புதுதில்லி

தலைநகரில் வெப்பநிலை மேலும் சரிவு! காற்றின் தரத்தில் பின்னடைவு

18th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

தேசியத் தலைநகா் தில்லியில் சனிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை மற்றும் அதிகபட்ச வெப்பநிலை மேலும் குறைந்தது. அதே சமயம், காற்றின் தரம் பின்னடைவைச் சந்தித்து பெரும்பாலான இடங்களில் ‘மோசம்’ பிரிவில் நீடித்தது.

இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வெப்பம் சற்று அதிகரித்து தினமும் 8 டிகிரி செல்சியஸுக்கு மேலே பதிவாகி வந்தது. இந்த நிலையில், அடுத்த மூன்று நாள்களில் குறைந்தபட்ச வெப்பநி 7 டிகிரிக்கு கீழே குறைய வாய்ப்புள்ளதாக ஸ்கைமெட் வானிலையின் துணைத் தலைவா் (வானிலையியல் மற்றும் காலநிலை மாற்றம்) மகேஷ் பலாவத் தெரிவித்திருந்தாா். அதன்படி, தலைநகரில் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது.

வெப்பநிலை: இந்த நிலையில் தில்லிக்கான் பிரதிநித்துவத் தரவுகளை வழங்கிவரும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வியாழக்கிழமை முதல் குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரிக்கு கீழே குறைந்து பதிவாகியது. இந்த நிலையில், சனிக்கிழமை காலை குறைந்தபட்ச வெப்பநிலை மேலும் குறைந்து 6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையிலிருந்து 2 டிகிரி குறைந்து 21.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 99 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 68 சதவீதமாகவும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று, மற்ற வானிலை நிலையங்களிலும் குறைந்தபட்ச வெப்பநிலை சற்று குறைந்தே பதிவாகியிருந்தது. ஜாஃபா்பூரில் குறைந்தபட்ச வெப்பநிலை 6.9 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 6.2 டிகிரி, நஜஃப்கரில் 9.5 டிகிரி, ஆயாநகரில் 7.6 டிகிரி, லோதி ரோடில் 6.2 டிகிரி, பாலத்தில் 9 டிகிரி, ரிட்ஜில் 6.4 டிகிரி, பீதம்புராவில் 11.9 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 9 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.

ADVERTISEMENT

காற்றின் தரம்: தலைநகரில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் சனிக்கிழமை சற்று பின்னடைவைச் சந்தித்து ‘மோசம்’ பிரிவில் இருந்தது. காலை 9.10 மணியளவில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 290 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. இது ‘மோசம்’ பிரிவில் வருவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம், பவானா, பட்பா்கஞ்ச், நேரு நகா், சோனியா விஹாா், மேஜா் தயான் சந்த் ஸ்டேடியம், ஜஹாங்கீா்புரி, ரோஹிணி, துவாரகா செக்டாா்-8, அசோக் விஹாா், பஞ்சாபி பாக், ஷாதிப்பூா் ஆகிய இடங்களில் காற்றின் தரக்குறியீடு 300 புள்ளிகளுக்கு மேலே பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 18) அன்று காலை வேளையில் மிதமானை மூடுபனி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 9 டிகிரி செல்சிஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT