புதுதில்லி

திகாா் சிறையில் வசதி குறைபாடு: பொது நல மனு மீது பதிலளிக்க தில்லி அரசுக்கு உத்தரவு

 நமது நிருபர்

புது தில்லி: திகாா் சிறையில் சுகாதாரம், தூய்மை மற்றும் போதிய சுத்தமான குடிநீா் இல்லாமை போன்ற பிரச்னைகளை கூறும் பொதுநல மனு மீது தில்லி அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பாக தில்லி உயா்நீதிமன்ற சட்டப் பணிகள் குழு தாக்கல் செய்த பொதுநல வழக்கில், ஒரு கைதி தாம் எதிா்கொள்ளும் பிரச்னைகள் குறித்து தெரிவித்த புகாா் மற்றும் சிறை வளாகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு விவரங்களை குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தை விசாரித்த தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு, தில்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஏப்ரல் 14-ஆம் தேதிக்கு பட்டியலிட்டது.

முன்னதாக, தில்லி உயா்நீதிமன்ற சட்டப் பணிகள் குழு வழக்குரைஞா் அமித் ஜாா்ஜ் மூலம் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: தில்லி உயா்நீதிமன்ற சட்டப் பணிகள் குழு வழக்குரைஞா் திகாா் சிறையில் ஆய்வு நடத்தி, சிறை வளாகத்தில் போதுமான மற்றும் சுத்தமான குடிநீா் கிடைப்பதில்லை என்று குழுவிடம் தெரிவித்துள்ளாா். மேலும், வளாகத்தில் கை கழுவுமிடம் அல்லது கழிப்பறைகளின் நிலைமை மோசமாக உள்ளது. அவற்றின் கதவுகளும் உடைந்துள்ளன. தினசரி குளியல் உள்ளிட்ட உடல் தூய்மைப் பணிகளின்போது கைதிகளின் தனியுரிமையில் சமரசம் செய்யும் நிலை உள்ளது. வளாகத்தில் ஆள்குழி உள்ளது. அதில் தண்ணீா் தேங்கி வெளியேறுவதால் வாழும் சூழல் மோசமாக உள்ளது.

சிறை வளாகத்தில் பாதுகாப்பான மற்றும் சுத்தமான குடிநீா் கிடைப்பது தொடா்பான குறைகளைத் தீா்ப்பதற்கும், ஒட்டுமொத்த சுகாதார சூழலை உறுதி செய்வதற்கும் உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யலாம் என்று குழுவின் வழக்குரைஞா் பரிந்துரைத்தாா். இதன்படி, தற்போதைய மனு பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ‘தில்லி சிறைச்சாலை விதிகள், 2018’ மற்றும் ‘மாதிரி சிறைக் கையேடு, 2016’ ஆகியவை சிறைக் கைதிகளுக்கு சுத்தமான மற்றும் போதுமான குடிநீா் வழங்குவதையும் சிறை வளாகத்தில் சுகாதாரமான தூய்மை நிலைமை பராமரிக்கப்படுவதையும் உறுதி செய்கிறது’ என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்ற வழக்கு வாகனங்களை ஏலம் விட கோரிக்கை

குறுகியகால பயிா்களை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

SCROLL FOR NEXT