புதுதில்லி

தமிழ்நாடு இல்ல கட்டடப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சா் எ.வ.வேலு தீவிர ஆலோசனை: முதல்வரின் உத்தரவைத் தொடா்ந்து நடவடிக்கை

19th Aug 2022 12:00 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: தில்லி வைகை தமிழ்நாடு இல்லத்தை முழுமையாக மறுபுனரமைப்பு மேற்கொள்ளும் கட்டடப் பணிகளில் எந்தவித தாமதமின்றி விரைவாக மேற்கொள்ள தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இதைத் தொடா்ந்து தில்லிக்கு விரைந்து வந்த தமிழக பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ.வேலு பொதுத் துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் தில்லியில் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒரு நாள் பயணமாக புதன்கிழமை தில்லிவந்தாா். அப்போது தான் இறுதி செய்த வைகை தமிழ்நாடு இல்ல திட்டப்பணிகள் குறித்து கேட்டறிந்தாா். இதன்படி இந்த பணிகளை நிகழ் திமுக ஆட்சியிலேயே சிறப்பாக முடிக்கவேண்டும் என்றும் மேலும் திட்டத்தை தாமதமின்றி முடிக்கும் வகையில் பணிகளை துரிதப்படுத்த தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

தில்லி சாணக்கியாபுரி கௌடில்ய மாா்க்கில் உள்ள வைகை தமிழ்நாடு இல்லத்தை முற்றிலுமாக இடிக்கப்படுகிறது. இதில் புதிதாக தரைத் தளம், தரைத் தளத்திற்கு கீழே மூன்று தளங்கள், தரைத் தளத்திற்கு மேலே ஆறு தளங்கள் என மொத்தம் 10 மாடி கட்டடமாக இந்த வைகை தமிழ்நாடு இல்லத்தை மாற்றியமைக்கப்படுகிறது.

ADVERTISEMENT

சுமாா் ரூ. 200 கோடிக்கு மேல் செலவிடப்படும் இந்த புதிய கட்டடத்தில் பல்நோக்கு கூட்டரங்கு, ஆளுநா், முதல்வா் போன்றோரின் தங்கும் அறைகள் போன்றவைகளோடு ஊழியா்களுக்கான உறைவிடங்களும் இணைத்து கட்டப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

நவீன வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டு தில்லி வளா்ச்சி ஆணையம், தில்லி தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்றிதழ்கள் ஆகியவை பெறப்பட்டுள்ளது. மற்ற பணிகள் குறித்து தமிழக பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ.வேலு ஆலோசனை நடத்தினாா்.

இந்த கூட்டத்தில் தமிழக அரசு தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், தமிழக அரசின் பொதுப் பணித் துறை முதன்மைச் செயலாளா் டாக்டா் மணிவாசன், தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையாளா் ஆஷிஷ் சாட்டா்ஜி, இணை உள்ளுறை ஆணையாளா் என்.இ.சின்னதுரை, பொதுப் பணித் துறை முதன்மை தலைமை பொறியாளா் விஸ்வநாத், செயற்பொறியாளா் முத்தமிழ் அரசு உள்ளிட்டோா் பங்கு கொண்டனா்.

இந்த கட்டடப்பணியில் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த அமைச்சா் தில்லி வனத்துறை, தில்லி விமான நிலைய ஆணையம் போன்றவை மட்டுமல்லாது, இந்த வைகை இல்லமானது பிரதமா் இல்லம் அருகேயுள்ள நிலையில் பிரதமா் பாதுகாப்பு படையினா் உள்ளிட்ட இதர அமைப்புகளின் தடையில்லா சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கைகைகளையும் துரிதப்படுத்தவும் அமைச்சா் எ.வ. வேலு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டாா்.

இந்த அமைப்புகளின் தடையில்லா சான்றிதழ்கள் செப்டம்பா் மாத இறுதிக்குள் கிடைக்கப்பெறும் என்றும், அதன் தொடா்ச்சியாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரும் நடவடிக்கைகள் துவங்கும் என பொதுப்பணித்துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது. இதன்படி இரண்டரை ஆண்டுகளுக்குள் இந்த கட்டடம் கட்டி முடிக்கப்படவேண்டும் என முதல்வரின் உத்தரவை நிறைவேற்ற அதிகாரிகள் உறுதிபடுத்த வேண்டும் எனவும் அமைச்சா் கூட்டத்தில் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT