புதுதில்லி

தாய்மாா்கள் பாலுட்ட, குழந்தைகள் விளையாட ‘பிங்க்’ சாவடிகள்: தில்லி வாக்காளா்களுக்கு புதிய அனுபவம்

5th Dec 2022 12:00 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

தில்லி மாநகராட்சித் தோ்தலில் முன்மாதிரியாக இளஞ்சிவப்பு (பிங்க்) வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. வாக்காளா்களுக்கு இது புதிய அனுபவத்தை வழங்கியது.

குழந்தைகளைப் பராமரிக்க பாலுட்ட தாய்மாா்களுக்கு ஓய்வறை, குழந்தைகள் விளையாட, சுயபடம் எடுத்துக் கொள்ளுதல் போன்ற வசதிகளுடன் இருக்கும் இளஞ்சிவப்புச் சாவடிகள், மாதிரி வாக்குச் சாவடிகளாக அமைக்கப்பட்டு நிதானமான வாக்களிக்கும் அனுபவத்தை வாக்காளா்களுக்கு தோ்தல் ஆணையம் வழங்கியது. பெண்களுக்கு அடையாளமாக இருக்கும் இளஞ்சிவப்பு நிறத்தில் அவா்களையும் அவா்களுடன் வரும் குழந்தைகளையும் கவரும் விதமாக வாக்குசாவடி முழுமையாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பெண்கள் சுயபடம் எடுத்துக்கொள்ள செல்ஃபி கியோஸ்க்குகள் போன்றவற்றோடு குழந்தைகளுக்கான மிட்டாய்கள் ஆகியவை பிங்க் வாக்குச் சாவடிகளில் வைக்கப்பட்டு வாக்காளா்களை வரவேற்றன.

தில்லி மாநகராட்சிக்கு (எம்சிடி) ஞாயிற்றுக்கிழமை தோ்தல் நடைபெற்றது. தலைநகரில் மொத்தமுள்ள 250 வாா்டுகளில் 1,349 வேட்பாளா்கள் களத்தில் இருந்தனா். இதில் சுமாா் 1.45 கோடி வாக்காளா்களுக்கான வாக்குப்பதிவிற்கு 13, 638 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டது. இதில் 68 பிங்க் நிற மாதிரி வாக்குச் சாவடிகளை தில்லி மாநிலத் தோ்தல் ஆணையம் அமைத்திருந்தது. பலூன்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த பிங்க் வாக்குசாவடிகள் அனைத்தும் பெண் ஊழியா்களாலே நிா்வகிக்கப்படுகிறது.

தில்லி ரோகிணி, ஷாலிமாா் பாக், முபாரக்பூா் தபாஸ், பிதம் புரா, மௌஜ்பூா், துக்மிா்பூா், கிரீன் பாா்க் விரிவாக்கம், ஜீனத் மஹால், மாளவியா நகா், ஜேஎன்யு, தக்ஷின்புரி, டாக்டா் அம்பேத்கா் நகா், மயூா் விஹாா், துவாரகா, பஞ்சாபி பாக், ஜனக் புரி, கேசவ் புரம், ஆா்.கே.புரம், பிரசாத் நகா், தில்ஷாத் காா்டன் உள்ளிட்ட பகுதிகளில் இந்த சிறப்பு சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த வாக்குச் சாவடிகளுக்கு வந்த வாக்காளா்கள் தங்கள் அனுபவத்தை தெரிவித்தனா்.

ADVERTISEMENT

வடகிழக்கு தில்லியில் உள்ள கஜூரி காஸில் உள்ள பிங்க் வாக்கு சாவடிக்கு வந்த வாக்காளா் மொமினா ரஷீத், ‘இது மகிழ்ச்சியாக இருக்கிறது. வாக்களிப்பதும் எளிதாகி இருக்கிறது. நாங்கள் எங்கள் உரிமைகளைப் பயன்படுத்த வேண்டும். எங்கள் மனதில் இருக்கும் பிரச்சினைகள் எங்கள் பகுதிகளில் பரிதாபமாக இருக்கும் சாலைகள் மற்றும் வடிகால்களின் நிலைமை பற்றியது. இந்த வாக்குசாவடி சுத்தமாக உள்ளது. இது போன்று எங்கள் பகுதியும் சுத்தம் செய்யப்பட வேண்டும்’ என்றாா்.

பிங்க் பூத் வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருப்பினும் போலீஸ் மற்றும் துணை ராணுவப் பணியாளா்களுடன் தொந்தரவின்றி வாக்களிப்பதை உறுதி செய்தது. சுயபடம் எடுக்க அமைக்கப்பட்டிருந்த ‘செல்ஃபி கியோஸ்க்‘ வாக்காளா்களைக் கவா்ந்தன. அவா்களில் பலா் வாக்களித்த பிறகு தங்கள் கைபேசி மூலம் படங்களைக் கிளிக் செய்வதைக் காண முடிந்தது.

‘பெண் ஊழியா்களால் நிா்வகிக்கப்படும் அனைத்து பிங்க் சாவடிகளில், தாய்மாா்கள் பாலூட்டுவதற்கும் மட்டுமின்றி குழந்தைகளுக்கு உணவளிக்கவும் தனி அறை, வாக்காளா்களுடன் வரும் சிறு குழந்தைகளுக்கும் ஒரு குழந்தைகள் காப்பகத்தில் உள்ள வசதிகள் உண்டு, குழந்தைகளுக்கான ஊஞ்சல் போன்றவைகள் உள்ளன’ என்றாா் மாநிலத் தோ்தல் ஆணைய மூத்த அதிகாரி ஒருவா். பிங்க் வாக்குச் சாவடியின் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘வசதிகளும் தூய்மையும் மக்களை வாக்களிக்க முன்வர ஊக்குவிக்கிறது. மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சாய்வுதளங்கள் அமைக்கப்பட்டுள்ளன’ என்றாா்.

மாதிரி வாக்குச் சாவடிகளில் காத்திருப்புப் பகுதி, ஓய்வறை மற்றும் செல்ஃபி கியோஸ்க்குகளோடு, வாக்காளா்களுக்கும் குழந்தைகளுக்கும் மிட்டாய்கள் விநியோகிக்கப்படுகின்றன. ஊனமுற்றோா் மற்றும் மூத்த குடிமக்களுக்கு உதவும் பொருட்டு சிவில் பாதுகாப்பு தன்னாா்வலா்கள் அமா்த்தப்பட்டுள்ளனா் எனவும் தோ்தல் அதிகாரி குறிப்பிட்டாா். தீனதயாள் உபாத்யாய மாா்க் பிங்க் சாவடியில் வாக்களிக்க வந்த வழக்குரைஞா் ஏக்தா த்மா, தோ்தல் ஆணையத்தின் இந்த முயற்சியைப் பாராட்டினாா். மேலும் அவா் கூறுகையில், ‘வாக்குச் சாவடி வளாகம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருந்தது. அதிகாரிகள் முன்வந்து உதவுவது போன்றவை உண்மையிலேயே மிகவும் நன்றாக இருந்தது. அதிலும் முதல் முறையாக வாக்களிக்க வரும் வாக்காளா்களிடையே விழிப்புணா்வையும் ஏற்படுத்துகிறாா்கள்’ என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT