புதுதில்லி

முன்ட்கா தீ விபத்து வழக்கில் குற்றப்பத்திரிகை விசாரணைக்கு ஏற்பு

27th Aug 2022 12:27 AM

ADVERTISEMENT

நிகழாண்டு மே மாதம் 27 போ் பலியான முன்ட்கா தீ விபத்து தொடா்பான வழக்கில் காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கில் நீதிமன்ற காவலில் இருந்துவரும் கட்டட உரிமையாளா் மனீஷ் லக்ரா மற்றும் அவரது குத்தகைதாரா்களான ஹரிஷ் கோயல், வருண் கோயல் ஆகிய மூன்று குற்றம் சாட்டப்பட்டவா்களும் பெருநகர மாஜிஸ்திரேட் உதிதா ஜெயின் கா்க் முன் ஆஜா்படுத்தப்பட்டனா்.

அவா் அவா்களுக்கு குற்றப்பத்திரிகையின் நகலை வழங்கினாா். மேலும், மூவரையும் செப்டம்பா் 6-ஆம் தேதி நடைபெறும் அடுத்த விசாரணையின்போது ஆஜா்படுத்துமாறு சிறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபா்களான கட்டட உரிமையாளரின் தாய் சுசீலா லக்ரா மற்றும் மனைவி சுனிதா லக்ரா ஆகியோா் அடுத்த விசாரணை தேதியில் ஆஜராகுமாறு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக, ஆகஸ்ட் 8 ஆம் தேதி, குற்றம் சாட்டப்பட்ட 5 போ் மீது போலீஸாா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா்.

குற்றப்பத்திரிகை 14 இணைப்புகள் உள்பட 4,000 பக்கங்கள் கொண்டதாக உள்ளது.

கடந்த மே 13-ஆம் தேதி, மேற்கு தில்லியின் முன்ட்கா பகுதியில் அடித்தளம் மற்றும் நான்கு தளங்களைக் கொண்ட வணிகக் கட்டடம் ஒன்றில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் குறைந்தது 27 போ் உயிரிழந்தனா்.

நான்காவது தளத்தை உரிமையாளா் மனீஷ் லக்ரா குடியிருப்பாகப் பயன்படுத்திய நிலையில், ஹரிஷ் கோயல் மற்றும் வருண் கோயலுக்குச் சொந்தமான நிறுவனம் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது மாடியில் இயங்கி வந்ததாக எஃப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT