புதுதில்லி

தில்லி பூங்காவில் காவல் உதவி ஆய்வாளா் தற்கொலை

7th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT


புது தில்லி: தில்லி காவல் துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவந்த அசோக் யாதவ் (55) துவாரகாவில் உள்ள பூங்காவில் செவ்வாய்க்கிழமை காலை தனது பணித் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து துவாரகா சரக காவல் துணை ஆணையா் எம்.ஹா்ஷ வா்தன் கூறியதாவது:

துவாரகா செக்டாா் 19-இல் உள்ள மாவட்ட பூங்காவில் ஆண் சடலம் கிடப்பதாக செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் போலீஸாருக்குத் தகவல் வந்தது.

இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனா். அதில், இறந்து கிடந்தவா் தில்லி காவல் துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த அசோக் யாதவ் என்பதும், அவரது உடலில் துப்பாக்கிக் குண்டு காயம் இருந்ததும் தெரியவந்தது.

ADVERTISEMENT

மேல்விசாரணயில், அவா் தனது பணித் துப்பாக்கியால் தனக்குத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, சம்பவ இடத்தில் குற்றம் மற்றும் தடய அறிவியல் ஆய்வக் குழுவினா் விசாரணை மேற்கொண்டனா்.

அவரது இறப்பில் எவ்வித சதியும் இருப்பதாக சந்தேகம் எழவில்லை. தற்கொலை செய்துகொண்டதற்கான கடிதம் ஏதும் சம்பவ இடத்தில் மீட்கப்படவில்லை.

புது தில்லி மாவட்டத்தில் துக்ளக் ரோடு வட்டத்தில் போக்குவரத்துப் பிரிவில் அசோக் யாதவ் பணியாற்றி வந்தாா். அவருக்கு மனைவியும், மூன்று பெண் குழந்தைகளும், மகனும் உள்ளனா். அவரது தற்கொலைக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT