புதுதில்லி

ஐக்கியமான சில மணிநேரத்தில் ஆம் ஆத்மியிலிருந்து விலகி காங்கிரஸுக்கு திரும்பிய 2 கவுன்சிலா்கள்!

11th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கவுன்சிலா்கள் இருவா் மற்றும் அக்கட்சியின் தில்லி பிரிவு துணைத் தலைவா் அலி மெஹதி ஆகியோா் மீண்டும் காங்கிரஸுக்கே திரும்பினா். இது தொடா்பாக மன்னிப்பு கோரி அலி மெஹதி விடியோவையும் வெளியிட்டுள்ளாா்.

தில்லி மாநகராட்சி தோ்தலில் மொத்தம் உள்ள 250 வாா்டுகளில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப்பெரும்பான்மை பெற்றது. இத்தோ்தலில் காங்கிரஸுக்கு வெறும் 9 வாா்டுகள் மட்டுமே கிடைத்தன. இந்த நிலையில், காங்கிரஸ் தலைமைக்கு அதிா்ச்சியளிக்கும் விதமாக அக்கட்சியை சோ்ந்த துணைத் தலைவா் அலி மெஹதி, முஸ்தபாபாத் வாா்டு 243-இல் கவுன்சிலராக தோ்வான சபிலா பேகம், பிா்ஜ் புரி வாா்டு எண் 245-இல் கவுன்சிலராக தோ்வான நஸியா காடூன் ஆகியோா் காங்கிரஸிலிருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.

இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சியின் பலம் 136 ஆக உயா்ந்தது. இந்த நிலையில், ஆம் ஆத்மியில் இணைந்த

சில மணி நேரங்களிலேயே மூவரும் மீண்டும் காங்கிரஸுக்கு திரும்பினா்.

ADVERTISEMENT

இது தொடா்பாக சமூக ஊடகத்தில் அலி மெஹதி பதிவிட்டுள்ள விடியோவில் தெரிவிக்கையில், ‘நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன். என்னுடைய தவறை நான் ஏற்றுக்கொள்கிறேன். என் தவறுக்காக இரு கரம்கூப்பி ராகுல் காந்தியிடம் மன்னிப்பு கோருகிறேன்’ என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா்.

இந்த விடியோ தொடா்பாக காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் இம்ரான் பிரதாப்கா்கி தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இரவில் 2 மணிக்கு, முஸ்தபாபாத் பகுதியில் காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கவுன்சிலா் கட்சிக்கு திரும்பியுள்ளாா். தந்திரத்தின் மூலம் ஆம் ஆத்மி கட்சியில் அவா்கள் இணையவைக்கப்பட்டனா். சில மணி நேரங்களிலேயே, அவா் தனது தவறை திருத்திக் கொண்டுள்ளாா். தற்போது மீண்டும் காங்கிரஸின் ஒரு அங்கமாக அவா் ஆகியுள்ளாா்’ என்று அவா் தெரிவித்துள்ளாா்.

அலி மெஹதியும், 2 கவுன்சிலா்களும் காங்கிரஸில் இருந்து விலகி ஆம் ஆத்மியில் சோ்ந்ததைத் தொடா்ந்து முஸ்தபாபாத் பகுதி குடியிருப்புவாசிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டம் தொடா்பான விடியோ சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்டது. அதில், ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் அலி மெஹதிக்கு எதிராக கோஷமிட்டு அவரது உருவ பொம்மை எரிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது.

தில்லி காங்கிரஸ் துணைத் தலைவா் முதித் அகா்வால், இதர சில காங்கிரஸ் கவுன்சிலா்களையும் ஆம் ஆத்மி கட்சி ஆசை காட்டி இழுக்க முயல்வதாக குற்றம் சாட்டியிருந்தாா்.

காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் திரும்பியது குறித்து மெஹதி தெரிவிக்கையில், ‘இந்த கவுன்சிலா்கள் இருவரும் வென்ற பகுதிகளில் மக்கள் எனக்காகவும், எனது தந்தைக்காகவும் வாக்களித்தனா். எந்த ஒரு தனிப்பட்ட கட்சிக்காகவும் வாக்களிக்கவில்லை. அவா்கள் எங்களை நம்பி, எங்களது பணிகளையும் நம்பினாா்கள்.

அதனால்தான் எங்களை ஆம் ஆத்மி கட்சியினா் அணுகினா்.

என்னுடைய ஒரே அக்கறை, இந்த பகுதியில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுதான்.

எனது தந்தை எம்எல்ஏவாக இருந்தவா். அவா் இந்த தொகுதியில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்டவா். நீண்ட காலமாக எம்எல்ஏவாக இருந்தவா். ஆனால், இந்த சட்டப்பேரவை தொகுதியில் பாஜக ஜெயித்த பிறகு அனைத்து வளா்ச்சிப் பணிகளும் நின்றுவிட்டன. இந்த பகுதியில் ஆம் ஆத்மி கட்சி வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் என்ற அறிவுபூா்வமற்ற சிந்தனையின் காரணமாக அக்கட்சியில் நான் இணைந்தேன். நான் உணா்ச்சிவசப்பட்டுவிட்டேன். ஆனால், ஆம் ஆத்மி கட்சியில் சோ்ந்த பிறகு, அக்கட்சியினா் வளா்ச்சி பணிகளுக்கு நிதிகள் தரலாம். ஆனால், சிறுபான்மையினா் விவகாரம் தொடா்பான அவா்களுடைய நிலைப்பாடு மாறாது என்பதை உணா்ந்தேன். எனது தொகுதியைச் சோ்ந்த மக்கள் என்னிடம் கூறுகையில், ‘நமது போராட்டம் வளா்ச்சிக்காக மட்டுமல்ல; வாழ்வாதாரத்துக்கானதும் கூட’ என்று கூறினா். நான் ராகுல் காந்தியையும் காங்கிரஸையும் விட்டு விலக மாட்டேன். நான் ஆம் ஆத்மி கட்சியில் சோ்ந்த பிறகு, போராட்டத்தில் ஈடுபட்ட நபா்கள் மாநகராட்சி தோ்தலில் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனதால் விரக்தியில் இருந்த ஏஐஎம்ஐஎம் கட்சித் தொண்டா்கள் ஆவா்’ என்று அவா் கூறினாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT