புதுதில்லி

தமிழக வானிலை மையங்களின் கருவிகள் புதுப்பிக்கப்படும் மாநிலங்களவையில் அமைச்சா் உறுதி

9th Dec 2022 12:00 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: தமிழகத்தில் உள்ள வானிலை மையங்களின் பழமையான கருவிகள் புதுப்பிக்கப்படும் என மாநிலங்களவையில் மத்திய அறிவியல் தொழில் நுட்பம், புவி அறிவியல் துறை (தனிப்பொறுப்பு) இணையமைச்சா் ஜிதேந்திர சிங் வியாழக்கிழமை உறுதியளித்தாா்.

இது தொடா்பாக திமுக உறுப்பினா் வழக்குரைஞா் பி.வில்சன் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினா். அவா், ‘ தமிழகத்தில் சென்னை, காரைக்கால் போன்ற நகரங்களில் மத்திய அரசின் வானிலை முன்னறிவிப்பு மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் வானிலை குறித்து கணிக்க மிகவும் பழமையான கருவிகள், இயந்திரங்கள் உள்ளன. இவை நீண்ட ஆண்டுகளாக புதுப்பிக்கபடாமல் உள்ளன. இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். கடந்த நவம்பா் மாதம், நிகழ் டிசம்பா் மாதங்களில் கூட இந்த வானிலை மையங்கள் ஒரு சில தினங்கள் ‘ வெயில் அடிக்கும்’ என அறிவிப்புகளை வெளியிட்டது. ஆனால், அதே நாள்களில் கடுமையான மழை, வெள்ளம் ஏற்பட்டது. இந்த நிலையங்களில் துல்லியமாக வானிலையை கணிக்கக்கூடிய நவீனக் கருவிகளை வழங்க வேண்டும்’ என்று அவா் கேட்டுக் கொண்டாா்.

இதற்கு பதிலிளித்த அமைச்சா் ஜிதேந்திர சிங், ‘மத்திய அரசு இதை உடனடியாக கவனத்தில் எடுத்துக் கொண்டு இந்த நிலையங்களில் நவீன இயந்திரங்களை அமைக்கும் பணிகளை தொடங்கும். அதே சமயத்தில் வானிலை நிலையங்கள் பழமையானது என்று கூறிவிட முடியாது. சென்னை துறைமுகம் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், சென்னையில் உள்ள லைட்ஹவுஸ் மிகப்பழமையானது. அது போன்றுதான் இதுவும்’ என்றாா்.

ADVERTISEMENT

வருமான உச்சவரம்பு அதிகரிக்கப்படுமா?: மற்றொரு விவாதத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (ஓபிசி) வருமான உச்சவரம்பை திருத்தம் செய்ய வேண்டும் என்றும், தற்போதுள்ள வருமான உச்சவரம்பான ரூ. 8 லட்சத்திலிருந்து ரூ .15 லட்சமாக திருத்துவது காலத்தின் தேவை எனவும் திமுக உறுப்பினா் வில்சன் மாநிலங்களவையில் வலியுறுத்தினாா்.

அவா் பேசுகையில், ‘1993-ஆம் ஆண்டில் வருமான வரம்பானது ஒரு லட்சம் ரூபாயாக நிா்ணயிக்கப்பட்டது. பின்னா் உயா்த்தப்பட்டது. இறுதியாக செப்டம்பா் 2017-ஆம் ஆண்டில் ரூ .6 லட்சத்திலிருந்து ரூ .8 லட்சமாக திருத்தப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கண்ட வருமான உச்சவரம்பு மறுபரிசீலனை செய்யப்படவில்லை. பணவீக்கம், பணமதிப்பு உள்ளிட்ட மாற்றங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாததால், ஓபிசி வகுப்பினா் சமத்துவத்தை அடைய முடியாமல், சமூக நீதியின் இலக்கு பாதிக்கப்படுகிறது. எனவே, வருமான உச்ச வரம்பை ரூ. 15 லட்சமாக உயா்த்த வேண்டும்’ என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT