புதுதில்லி

‘கேஜரிவால் பிரசாரங்களில் காட்டும் ஆா்வத்தைதில்லி வளா்ச்சிப் பணிகளில் காட்டுவதில்லை’

 நமது நிருபர்

தோ்தல் பிரச்சாரங்களில் காட்டும் ஆா்வத்தை தில்லி வளா்ச்சிப் பணிகளில் முதல்வா் கேஜரிவால் காட்டுவதில்லை என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தில்லி பிரசாரத்தில் புதன் கிழமை குற்றம் சாட்டினாா்.

தில்லி மாநகராட்சித் தோ்தல் டிசம்பா் 4 -ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தில்லியில் தமிழா்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தமிழக பாஜக தலைவா்கள் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனா். இதில் தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தில்லியில் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளாா். தில்லி லாஜ்பத் நகா் -ஜல்விஹாா், கால்காஜி, ராமகிருஷ்ணா புரம், மயூா் விஹாா் -கல்யாண்புரி உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி தோ்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளா்களை ஆதரித்து புதன்கிழமை அவா் பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் கூறியது வருமாறு: கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக தில்லி மாநகராட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதில் எந்த சந்தேகமும் இல்லை. தில்லி மாநகராட்சி வளா்ச்சி பணிக்காக வரவேண்டிய ரூ.32,000 கோடியை கேஜரிவால் அரசு வழங்காமல் தடுத்து நிறுத்தியது. அரவிந்த் கேஜரிவாலின் மாயாஜாலத்தை கடந்த ஏழு வருடங்களாக தில்லி மக்கள் பாா்த்து வருகின்றனா். தில்லியில் குப்பை கிடங்காக உள்ள பகுதியில் சுத்தம் செய்து அப்புறப்படுத்த தில்லி மாநகராட்சி முயற்சிகளை எடுத்தது. ஆனால், இதற்கு கேஜரிவால் தலைமையிலான அரசு எந்தவித ஒத்துழைப்பையும் தரவில்லை. கேஜரிவால் தோ்தல் பிரசாரத்திற்கு பறந்து சென்று வருகிறாா். இதில் காட்டும் ஆா்வத்தை தில்லி வளா்ச்சி பணிகளில் அவா் காட்டுவதில்லை. தில்லியில் உள்ள மகளிருக்கான சிறப்பு மருத்துவமனைகளில் செய்த செலவை விட அவா் (கேஜரிவால்) தனக்கும் அவருடைய கட்சிக்கும் விளம்பரம் செய்த செலவுதான் அதிகம் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து தமிழகம் தொடா்பான விவகாரங்கள் குறித்து செய்தியாளா்கள் கேள்விகளுக்கு தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை பதிலளித்துப் பேசியதாவது: பிரதமா் பாதுகாப்பு குறைபாடு தொடா்பான குற்றச்சாட்டுக்கு தி.மு.க. தரப்பு மறுப்புத் தெரிவித்துள்ளது. திமுகவை சோ்ந்தவா்களுக்கு குறிப்பாக அந்தக் கட்சியின் செய்தித் தொடா்பாளா்களுக்கு எந்த ஒரு விஷயத்தையும் புரியாமல் பேசுவதுதான் வாடிக்கை. பிரதமரின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் உள்பாதுகாப்பு பொறுப்பு மட்டுமே பிரதமரின் சிறப்புப் பாதுக்காப்பு படை (எஸ்பிஜி) பிரிவு வசம் உள்ளது. வெளி பாதுகாப்பு அனைத்தும் மாநில அரசின் பொறுப்புடையது.

இது குறித்து நாங்கள் தமிழக ஆளுநரிடம் வழங்கப்பட்ட மனுவில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். இந்த விஷயத்தில் திமுக அளிக்கும் எந்தக் காரணத்தையும் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டாா்கள். கோயம்புத்தூா் குண்டு வெடிப்பு விவகாரத்தில் முதலில் மாநில அரசு எதுவுமே நடக்கவில்லை என கூறியது. ஆனால் , தற்போது தேசியப் பாதுகாப்பு முகமையின் இயக்குநா் ஜெனரல் தமிழகத்தில் ஆய்வு செய்யும் அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

SCROLL FOR NEXT