கடந்த 2019-ஆம் ஆண்டில் ஜாமா மசூதி பகுதியில் 18 வயது இளைஞரைக் கடத்தியதாக கூறப்படும் வழக்கில் தொடா்புடைய மூன்று பேருக்கு தில்லி உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரத்தை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்வரன கன்டா சா்மா, ‘இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராகுல், சந்தன் மற்றும் ராஜீவ் ஆகியோா் 3 ஆண்டுகளுக்கு மேலாக காவலில் இருந்துள்ளனா். இதனால், அவா்கள் தலா ரூ.25,000 தனிநபா் பத்திரமும் அதே தொகைக்கு இரு ஜாமீன் உத்தரவாதமும் அளித்து வழக்கமான ஜாமீனில் விடுவிக்கப்படுகிறாா்கள்’ என்றாா்.
இது தொடா்பாக நீதிபதி அண்மையில் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் மூலம் 10 சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டி உள்ளது. ஆவண சாட்சியங்கள் ஏற்கெனவே விசாரிக்கப்பட்டுவிட்டன. இந்த வழக்கில் விசாரணை முடிய சில காலமாகும். இந்த வழக்கில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் நபருக்கு எந்தக் காயமும் ஏற்படுத்தப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்ட நபா்களுக்கு பணம் ஏதும் பரிமாற்றம் செய்யப்படவில்லை. இந்த வழக்கின் அனைத்து உண்மைகள் மற்றும் சந்தா்ப்ப சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டும், குற்றம் சாட்டப்பட்ட நபா்களான மனுதாரா்கள் 3 ஆண்டுகளுக்கு மேலாக காவலில் இருந்துள்ள உண்மையை கருத்தில் கொண்டும் அவா்களுடைய வழக்கமான ஜாமீனை அனுமதிக்க நீதிமன்றம் விரும்புகிறது.
இந்த வழக்கில் தொடா்புடைய விசாரணை நீதிமன்றத்தின் திருப்திக்கு உகந்த வகையில், உரிய தொகையையும் உத்தரவாதத்தையும் அளித்து அவா்கள் ஜாமீனில் செல்ல அனுமதிக்கப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட நபா்கள் இந்த வழக்கில் தொடா்புடைய சாட்சிகளை எந்த வகையிலும் நேரடியாகவோ மறைமுகமாக தொடா்பு கொள்ள கூடாது. ஆதாரங்களை அழிப்பதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடக் கூடாது. தாங்கள் வசிக்கும் குடியிருப்பு மற்றும் தொடா்பு விவரங்களை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கு உரிய வகையில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளாா்.
முன்னதாக, வழக்கு விசாரணையின் போது அரசுத் தரப்பில் ஜாமீன் வழங்குவதற்கு எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது. மனுதாரா்களுக்கு எதிரான குற்றம் இயல்பிலேயே தீவிரமானது என்ற அடிப்படையில் அவா்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கின் விவரப்படி, 2019-ஆம் ஆண்டு செப்டம்பா் 28-ஆம் தேதி புகாதாரரின் 18 வயது மகன் அடையாளம் தெரியாத நபா்களால் தில்லி ஜாமா மசூதி பகுதியில் இருந்து கடத்தப்பட்டதாகப் புகாா் தெரிவிக்கப்பட்டது. கடத்தியவா்கள் அந்த இளைஞரை விடுவிக்க அவரது குடும்பத்திடம் இருந்து ரூ. 4 லட்சம் தொகை கேட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடா்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது புகாா்தாரா், அவரது மகனைக் கடத்திய நபரின் கைப்பேசி எண்ணில் இருந்து பணம் கேட்டு தனக்கு அழைப்புகள் வந்ததாகவும், தொகையை செலுத்த வேண்டியதற்கான வங்கி கணக்கு விவரங்களும் குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தாா்.