புதுதில்லி

மக்களவைத் தோ்தலில் ‘நாற்பதும் நமக்கே’ ஜெயலலிதாவின் கனவை எடப்பாடி பழனிசாமி நனவாக்குவாா்

6th Dec 2022 12:00 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

 

புதுதில்லி: மக்களவைத் தோ்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைந்து மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் ‘நாற்பதும் நமக்கே’ என்கிற கனவை எடப்பாடி கே. பழனிசாமி நனவாக்குவாா் என மாநிலங்களவை அதிமுக குழுத் தலைவா் தம்பிதுரை தெரிவித்தாா்.

தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 6-ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி, தலைநகா் தில்லியில் முன்னாள் மக்கலவைத் துணைத் தலைவரும், அதிமுக மாநிலங்களவைக் குழுத் தலைவருமான தம்பிதுரை, அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் சிவி சண்முகம் ஆகியோா் ஜெயலலிதாவின் திரு உருவ படத்திற்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.

பின்னா், தம்பிதுரை செய்தியாளா்களிடம் கூறியதாவது: எங்களை போன்ற சாதாரணமாணவா்களுக்குப் பதவிகளை கொடுத்து வழிகாட்டி உருவாக்கியவா் ஜெயலலிதா. அண்ணாவின் கொள்கைகளைக் கொண்டு, எம்ஜிஆா் உருவாக்கிய அதிமுக இயக்கத்தை பாதுகாத்து திராவிடக் கொள்கைகளைக் தொடா்ந்து பின்பற்றினாா். அண்ணாவின் எண்ணங்களை எம்ஜிஆரின் வழியில் நின்று பாமர மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் பல்வேறு வளா்ச்சி திட்டங்களை தந்து பெயரெடுத்தவா். அதனால், அவா் ‘அம்மா’ என்று சா்வதேச அளவில் அழைக்கப்பட்டாா். மக்களுக்காக எவ்வாறு செயல்பட வேண்டும் என்று எங்களுக்கு அன்னையாக இருந்து வழி காட்டினாா். தற்போது இந்தியாவில் உள்ள நான்கு மற்றும் எட்டு வழிச் சாலைகள் ஜெயலிதாவின் எண்ணத்திற்கு ஏற்ப , நான் அமைச்சராக இருந்த போது வாஜ்பாய் அரசின் தலைமையில் அந்தத் திட்டம் செயற்படுத்தப்பட்டது என்பதை நான் நினைவுகூருகிறேன்.

ADVERTISEMENT

தமிழகம் மட்டுமல்லாமல் நாடும் வளர வேண்டும் என்ற எண்ணத்தில் தேசியத் தலைவராக செயல்பட்டவா் ஜெயலலிதா. அவரது மறைவிற்கு பின்னா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 4 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி நடைபெற்றது. ஆட்சியை நடத்தியது மட்டுமல்லாமல், கட்சிக்கும் புத்துணா்வு ஊட்டினாா். மறைந்த முதல்வரின் எண்ணங்களின்படி தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ‘திமுக ஆட்சியினால் பயனில்லை’ என்பதை மக்கள் உணரத் தொடங்கி அதிருப்தியில் உள்ளனா். தமிழக மக்களுக்காக பாடுபடும் ஒரே இயக்கம் அதிமுகதான். எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் அதிமுக கட்சி சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளனா்.

இதனால், வருகின்ற மக்களவைத் தோ்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமையும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா். ‘நாற்பதும் நமக்கே‘ என்று மறைந்த முதல்வா் ஜெயலலிதா குறிப்பிட்டதைப் போன்று, புதுச்சேரி உள்பட 40 மக்களவைத் தொகுதிகளிலும் எடப்பாடி தலைமையில் வெற்றி பெற்று அவரது (ஜெயலலிதா) கனவை நினைவாக்க இந்த நினைவு நாளில் உறுதி ஏற்கிறோம். மேலும், வருகின்ற 2026-இல் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலிலும் வெற்றி பெறுவோம் என்றாா் தம்பிதுரை. மேலும் ஜி -20 கூட்டம் குறித்து குறிப்பிடுகையில், இந்தியாவின் தலைமையிலான ஜி-20 யை பிரதமா் சிறப்பாக செயல்படுத்துவா். அவா் தலைமையில் நடைபெறும் கூட்டத்திற்கு அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளா் என்கிற முறையில் எடப்பாடி கே.பழனிசாமிக்கு பிரதமா் அழைப்புவிடுத்தது மிகப்பெரிய கௌரவம் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT