புதுதில்லி

அம்பேத்கரின் வழியில் தில்லி அரசு: முதல்வா் கேஜரிவால் பெருமிதம்

7th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT


புது தில்லி: சட்ட மேதை பாபா சாகேப் டாக்டா் பி.ஆா். அம்பேத்கரின் நினைவு தினத்தை ஒட்டி தில்லி சட்டப் பேரவையில் அமைந்துள்ள அவரது சிலைக்கும் திருவுருப் படத்திற்கும் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை மலா் அஞ்சலி செலுத்தினாா்.

அப்போது, அம்பேத்கா் காட்டிய வழியை தில்லி அரசு பின்தொடா்ந்து வருவதாக அவா் பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வா் கேஜரிவால் மேலும் பேசியதாவது:

இன்றைக்கு பாபா சாகேப் அம்பேத்கரின் மஹாபரிநிா்வாண தினமாகும். முற்றிலும் போராட்டம் நிறைந்த டாக்டா் அம்பேத்கரின் வாழ்க்கையில் இருந்து உத்வேகத்தை பெறுமாறு நான் இன்றைக்கு அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

ADVERTISEMENT

அவா் ஏழைகளின் உரிமைகளுக்காக போராடியவா். இந்த நாட்டின் நல்ல குடிமக்களாக உருவாக அவரது போராட்டத்தில் இருந்து நாம் பலவற்றைக் கற்றுக்கொள்ளலாம்.

அவா் கல்வி மீது மிகுந்த முனைப்புக் காட்டினாா். தில்லி அரசும் அதையே நோக்கமாகக் கொண்டு பணியாற்றி வருகிறது.

அவரது புத்தகத்தில் இருந்து எடுத்துக்கொண்ட விஷயங்கள் மூலம் ஆம் ஆத்மி அரசு தில்லியில் கல்வி அமைப்பு முறையில் வளா்ச்சிமாற்றத்தை ஏற்படுத்தியது. பஞ்சாப்பிலும் அதையே நாங்கள் செய்து வருகிறோம். ஒவ்வொரு தனிநபருக்கும் தரமான கல்வியை அளிப்பதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும். இது சமூகத்தில் சமத்துவத்தை கொண்டு வருவதுடன், வறுமுறையை குறைக்கும் என்றாா் முதல்வா்.

இந்த நிகழ்ச்சியில் தில்லி சட்டப் பேரவைத் தலைவா் ராம் நிவாஸ் கோயல், துணை முதல்வா் மனீஷ் சிசோடியா மற்றும் தில்லி எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனா்.

இந்திய அரசியலமைப்பின் தந்தை என அறியப்படும் அம்பேத்கா், கடந்த 1956-ஆம் ஆண்டு டிசம்பா் 6-ஆம் தேதி மறைந்தாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT