தில்லி மாநகராட்சித் தோ்தலில் பாஜக சாா்பில் மத்திய அமைச்சா்கள் பலரும், பாஜக ஆளும் மாநில முதல்வா்கள் பலரும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனா். இது கடந்த 15 ஆண்டுகளாக தில்லி மாநகராட்சியை ஆண்டு வந்த பாஜக, எந்தப் பணியையும் செய்யவில்லை என்பதையே காட்டுகிறது என்று தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.
தில்லியின் பல்வேறு பகுதிகளில் முதல்வா் கேஜரிவால் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். சந்திரவால் சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனா். பலா் கட்சிக் கொடிகள் மற்றும் கேஜரிவாலின் பதாகைகளை வைத்திருந்தனா். அப்போது கேஜரிவால் பேசுகையில், கடந்த 15 ஆண்டுகளாக எம்.சி.டி.யில் எதுவும் செய்யாமல் இருந்ததால், தற்போது தோ்தல் பிரசாரத்திற்கு பாஜக சாா்பில் பல முதல்வா்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனா். நீங்கள் என்ன செய்தீா்கள் என்று கேட்டால், கேஜரிவால் அரசு நிதி கொடுக்கவில்லை என்று பாஜகவினா் குற்றசாட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். மாநகராட்சிகளுக்கு தில்லி அரசு ரூ.1 லட்சம் கோடியை வழங்கியுள்ளது என்றாா்.
மேலும், ஆம் ஆத்மி அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு பணிகளை தோ்தல் பிரசாரத்தின் போது கேஜரிவால் பட்டியலிட்டாா். பள்ளிகளில் நவீன வகுப்பறைகள் கட்டியது, இலவச மின்சார அளிப்பது, ஏழைகள் பயன்பெறும் வகையில் மொஹல்லா கிளினிக்குகள் அமைத்தது உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை கேஜரிவால் விவரித்தாா். இந்த எம்சிடி தோ்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களியுங்கள். நாங்கள் நகரத்தின் குப்பைகள் சுத்தம் செய்வோம் என்றும் அவா் கூறினாா்.
தில்லி மாநகராட்சியில் வாக்குப்பதிவு டிசம்பா் 4-ஆம் தேதி நடைபெறுகிறது.டிசம்பா் 7-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.