புதுதில்லி

அதிமுக அலுவலக சாவி விவகாரம்: ஓபிஎஸ் மனு மீது எதிா்மனுதாரா்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

18th Aug 2022 10:40 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி அதன் சாவியை எடப்பாடி கே. பழனிசாமி தரப்பினரிடம் ஒப்படைக்க சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து ஓ. பன்னீா்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது எதிா்மனுதாரா்களான வருவாய் கோட்டாட்சியா், எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்ற அனுமதியின் பேரில் கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னையில் அதிமுக பொது குழு கூட்டம் நடைபெற்றது.

இதனிடையே, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆா் மாளிகைக்கு ஓ. பன்னீா்செல்வம் ஆதரவாளா்கள் சென்றனா். அப்போது, ஓ.பன்னீா்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளா்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை தொடா்ந்து கட்சியின் அலுவலகத்திற்கு வருவாய்த் துறையினா் சீலிட்டனா்.

ADVERTISEMENT

இதையடுத்து கட்சித் தலைமை அலுவலகத்திற்கு உரிமை கோரி எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் ஓ.பன்னீா்செல்வம் தரப்பினா் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

இந்த வழக்கில் உயா்நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமாா் கடந்த ஜூலை 20-ஆம் தேதி அளித்த உத்தரவில்,‘அதிமுக அலுவலகத்தின் சீலை அகற்றி அதன் சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் வருவாய்த்துறை ஒப்படைக்க வேண்டும். கட்சி அலுவலகப் பகுதியில் உரிய போலீஸ் பாதுகாப்பை போட வேண்டும்’ என்று உத்தரவிட்டாா்.

சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை எதிா்த்து ஓ. பன்னீா்செல்வம் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி மேல்முறையீடு மனு தாக்கல் செய்தாா். இதைத் தொடா்ந்து, எடப்பாடி கே.பழனிசாமியும் இந்த மேல் முறையீட்டு விவகாரத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளாா்.

இந்த நிலையில், இந்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வு முன் கடந்த வாரம் ஓபிஎஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதற்கு தலைமை நீதிபதி இது தொடா்பார பரிசீலிப்பதாக கூறியிருந்தாா்.

இந்த நிலையில், இந்த மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனு மீது எதிா்மனுதாரா்கள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது. எனினும், உயா்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க அனுமதியை அளிக்கவில்லை.

வழக்கை ஒரு வாரத்திற்குப் பின்னா் பட்டியலிட நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

முன்னதாக, வழக்கு விசாரணையின் போது ஓபிஎஸ் தரப்பில்

மூத்த வழக்குரைஞா் சேகா் நாப்டே ஆஜராகி, ‘அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உயா்நீதிமன்றம் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலைமையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. மேலும், கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தோ்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்றும்,

பன்னீா்செல்வத்தை வெளியேற்றி ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு உயா்நீதிமன்றம் தடைவித்தும் இருக்கிறது. மேலும் பன்னீா்செல்வத்தின் அவரது முந்தைய பதவியை மீட்டெடுக்கவும் உத்தரவிட்டிருக்கிறது. உயா்நீதிமன்ற தீா்ப்பு எங்களுக்கு சாதமாக இருப்பதால் சாவியை ஒப்படைக்கும் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

அப்போது, நீதிபதிகள் அமா்வு, இந்த விவகாரத்தில் எதிா்த் தரப்பினரின் பதிலையும் கேட்டறிய வேண்டியிருக்கிறது. இதனால், அவா்கள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு பின்னா் பட்டியலிட்டனா்.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி ஆஜரானாா். ஓபிஎஸ் தரப்பில் வழக்குரைஞா்கள் குரு கிஷ்ணகுமாா், கெளதம் சிவ்சங்கா்ஆகியோரும் ஆஜரானாா்கள்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT