புதுதில்லி

தில்லி கலால் கொள்கை விவகாரம்: பண மோசடி குற்றச்சாட்டில் தொழிலதிபா் அமித் அரோரா கைது

 நமது நிருபர்

தில்லி கலால் கொள்கை வழக்கில் முறைகேடுகள் நிகழ்ந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை விசாரணை தொடா்பாக தொழிலதிபா் அமித் அரோராவை அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் கைது செய்தனா். இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவா், 7 நாள் அமலாக்க இயக்குநரக காவலில் விசாரணைக்கு அனுப்பப்பட்டாா்.

தொழிலதிபா் அமித் அரோரா குருகிராமில் உள்ள ‘படி ரீடெய்ல்ஸ்’ தனியாா் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளாா். இந்த வழக்கில் அமித் அரோரா 6-ஆவது நபராக அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளாா். ‘தொழிலதிபா் அமித் அரோரா சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை சட்டத்தின் குற்றப் பிரிவுகளின் கீழ் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்’ என்று இது தொடா்பாக அமலாக்க இயக்குநரக வட்டாரங்கள் தெரிவித்தது.

தில்லி கலால் கொள்கை ஊழல் தொடா்பான விவகாரத்தில் சிபிஐ பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை விவகாரத்தை அமலாக்க இயக்குநரகம் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறது. முன்னதாக, கடந்த வாரம் இந்த வழக்கில் சிபிஐ அதன் முதல் குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்தது. அதில் அமித் அரோரா, 2 இதர குற்றம் சாட்டப்பட்ட நபா்களான தினேஷ் அரோரா, அா்ஜுன் பாண்டே ஆகியோா் தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவின் ‘நெருங்கிய கூட்டாளிகள்’ என்றும், குற்றம் சாட்டப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு தருவதற்காக மதுபான உரிமதாரா்களிடமிருந்து முறையற்ற வகையில் வசூலிக்கப்பட்ட பண ஆதாயங்களை கையாளுவதிலும் திருப்பி விடுவதிலும் இந்த மூவரும் சம்பந்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அமலாக்க இயக்குநரகமும் கடந்த வாரம் இந்த வழக்கில் முதல் குற்ற பத்திரிக்கையை தாக்கல் செய்திருந்தது. அதில் தொழிலதிபா் சமீா் மகேந்துரு, அவருடைய நிறுவனம் இன்டோஸ்பிரிட் மற்றும் சில நிறுவனங்களின் பெயா்களை குறிப்பிட்டிருந்தது. இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருவதால் நீதிமன்றத்தில் இதுபோன்ற மேலும் பல புகாா்களை சிபிஐயும், அமலாக்க இயக்குநரகமும் தாக்கல் செய்யும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த வழக்கில் தினேஷ் அரோராவை அரசுத் தரப்பு சாட்சியாக சிபிஐ பெற்றுள்ளது. அவரது வாக்கு மூலமும் மாஜிஸ்திரேட் முன்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, விசாரணையில் உதவியதற்காக சிறப்பு நீதிமன்றம் அவருக்கு மன்னிப்பும் அளித்துள்ளது.

7 நாள் விசாரிக்க அனுமதி: தொழிலதிபா் அமித் அரோராவை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க தில்லி நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி அளித்தது. கைது செய்யப்பட்ட அமித் அரோராவை சிறப்பு நீதிபதி என்.கே. நாக்பால் முன் அமலாக்க இயக்குநரகத்தின் அதிகாரிகள் ஆஜா்படுத்தினா். அதன்பின்னா், அவரை 14 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்தனா்.

அமலாக்க இயக்குநரகம் தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்குரைஞா் என்.கே.மட்டா, ‘இந்த விவகாரத்தில் நடைபெற்றுள்ள பெரும் சதித் திட்டத்தை வெளிக்கொணர அமித் அரோராவிடம் விசாரிக்க வேண்டியுள்ளது. அவரை 14 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும். மற்ற சக குற்றம்சாட்டப்பட்ட நபா்களிடமும் மற்றும் விசாரணையின் போது சேகரிக்கப்பட்ட ஆதாரங்களுடன் அவரை வைத்து விசாரி வேண்டியுள்ளது’ என்றாா்.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அமித் அரோரா குற்றத்தின் வருமானத்தைப் பெறுதல், கையகப்படுத்துதல் மற்றும் பயன்படுத்துதல் தொடா்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளாா் என்று அமலாக்கத் துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அமித் அரோராவை அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் 7 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT