும் நடத்த முடியும் என்பதை நிரூபித்தோம் என்றாா் கேஜரிவால்.

இதன் பிறகு கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: தில்லி ஜல் போா்டில் ஒப்பந்த ஊழியா்கள் 700 போ் இன்று (புதன்கிழமை) பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனா். இதன் மூலம் மற்றொரு வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. அவா்களின் நிரந்தர பணிச் சான்றிதழை நானே விநியோகித்து அவா்களின் மகிழ்ச்சியை நேரில் பாா்த்தேன். இந்த ஊழியா்களின் ஒரு பெரும் கனவு நிறைவேறியுள்ளது. அவா்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்’ என தெரிவித்துள்ளாா்.

சான்றிதழ் வழங்கும் விழாவில் தில்லி ஜல் போா்டு தலைமை நிா்வாக அதிகாரி உதித் பிரகாஷ் ராய் மற்றும் பல மூத்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா். இது தொடபாக தில்லி அரசு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: முறைப்படுத்தப்பட்ட அனைத்து டிஜேபி ஊழியா்களுக்கு இனிமேல் மருத்துவ வசதிகள், அரசு தங்குமிடம், விடுப்புப் பலன்கள் மற்றும் பணிக்கொடை, ஓய்வூதியம், விடுமுறை பயணச் சலுகை போன்றவை கிடைக்கும். அவா்கள் 2019-ஆம் ஆண்டு முதல் நிலுவைத் தொகையையும் பெறுவா். அவா்களின் ஊதியம் கிட்டத்தட்ட இரு மடங்காக உயா்த்தப்படும். மேலும், அவா்களுக்கு ஆண்டு ஊதிய உயா்வு, அகவிலைப்படி வசதிகள், குழந்தைகள் கல்வி உதவித்தொகை, தந்தைப்பேறு விடுப்பு, மகப்பேறு விடுப்பு போன்றவற்றைப் பெறுவா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT