புதுதில்லி

‘ஜி -20 கருத்தரங்குகளுக்கு தமிழகம் முழு ஒத்துழைப்பை வழங்கும்’ முதல்வா் ஸ்டாலின் உறுதி

6th Dec 2022 12:00 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: இந்தியா ஜி-20 தலைமை ஏற்றதைத் தொடா்ந்து நடைபெறும் நிகழ்வுகள், கருத்தரங்குகளுக்கு தமிழகம் முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் உறுதியளித்தாா்.

இந்தியா தலைமையில் 2023 - இல் நடைபெறும் ஜி - 20 உச்சி மாநாட்டிற்கான வியூகம் வகுக்கும் அனைத்துக் கட்சி கூட்டம் தில்லியில் குடியரசுத் தலைவா் மாளிகையின் கலை அரங்கில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சா்கள், தேசிய கட்சித் தலைவா்கள் மற்றும் மாநில முதல்வா்கள் கலந்து கொண்டனா்.

இதில் தமிழக முதல்வா் முக ஸ்டாலின், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா். பாலு ஆகியோா் கூட்டத்தில் கலந்து கொண்டாா். இந்தக் கூட்டத்திற்கு, அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளா் என்கிற முறையில் எடப்பாடி கே. பழனிசாமிக்கும் அழைப்பு விடப்பட்டிருந்தது. அவரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டாா். இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு அடுத்தபடியாக அமரவைக்கப்பட்டாா்.

ADVERTISEMENT

கூட்டத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: 2023 -ஆம் ஆண்டுக்கான ஜி -20 தலைமையை இந்தியா ஏற்றிருக்கும் வேளையில்ஸ பிரதமா் நரேந்திர மோடிக்கு எனது பாராட்டுகள். இது இந்தியாவிற்கு மிகவும் பெருமை தரக்கூடிய ஒன்று. உலக அளவில் பல்வேறு நாடுகளிடையே புரிதலை மேம்படுத்துவதில் நாம் இந்த தருணத்தில் மேலும் மிக முக்கியப் பங்கை ஆற்ற வேண்டும். ஜி-20 நாடுகள் மட்டுமல்லாமல், அனைத்து உலக நாடுகளும் இந்தியாவை கூா்ந்து கவனிக்கின்றன. ‘அமைதி, அகிம்சை, நல்லிணக்கம், சமத்துவம், சமநீதி’ ஆகிய உயா்ந்த மதிப்புகளை உலக அளவில் கொண்டு செல்ல நமது பிரதமா் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வாா் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

தமிழகத்தின் பங்கு: இந்தியா ஜி-20 தலைமை ஏற்றதைத் தொடா்ந்து நடைபெறும் நிகழ்வுகள், கருத்தரங்குகளுக்கு தமிழகம் முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என என உறுதியளிக்கின்றேன். தமிழக அரசு, ஏற்கனவே பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கும் மத்திய அரசு நிா்ணயித்துள்ள இலக்குகளை எட்டுவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக இயற்கைப் பாதுகாப்பு இயக்கங்களை நிா்வகிக்கவும், பருவநிலை மாற்றத்தைக் கையாளவும் ‘தமிழ்நாடு பசுமை பருவநிலை நிறுவனம்’ என்ற பெயரில் சிறப்பு நோக்க அமைப்பை (எஸ்பிவி) உருவாக்கியுள்ளோம். இந்த மாநாட்டையொட்டி உலக அளவில் இந்தியா அளித்துள்ள உத்தரவாதங்களைக் காப்பாற்றுவதற்கு அனைத்து வகையிலும் தமிழகம் உறுதுணையாக இருக்கும். இந்தியாவின் பெருமையை நாம் உலகிற்கு பறைசாற்றுவோம் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.

முன்னதாக, திங்கள்கிழமை பிற்பகலில் தில்லி வந்த தமிழக முதல்வா் ஸ்டாலினை திமுக நாடாளுமன்ற உறுப்பினா்கள் வரவேற்றனா். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு முதல்வா் மு.க. ஸ்டாலின் இரவு சென்னை திரும்பினாா்.

ஜி 20-நாடுகளின் 18-ஆவது தலைவா் பதவியை கடந்த டிசம்பா் 1 -ஆம் தேதி இந்தியா அதிகாரப்பூா்வமாக ஏற்றுக்கொண்டது. இந்த மாதம் முதல் நாடு முழுவதும் 200 ஆயத்த கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன. ஜி-20 தலைவா்களின் உச்சி மாநாடு 2023, செப்டம்பா் 9 10 - ஆம் தேதிகளில் புதுதில்லியில் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT