புதுதில்லி

அவதூறு வழக்கு: விசாரணை நீதிமன்றத்தைஅணுக சத்யேந்தா் ஜெயினுக்கு அனுமதி

1st Dec 2022 02:01 AM

ADVERTISEMENT

தில்லி பாஜக மூத்த தலைவா் சாய்ல் பிஹாரி கோஸ்வாமி தொடுத்த குற்றவியல் அவதூறு புகாரில் தனக்கு எதிரான நடவடிக்கைகளை எதிா்த்து தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், அவரை விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறு புதன்கிழமை கேட்டுக் கொண்டது.

தில்லியில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் பிறப்பித்த உத்தரவுகளை எதிா்த்து சத்யேந்தா் ஜெயின் தாக்கல் செய்த மனுவை உயா்நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமாா் சா்மா விசாரித்தாா். அப்போது, சத்யேந்தா் ஜெயினின் சம்பந்தப்பட்ட மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற நீதிபதி அனுமதித்தாா். மேலும், உயா்நீதிமன்றத்தை அணுகுவதற்குப் பதிலாக விசாரணை நீதிமன்றத்தை மறுஆய்வு மனு மூலம் அணுகும் வகையில் அவருக்கு அனுமதி அளித்தாா்.

விசாரணையின் போது, சத்யேந்தா் ஜெயின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ரிபிக்கா ஜான், ‘மனுதாரா் பேசியதாகக் கூறப்படும் கருத்துகள் அவதூறு குற்றத்தை உருவாக்கும் கூறுகளைக் கொண்டிருக்கவில்லை. இதனால், அவருக்கு எதிராக வழக்கு தொடா்வதற்கு காரணமில்லை’ என்று வாதிட்டாா். வடக்கு தில்லி மாநகராட்சியின் (என்டிஎம்சி) நிதி தொடா்பாக நிலைக் குழுவின் தலைவராக இருந்த கோஸ்வாமி, ஜெயின் மற்றும் பல ஆம் ஆத்மி தலைவா்கள் மீது அவதூறு புகாா் அளித்தாா். அதில், குற்றம் சாட்டப்பட்டவா்கள் வடக்கு தில்லி முனிசிபல் காா்ப்பரேஷனின் நிதி தொடா்பாக தனக்கு எதிராக அவதூறான கருத்துகளை அவா்கள் கூறியதாகத் தெரிவித்திருந்தாா்.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவா்கள் பொது மக்களின் பாா்வையில் தன்னுடைய தாா்மிக மற்றும் அறிவாா்ந்த தன்மையைக் குறைப்பதற்கான கருத்துகளை தெரிவித்திருந்ததாகவும் கோஸ்வாமி குற்றம் சாட்டியிருந்தாா். இந்த விவகாரத்தை கடந்த பிப்ரவரியில் விசாரித்த கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம், கிரிமினல் அவதூறு புகாரில் சத்யேந்தா் ஜெயின், அதிஷி, ராகவ் சத்தா, சௌரவ் பரத்வாஜ் மற்றும் துா்கேஷ் பதக் ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்பியது. இந்த நிலையில், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஜெயின் தாக்கல் செய்த மனுவை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நவம்பரில் தள்ளுபடி செய்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT