பத்து ரூபாய் நாணயத்தை பொதுமக்களிடமிருந்து பெறுவதற்கு வணிகர்கள் எந்தக் காரணம் கொண்டும் மறுக்கக் கூடாது என்று மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சௌதரி மாநிலங்களவையில் தெரிவித்தார்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பத்து ரூபாய் நாணயங்கள் போலியானவை எனக் கருதி ஏற்றுக்கொள்ள மறுக்கப்படுகிறதா என்பது தொடர்பாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் ஏ.விஜயகுமார் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளித்து அமைச்சர் பங்கஜ் சௌதரி கூறியிருப்பதாவது: ரிசர்வ் வங்கியால் பத்து ரூபாய் நாணயம் பல்வேறு அளவுகள், கருத்து வடிவமைப்புகளில் அச்சிட்டு புழக்கத்துக்கு வெளியிடப்பட்டுள்ளது. அனைத்துப் பணப் பரிவர்த்தனைகளிலும் சட்டபூர்வமான தொகையைச் செலுத்தும் போது இந்த நாணயத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த நாணயங்களை ஏற்றுக்கொள்ள மறுத்தது தொடர்பான எந்தப் புகார்களும் பதிவு செய்யப்படவில்லை என்றார்.