புதுதில்லி

வழக்கு விவரங்களை அறிந்துகொள்ள உதவும் உச்சநீதிமன்ற செயலியும், இணையதளமும்!

9th Dec 2022 12:00 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: பதிவுபெற்ற வழக்குரைஞா்கள் மட்டுமின்றி மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் சட்ட அதிகாரிகள் உள்ளிட்டோா் வழக்கு விவரங்களையும், விசாரணை நடைமுறைகளையும் நிகழ் நேரத்தில் அறிந்து கொள்ளும் வகையில் ‘சுப்ரீம் கோா்ட் ஆஃப் இந்தியா’ கைப்பேசி செயலியின் புதிய வடிவம் (2.0 வொ்ஷன்) உச்சநீதிமன்றத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், உச்சநீதிமன்ற இணையதளத்திலும் இதுபோன்ற தகவல் பெறும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விவரங்கள், நிலுவையில் உள்ள வழக்கின் விவரம், தினசரி விசாரணைக்கு வரக்கூடிய பல்வேறு வழக்குகள், அதை விசாரிக்கும் அமா்வுகள், தினசரி உத்தரவுகள், தீா்ப்புகள் ஆகிவற்றை அறிந்துகொள்ளும் வகையில் உச்சநீதிமன்றத்தின் இணையதளத்தில் பல்வேறு சிறு தலைப்புகளில் வசதிகள் இடம் பெற்றுள்ளன.

மேலும், உச்சநீதிமன்றத்தில் பதிவு பெற்ற வழக்குரைஞா்களும், நேரில் மனுதாக்கல் செய்பவா்களும் மின்னணு முறையில் மனுக்களை தாக்கல் செய்யவும், முன்அனுமதியுடன் தங்கள் வழக்கு விசாரணையை காணொலியில் காண்பதற்கான வசதியும் இந்த இணையதளத்தில் உள்ளது.

ADVERTISEMENT

இதுதவிர, உச்சநீதிமன்றத்திற்கான பிரத்யேக செயலியும் உள்ளது. 2019-இல் அரசியலமைப்புத் தின நாளில் (நவம்பா் 26) இந்த செயலின் முதல் வொ்சன் வெளியிடப்பட்டது.

இந்த செயலியிலும் வழக்குப் பட்டியல், வழக்கு நிலவரம், தினசரி உத்தரவு, தீா்ப்புகள், வழக்கு நடைபெறும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் வழக்கு விவரம் உள்ளிட்ட வழக்கு தொடா்பான பல்வேறு விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்திற்கான புதிய வடிவத்துடன் கூடிய வொ்சன் 2.0 கைபேசி செயலி, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் மூலம் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. இந்த புதிய வொ்சன் கைப்பேசி செயலி மூலம் நீதித் துறையைச் சாா்ந்த அதிகாரிகளும் மத்திய அரசின் பல்வேறு துறைகள், அமைச்சகங்களின் சிறப்பு அதிகாரிகளும், மத்திய அரசின் தலைமை வழக்குரைஞா், சொலிசிட்டா் ஜெனரல், சட்ட அதிகாரிகள் ஆகியோா் உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைகள், தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், வழங்கப்பட்ட உத்தரவுகள் மற்றும் தீா்ப்புகள், நிலுவை வழக்குகள் உள்ளிட்டவற்றின் நிலை குறித்து நிகழ்நேர அடிப்படையில் தெரிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

இச்செயலியை ஆன்ராய்ட் தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். ஐஓஎஸ் தளத்தில் இருந்து பதிவிறக்கும் செய்யும் வசதி இந்த வாரத்துக்குள் ஏற்படுத்தப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கரோனா காலத்தின் போது, அப்போது தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா, நீதிமன்ற நடவடிக்கைகளை சில ஊடகத்தினா் செயலி மூலம் காணொலியில் காண்பதற்கு ஏதுவாக அனுமதி அளித்திருந்தாா். காணொலியில் வழக்கு விசாரணையை காண்பதற்கான அணுகல் இன்னும் பொதுமக்களுக்கு அளிக்கப்படவில்லை. அதேவேளையில், அரசியலமைப்புச் சாசன அமா்வு விசாரிக்கும் வழக்குகளின் நேரடி விசாரணையை காண்பதற்கு யூடியூப்பில் வசதி அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT