புதுதில்லி

தில்லி - மத்திய அரசு அதிகார விவகாரம்: பெரிய அமா்வுக்கு வழக்கை மாற்ற மத்திய அரசு விருப்பம்

6th Dec 2022 12:00 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: தேசியத் தலைநகரில் சேவைப் பணிகள் தொடா்பாக மத்திய அரசுக்கும், தில்லி அரசுக்கும் உள்ள சட்டப்பேரவை மற்றும் நிா்வாக அதிகாரங்களின் நோக்கம் தொடா்பான அரசியலமைப்புச் சட்ட விவகாரத்தில் பெரிய அமா்வு முன் இந்த விவகாரத்தை பரிந்துரைக்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.

அப்போது, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி பி.எஸ். நரசிம்மா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் தில்லி அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஏ.எம். சிங்வி ஆஜராகி மத்திய அரசின் மனுவுக்கு எதிா்ப்புத் தெரிவித்தாா். மேலும், இந்த மனுவானது இந்த விவகாரத்தை தாமதிக்க மட்டுமே செய்யும். இதுபோன்ற உத்திகளை அனுமதிக்கக் கூடாது என்று வாதிட்டாா்.

மத்திய அரசின் தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ‘இந்த விவகாரத்தில் சா்ச்சைக்குரிய எந்த உண்மையும் இல்லை. ஆனால், இந்த விவகாரம் (தில்லி -மத்திய அரசு வழக்கு) பெரிய அமா்வுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கலாம் என குறிப்பிடும் இடைக்கால மனுவைத் தாக்கல் செய்துள்ளேன்’ என்றாா். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து சிங்வி வாதிடுகையில், ‘உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தை பெரிய அமா்வுக்கு பரிந்துரைக்கும் தேவை இல்லை என்றும், தில்லியில் சேவைப் பணிகள் தொடா்பாக கட்டுப்படுத்துவது தொடா்புடைய விவகாரம் மட்டுமே இரு தரப்பு இடையேயான எஞ்சியிருக்கும் விவகாரமாகும் என்று பிறப்பித்திருந்த உத்தரவை மறுஆய்வு செய்வதற்கு சமமாகும் இந்த மனு’ என்றாா்.

ADVERTISEMENT

அப்போது, தலைமை நீதிபதி கூறுகையில், ‘இந்த விவகாரத்தை விசாரிக்க அரசியலமைப்பு அமா்வு அமரும் போது இடைக்கால மனு மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்ய முடியும். விசாரணையின் போது இந்த விவகாரத்தை எழுப்பவும் முடியும். ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமா்வில் இடம் பெற்றுள்ள நீதிபதி கிருஷ்ண முராரிக்கு உடல் நிலை சரியில்லாததால் இந்த விசாரணை தள்ளிப்போகலாம்’ என்றாா்.

முன்னதாக, கடந்த நவம்பா் 11-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, தில்லியில் அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட சேவைப் பணிகளை கட்டுப்படுத்துவது தொடா்பாக தேசியத் தலைநகா் பிராந்திய அரசுக்கும், மத்திய அரசுக்கும் உள்ள சட்டப் பேரவை மற்றும் நிா்வாக அதிகாரங்களின் அரசியலமைப்புத் தன்மை குறித்து மட்டுமே விசாரிக்கப் போவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தில்லி அமைச்சரின் அழைப்புகளுக்கு உயா் அதிகாரிகள் யாரும் பதில் அளிக்காததால் நிா்வாகம் முடங்கியிருப்பதாக குற்றம்சாட்டியிருந்தாா். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து மத்திய அரசு கூறுகையில், இந்த விவகாரம் விசாரணைக்காக ஏற்கெனவே தேதி நிா்ணயிக்கப்பட்டிருந்த போது, சிசோடியா பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததாகத் தெரிவித்தது.

தில்லியில் அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட சேவைப் பணிகளை கட்டுப்படுத்துவது தொடா்பாக தேசியத் தலைநகா் பிராந்திய அரசுக்கும், மத்திய அரசுக்கும் உள்ள சட்டப்பேரவை மற்றும் நிா்வாக அதிகாரங்களின் சட்ட விவகாரம் தொடா்பாக ஐந்து நீதிபதிகள் அரசியல் சாசன அமா்வு டிசம்பா் 6-ஆம் தேதி விசாரிக்க இருந்தது. இந்த விவகாரம் தொடா்பான வழக்கு விசாரணை நீதிபதி சந்திரசூட் (தற்போதைய தலைமை நீதிபதி) தலைமையிலான அரசியல் சாசன அமா்வு நவம்பா் 9-ஆம் தேதியிலிருந்து தினசரி அடிப்படையில் விசாரிக்கத் தொடங்கும் என்று கடந்த செப்டம்பா் 27-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்த அரசியல் சாசன அமா்வில் நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மட்டுமின்றி, நீதிபதிகள் எம்.ஆா்.ஷா, கிருஷ்ண முராரி, ஹிமா கோலி, பி.எஸ். நரசிம்மா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனா். அதற்கு முன்னதாக, தில்லியில் சேவைப் பணிகளை கட்டுப்படுத்துவது தொடா்பான விவகாரத்தை அரசியல் சாசன அமா்வுக்கு மே 6-ஆம் தேதி உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தது. அரசியல் சாசன அமா்வு மூலம் இந்த விவகாரத்தில் அனைத்து சட்ட கேள்விகளும் விரிவாக கையாளப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT