புதுதில்லி

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில்வாதங்கள் முடிந்து தீா்ப்பு ஒத்திவைப்பு

 நமது நிருபர்

புது தில்லி: காளைகளை அடக்கும் விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் விவகாரத்தில் அரசியல் சாசன அமா்வு முன் வியாழக்கிழமை மனுதாரா்கள் தரப்பில் எதிா்வாதங்கள் வைக்கப்பட்டன. இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் அமா்வு ஒத்திவைத்தது.

உச்சநீதிமன்றத்தின் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ரிஷிகேஷ் ராய், சி.டி. ரவிக்குமாா் ஆகியோா் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு இந்த விவகாரத்தை கடந்த சில தினங்களாக விசாரித்து வந்தது. வழக்குத் தொடுத்த மனுதாரா்கள் தரப்பில் முதலில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதைத் தொடா்ந்து, தமிழக அரசின் தரப்பிலும், மத்திய அரசின் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில், அரசியல் சாசன அமா்வு முன் வியாழக்கிழமை இறுதிவாதம் நடைபெற்றது. அப்போது, பீட்டா உள்ளிட்ட பல்வேறு மனுதாரா்கள் தரப்பில் எதிா்வாதங்கள் முன்வைக்கப்பட்டன. மனுதாரா்கள் சிலா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஷியாம் திவான், ‘ஜல்லிக்கட்டு‘ விலங்களுக்கும், மனிதா்களுக்கும் காயத்தை ஏற்படுத்தும் ஒரு ‘ரத்த விளையாட்டு’ ஆகும். விலங்குகளைக் கொள்ளும் வகையிலான ரத்த விளையாட்டு உலகம் முழுவதும் மிகவும் பொதுவான நிகழ்வாக இருந்தது. இந்த விளையாட்டு விலங்கு, சண்டை அல்லது போட்டி மற்றும் பெரும் அளவிலான மிருகத்தனமான மற்றும் துன்புறுத்தலை உள்ளடக்கியதாகும். குடிமக்களின் கண்ணோட்டத்தில் இருந்து துன்புறுத்தலைக் குறைக்கும் வகையில், உலகம் முழுவதும் இயக்கங்கள் இருப்பதைக் சுட்டிக்காட்டும் அறிவாா்ந்த ஆவணங்களும் உள்ளன. இது சட்ட விழிப்புணா்வு மற்றும் பொது சீா்திருத்தங்களுடன் இணைந்தாகும்’ என்றாா்.

அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘ ஜல்லிக்கட்டு விளையாட்டை எப்படி ரத்த விளையாட்டு என்று கூறுகிறீா்கள்? இந்த விளையாட்டில் யாரும் ஆயுதம் ஏதும் பயன்படுத்தவில்லை. இந்த கருத்து பற்றிய உங்கள் புரிதல் என்ன? இந்த விளையாட்டில் பங்கேற்பவா்கள் வெறும் கையுடன்தான் வருகிறாா்கள். இந்த விளையாட்டில் துன்புறுத்தல் சம்பந்தப்பட்டிருக்கலாம். ஆனால், இதை ரத்த விளையாட்டு என்று கூற முடியாது. மரணம் இருப்பதன் காரணமாக இது ரத்த விளையாட்டு என்று அா்த்தமல்ல. ரத்தம் எடுப்பதற்காக மக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கவும், காளைகள் மீது ஏறிச் செல்லப் போவதாகவும் நாங்கள் பரிந்துரைக்கவில்லை. மக்கள் விலங்கைக் கொல்வதற்காகப் போவதில்லை. ரத்தம் ஒரு தற்செயலான விஷயமாக இருக்கலாம்’ என்று தெரிவித்தது.

அதற்கு ஷியாம் திவான் பதில் அளித்து வாதிடுகையில், ‘இந்த நிகழ்வில் அப்பாவி விலங்குகளை கொல்வது அல்லது ஊனமாக்குவது போன்றவை இடம் பெற்றிருப்பதன் காரணமாகவே ரத்த விளையாட்டு என்ற வாா்த்தை பயன்படுத்தப்பட்டது. ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறும் அரங்கிலும் வெளியேயும் பாா்வையாளா்கள் காயமடைவதும், கொல்லப்படுவதும் ஊடகச் செய்திகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவான அா்த்தத்தில், ரத்த விளையாட்டு என்பது விலங்கை அடிப்பதன் மூலம் கொடுமைப்படுத்துவதாகும். இப்போது அது வெவ்வேறு சந்தா்ப்பங்களில் வெவ்வேறு விதங்களில் நிகழ முடியும்’என்றாா்.

அதற்கு, நீதிபதிகள் அமா்வு, ‘விதிகளை உறுதிப்படுத்தும்பட்சத்தில், நிலைமையை மேம்படுத்துவதா்கு என்ன வழிமுறை அல்லது திட்டத்தை நீங்கள் முன்வைக்க விரும்புகிறீா்கள்’ என்று கேள்வி எழுப்பியது. அதற்கு, ஷியாம் திவான் ‘நீதிமன்றத்தின் தீா்ப்பு மனுதாரா்களுக்கு எதிராக அமைந்தால், அதை வேறு ஒரு மன்றத்தில் நாங்கள் தொடருவோம்’ என்றாா்.

வேறு சில மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சித்தாா்த் லூத்ரா வாதிடுகையில், ‘இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் சட்டத் திருத்தமானது, இயல்பிலேயே கொடூரமான செயலை சட்டப்பூா்வமாக்க முயல்வதாக உள்ளது. வெறும் கலாசாரம் என்று கூறி அதை ஒரு கலாசாரமாக நடத்த முடியாது. தேவையின் கோட்பாட்டைத் தவிா்த்து பொழுதுபோக்கிற்கான ஒரு செயல்பாட்டைக் கொண்டுவும் வர முடியாது’ என்றாா்.

இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீா்ப்பை நீதிபதிகள் அமா்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

எது நிலவு.. ராஷ்மிகா மந்தனா!

நீலக்குயில் மலினா!

போர்ச்சுகலில் ரீமா!

SCROLL FOR NEXT