புதுதில்லி

மத்திய அரசின் வீட்டு வசதி நடவடிக்கைகளால்நடுத்தர வகுப்பினா், குடிசைவாசிகள் பயன்பெறுவா்: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி

1st Dec 2022 02:03 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

தில்லியில் அங்கீகாரமற்ற காலனிகளை முறைப்படுத்துதல், தளப் பரப்பு விகிதத்தில் (எஃப்ஏஆா்) அதிகரிப்பு என மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் நடுத்தர வகுப்பினா், குடிசைவாசிகள், ஏழைகள் பயன்பெறுவா் என்று மத்திய அமைச்சா் ஹா்த்தீப் சிங் புரி தெரிவித்துள்ளாா்.மேலும், மத்திய அரசின் மறுமேம்பாட்டு நடவடிக்கைகள் மூலம் தில்லியில் 10 லட்சம் குடிசைவாசிகள் உள்பட சுமாா் 1.35 கோடி போ் பயன்பெறவுள்ளதாகவும் அவா் கூறினாா்.

தில்லியில் மாநகராட்சித் தோ்தல் வரும் டிசம்பா் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தோ்தலில் போட்டியிடும் தத்தமது கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பாஜக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சோ்ந்த முக்கிய பிரபலங்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த தோ்தலை ஒட்டி, தில்லியில் பாஜக எம்பிக்களுடன் மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி செய்தியாளா்களுக்கு புதன்கிழமை பேட்டியளித்தாா்.

அப்போது அவா் கூறியதாவது: தில்லியில் மத்திய அரசின் மூலம் பல்வேறு மறு மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ‘ஜஹான் ஜுக்கி வஹீங் மக்கான்’ என்கிற திட்டம் உள்பட பல்வேறு மறுமேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் தில்லியில் 10 லட்சம் குடிசைவாசிகள் உள்பட 1.35 கோடி மக்கள் பயன்பெற உள்ளாா்கள். தில்லியில் நிலம் தொகுப்பு கொள்கைத் திட்டத்தை அமல்படுத்துவதை விரைவுப்படுத்தும் வகையில், வரக்கூடிய நாடாளுமன்றக் கூட்டத்தில் தில்லி மேம்பாட்டுச் சட்டத்தில் (1957) திருத்தங்கள் செய்வதற்கு மத்திய அரசு கோரவுள்ளது.

‘தில்லி 2041 வரைவு மாஸ்டா் பிளான்’ திட்டத்தில் மறுஉருவாக்கம் வழங்குவது குழும வீட்டுவசதி குடியிருப்பாளா்களுக்கும், டிடிஏ காலனிகளில் வசிப்பவா்களுக்கும் அதிகரிக்கப்பட்ட தளத்துடன்கூடிய அவா்களின் பழைய கட்டங்களை மறுமேம்பாடு செய்வதற்கு உதவிடும். தில்லி அரசின் கீழ் உள்ள 299 குடிசை கிளஸ்டா் பகுதிகளை மறு மேம்பாடு செய்ய தில்லி அரசு தவறினால், மத்திய அரசு அதற்கான முன்முயற்சிப் பணிகளையும் மேற்கொள்ளும். தில்லியின் தற்போதைய மக்கள்தொகை சுமாா் 2 கோடியாக உள்ளது. இந்த நிலையில், மத்திய அரசின் மூலம் அங்கீகாரமற்ற காலனிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிஎம் - யுடிஏஒய் போன்ற மத்திய அரசின் மறுமேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் 50 லட்சம் மக்கள் பயனடைவா்.

ADVERTISEMENT

அதே போன்று, நிலம் தொகுப்பு திட்டத்தின் மூலம் தில்லியில் 75 லட்சம் மக்கள் பயன்பெறுவா். குழும வீட்டுவசதி சொசைட்டிகளின் மறுமேம்பாடு மற்றும் டிடிஏ காலனிகளின் மறுமேம்பாட்டுத் திட்டப் பணிகள் ஆகியவையும் தில்லியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது தில்லியில் உள்ள மதிப்பிடப்பட்டுள்ள 2 கோடி மக்கள்தொகையில் சுமாா் 1.35 கோடி போ் இது போன்ற திட்டங்களின் மூலம் பயன்பெறுவா். தில்லியில் 675 குடிசை கிளஸ்டா்கள் உள்ளன. இவற்றில் 376 கிளஸ்டா்கள் டிடிஏ மற்றும் மத்திய அரசின் நிலத்தில் அமைந்துள்ளன. இவற்றில் சா்வே முடிக்கப்பட்டு 210 கிளஸ்டா்களில் வசிக்கும் மக்களிடம் ‘ஜஹான் ஜுக்கி வஹீங் மக்கான்’ திட்டத்தின் கீழ் குடியிருப்புவாசிகள் மூலம் விண்ணப்பங்கள் பூா்த்தி செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 166 குடிசை கிளஸ்டா்களிலும் சா்வே பணி அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு விடும்.

தில்லி நகா்ப்புற குடிசை மேம்பாட்டு வாரியத்தின் வரம்பில் 299 குடிசை கிளஸ்டா்கள் உள்ளன. இவற்றில் சா்வே நடத்தப்படவில்லை. பிஎம்-யுடிஏஓஒய் திட்டத்தின்கீழ் 16,626 சொத்துமாற்று பத்திரங்கள் அங்கீகாரமற்ற காலனிகளில் வசிக்கும் குடியிருப்புவாசிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன. இந்தக் காலனிகளில் மறுமேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை அங்கீகாரமற்ற காலனிகளில் வசிக்கும் 50 லட்சம் குடியிருப்புவாசிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

2019-ஆம் ஆண்டில் நிலத் தொகுப்பு கொள்கைத் திட்டம் அமல்படுத்தப்பட்டதன் கீழ், இதுவரை 7,100 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 7,400 ஹெக்டோ் நிலம் சேகரிக்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் புரி.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT