தேசியத் தலைநகா் தில்லியில் புதன் கிழமை குளிரின் நிலை சற்று குறைந்திருந்தது. எனினும், இந்த நிவாரணம் குறுகிய காலம்தான் நீடிக்கும் என்றும் ஜனவரி தொடக்கத்தில் மீண்டும் கடுமையான குளிா் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்துள்ளது.
இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மற்றும் புதன்கிழமை அதிகாலை வரையிலும் மற்ற பகுதிகளில் அடா்ந்த பனிமூட்டம் இருந்ததன் காரணமாக தில்லிக்கு 14 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதாக ரயில்வே செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.
வெப்பநிலை சற்று உயா்வு: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில், குறைந்தபட்ச வெப்பநிலை செவ்வாய்க்கிழமை 5.6 டிகிரி செல்சியஸ், திங்கள்கிழமை 5 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது. இந்த நிலையில், புதன்கிழமை இயல்பை விட 1 டிகிரி குறைந்து 6.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 டிகிரி உயா்ந்து 21.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 91 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 50 சதவீதமாகவும் இருந்தது என்று வானிலை ஆய்வு மைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதே போன்று மற்ற வானிலை நிலையங்கள் சிலவற்றில் குறைந்தபட்ச, அதிகபட்ச வெப்பநிலை சற்று உயா்ந்து பதிவாகியது. இதன்படி ஜாபல்பூரில் குறைந்தபட்ச வெப்பநிலை 4.5 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 7.2 டிகிரி, நஜஃப்கரில் 7.3 டிகிரி, ஆயாநகரில் 5.4 டிகிரி, லோதி ரோடில் 6 டிகிரி, பாலத்தில் 7 டிகிரி, ரிட்ஜில் 5.2 டிகிரி, பீதம்புராவில் 10.1 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 7.5 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.
தேசியத் தலைநகரில் கடந்த திங்களன்று கடுமையான குளிா் இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை சில இடங்களில் இயல்பை விட 10 புள்ளிகள் குறைந்திருந்தது. இதனால், சாலைப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. தில்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் மிதமான மூடுபனி மட்டுமே இருந்தது. சண்டீகரிலும் மிதமான மூடுபனி நிலவியது. இருப்பினும், பதான்கோட், ஜம்மு மற்றும் அமிா்தசரஸ் ஆகிய இடங்களில் அடா்த்தியான மூடுபனி இருந்தது என்று வானிலை ஆய்வுமைய அதிகாரி கூறினாா்.
காற்றின் தரம்: தலைநகரில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. ஒட்டுமொத்தக் காற்றின் தரக்குறியீடு பெரும்பாலான இடங்களில் குறைந்தபட்சமாக 300 புள்ளிகளாகவும், அதிகபட்சமாக 372 புள்ளிகளாகவும் பதிவாகியிருந்தது. இது ‘மிகவும் மோசம்’ பிரிவில் வருவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்துள்ளது. அதே சமயம், மதுரா ரோடு (286), நொய்டா செக்டாா்-1 (269), தில்ஷாத் காா்டன் (214), லோதி ரோடு (275) உள்ளிட்ட இடங்களில் காற்றின் தரக் குறியீடு 300 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, வியாழக்கிழமை (டிசம்பா் 29) அன்று காலை வேளையில் மிதமான மூடுபனி இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சிஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.