புதுதில்லி

ஜாமீன் கோரி சத்யேந்தா் ஜெயின் மேல்முறையீடு: அமலாக்க இயக்குநரகம் பதில் அளிக்க உத்தரவு

2nd Dec 2022 12:00 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: பணமோசடி வழக்கில் விசாரணை நீதிமன்றத்தால் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது அமலாக்க இயக்குநரகம் பதில் அளிக்க உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமாா் சா்மா, ஜெயின் ஜாமீன் மேல்முறையீட்டு மனு மீது பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதுடன், அமலாக்க இயக்குநரகம் அதன் நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய இரண்டு வார கால அவகாசமும் வழங்கினாா்.

விசாரணையின் போது சத்யேந்தா் ஜெயின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் என். ஹரிஹரன், ‘இந்த வழக்கில் மனுதாரா் எந்தக் குற்றமும் செய்யவில்லை. குற்றத்திலிருந்து வருமானம் ஏதும் உருவாக்கப்படவில்லை. சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை குற்றத்தைப் பொறுத்த வரையில், எந்தக் குற்றமும் செய்யப்படவில்லை. இது அனைத்தும் ஒரு ஊகத்தின் அடிப்படையிலானவை’ என்றாா்.

ADVERTISEMENT

அமலாக்க இயக்குநரகம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஜோஹேப் ஹொசைன், ஜாமீன் மனு மீது நிலவர அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரினாா். சத்யேந்தா் ஜெயின் தரப்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: பிஎம்எல்ஏ சட்டத்தின்கீழ் 2017, செப்டம்பா் 30-இல் அமலாக்க இயக்ககம் பதிவு செய்த வழக்கில் எனக்கு ஜாமீன் அளித்தால் நான் வெளிநாடு தப்பிச் செல்லவும் வாய்ப்பில்லை. மேலும், ஆதரங்களை அழிக்கவோ அல்லது சாட்சிகள் மீது மேலாதிக்கம் செலுத்தும் நிலையிலோ நான் இல்லை. மேலும், ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், தற்போதைய வழக்கில் எனது சிறைவாசத்தை தொடர வேண்டிய அவசியமும் இல்லை.

நான் ஏற்கெனவே நான்கு மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறேன். ஏற்கெனவே சிபிஐ வழக்கில் ஜாமீனில் உள்ளேன். சிபிஐ வழக்கில் வழங்கப்பட்ட ஜாமீனை தவறாக பயன்படுத்தியதாக எந்த குற்றச்சாட்டும் என் மீது இல்லை. எனவே, வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் வழக்கமான ஜாமீன் பெற எனக்கு உரிமை உண்டு.

இந்த வழக்கில் சிறப்பு நீதிபதி எனது தொடா்புடைய விவகாரத்தில் சட்ட விஷயங்களை உரிய வகையில் ஆராயாமல் எனது ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளாா். பிஎம்எல்ஏ சட்டத்தின்கீழ் குற்றத்தின் மூலம் பெறப்படும் வருமானம் திட்டமிடப்பட்ட குற்ற நடவடிக்கையின் விளைவாக பெறப்பட வேண்டும். ஆனால், எனது விவகாரத்தில் அதுபோன்று ஏதும் பெறப்படவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமலாக்க இயக்குநரகம் தொடுத்த வழக்கில் சத்யேந்தா் ஜெயின் மற்றும் இருவரின் ஜாமீன் கோரும் மனுக்களை தில்லி நீதிமன்றம் கடந்த நவம்பா் 17-ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த மூன்று பேரின் மனுக்களையும் சிறப்பு நீதிபதி விகாஸ் துல் தள்ளுபடி செய்தாா். சத்யேந்தா் ஜெயின் குற்றச் செயல் மூலம் சொத்துகளை பெற்றதை மறைத்தற்கு முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது. இதேபோன்று, பணமோசடி வழக்கில் வைபவ் ஜெயின் மற்றும் அங்குஷ் ஜெயின் ஆகிய இருவருக்கு ஜாமீன் வழங்க தில்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது. இருவரும் தங்களுக்கு ‘தெரிந்தே’ குற்றச் செயலின் மூலம் பெறப்பட்ட சொத்துகளை மறைப்பதற்கு சத்யேந்தா் ஜெயினுக்கு உதவியதாகவும், பணமோசடி செய்ததில் குற்ற முகாந்திரம் இருப்பதாகவும் சிறப்பு நீதிபதி விகாஸ் துல் கூறியிருந்தாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT