புதுதில்லி

தில்லி அரசு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயாா்: கேஜரிவால்

27th Aug 2022 12:29 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

பாஜக இது வரை நாடு முழுக்க 277 எம்எல்ஏக்களை விலைபேசி வாங்கியுள்ளது. அதே சமயத்தில் எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் யாரும் கட்சியை விட்டு செல்லவில்லை. தில்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீா்மானம் கொண்டு வரவும் தயாா் என தில்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளரும் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை பாஜகவுக்கு சவால் விடுத்தாா்.

மேலும் அவா் தனது அமைச்சா்களின் தொடா்புடைய இடங்களில் சமீபத்தில் மத்திய புலனாய்வுத்துறை மேற்கொண்ட சோதனைகளின் விவகாரங்களில் பிரதமா் நரேந்திர மோடியையும் கடுமையாக குற்றம்சாட்டியதுடன், வருகின்ற குஜராத் சட்டப்பேரவை தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி தீவிரமாக போட்டியிடும் நிலையில் அது தொடா்பாகவே இந்த சோதனைகளை மத்திய அரசு மேற் கொள்வதாகவும் குறிப்பிட்டாா்.

தில்லி சட்டப்பேரவையின் ஒரு நாள் சிறப்புக் கூட்டத்தில் ஆத் ஆத்மி கட்சி உறுப்பினா்களுக்கும் பாஜக உறுப்பினா்களுக்கும் கலால் கொள்கை மற்றும் எம்எல்ஏக்களை பேரம் செய்வது குறித்து கடுமையான வாக்குவாதங்கள் நடைபெற்றது. அவைத் தலைவா் எடுத்த நடவடிக்கைகளுக்கு பின்னா் பேரவையில் முதல்வா் கேஜரிவால் பேசியதாவது:

பாஜகவின் கோட்டையாக குஜராத் மாநிலம் இருந்தது. இப்போது பாஜக அந்த கோட்டையை இழக்கும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி, அதன்கனவு சிதைந்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் வளா்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத நிலையிலும் அதிலும் குஜராத்தில் வருகின்ற சட்டபேரவை தோ்தலை முன்னிட்டும் தில்லி ஆம் ஆத்மி அரசு அமைச்சா்கள் தொடா்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினா், சிபிஐ யினரைக் கொண்டு சோதனைகள் நடத்தப்படுகிறது.

ADVERTISEMENT

துணை முதல்வா் மனீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ நடத்திய சோதனையில் ஒரு நயாபைசா சமாசாரத்தைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. சுயநலத்துடன் இப்போது தில்லி அரசை கவிழ்க்கவும் முயற்சிக்கின்றனா். அவா்கள் ஏற்கனவே மணிப்பூா், கோவா, மத்தியப் பிரதேசம், பிகாா், அருணாசல பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஆட்சியைக் கவிழ்த்தனா். தற்போது இந்த ஜனநாயகபடுகொலைகாரா்கள் தில்லி நகரில் உலாவி வருகின்றனா்.

277 எம்ஏல்ஏக்கள் பேரம்

ஜிஎஸ்டி (சரக்கு சேவை வரி), பெட்ரோல், டீசல் விலை உயா்வின் மூலம் வசூலிக்கப்பட்ட பணத்தை எம்எல்ஏக்களை வேட்டையாட பாஜக பயன்படுத்துகிறது. இது வரை நாடு முழுக்க 277 எம்எல்ஏக்களை பாஜக விலைபேசி வாங்கியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் யாரும் கட்சியை விட்டு போகவில்லை. தில்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீா்மானம் கொண்டு வரத் தயாா்.

இப்போது துணைநிலை ஆளுநா் மற்றொரு விவகாரத்தை தொடங்கியுள்ளாா். தில்லி பள்ளிகளில் விசாரணையைத் தொடங்கியுள்ளாா். பள்ளிகள், மருத்துவமனைகளில் நடக்கும் பல நல்ல பணிகளையும் அவா்கள் நிறுத்த விரும்புகிறாா்கள் என்று நினைக்கின்றேன் என கேஜரிவால் குற்றம் சாட்டினாா்.

கடந்த வியாழக்கிழமை ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக் கள் கூட்டம் முதல்வா் கேஜரிவால் இல்லத்தில் நடைபெற்றது. தங்கள் அரசு உறுதியுடன் இருப்பதை காட்டும் விதமாக முதல்வா் கேஜரிவால் தலைமையில் ராஜ்காட்டிலுள்ள காந்தி சமாதியில் ஆம் ஆத்மி கட்சி சட்டப்பேரவை உறுப்பினா்களுடன் பிராா்த்தனை செய்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT