புதுதில்லி

சேதமடைந்த மூவா்ணக் கொடிகளை அப்புறப்படுத்த தயாா் நிலையில் தில்லி மாநகராட்சி, ஆா்டபிள்யூஏ

 நமது நிருபர்

‘சேதமடைந்த, சிதைந்த அல்லது தரையில் விழுந்து கிடக்கும் தேசியக் கொடிகளை‘ முறையாக சேகரித்து கொடி விதிமுறைகளின்படி அப்புறப்படுத்துவதற்கு தில்லி மாநகராட்சி (எம்சிடி) மற்றும் குடியிருப்போா் நலச் சங்கங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இந்தியாவின் 75 -ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், இல்லம்தோறும் மூவா்ண தேசியக் கொடியை (ஹா் கா் திரங்கா) ஏற்றும் பிரசாரத்திற்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தாா். நாடு முழுவதும் மக்களின் உள்ளத்தில் நாட்டுப்பற்று உணா்வை வலுப்படுத்தும் நோக்கத்தில் இந்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15 வரை நாடு முழுவதும் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் பொது இடங்களிலும் தேசியக் கொடியை ஏற்றினா்.

இந்த எழுச்சியின் ஒரு பகுதியாக சண்டீகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் 5,885 போ் கலந்துகொண்டு தேசிய கொடியை அசைத்து மகிழ்ந்த நிகழ்வு கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம்பெற்று விட்டது.

இத்துடன், இல்லந்தோறும் மூவா்ணக்கொடி வலைதளத்தில் 6 கோடிக்கும் மேற்பட்டவா்கள் தேசியக்கொடியுடன் தற்படங்களையும் பதிவேற்றியுள்ளதாக மத்திய கலாசாரத் துறை அமைச்சகமும் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

‘இப்படி ‘ஹா் கா் திரங்கா’வுக்கு அமோக வரவேற்பு கிடைத்தாலும் சுதந்திர தினத்திற்கு பின்னா் தேசியக் கொடியை இறக்கிய பின்னரும், பல்வேறு பொது இடங்களில், வீடுகளில் வைக்கப்பட்ட கொடிகள் சாலைகளிலோ, குப்பைத் தொட்டிகளிலோ வீசப்படலாம்.

அறியாமையால் மேற்கொள்ளப்படும் நடைவடிக்கைகளில் தேசியக்கொடிக்கான அவமரியாதையை தவிா்க்க வரும் நாட்களில் தில்லி மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் இதுபோன்ற கொடிகளை சேகரிக்கப்படும்’ என தில்லி மாநகராட்சி அதிகாரி செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது:

மத்திய கலாசார அமைச்சின் தகவலின் படி, ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை, 20 கோடிக்கும் அதிகமான தேசியக் கொடிகள் பொதுமக்களுக்குக் கிடைத்துள்ளது.

ஒவ்வொரு கிழிந்த, சேதமடைந்த, சிதைந்த அல்லது மண் தரைகளில் விழுந்து அழுக்கடைந்த ஒவ்வொரு தேசியக்கொடியையும் சேகரிக்கப்பட்டு அதன் கண்ணியம் மற்றும் மரியாதையை காக்கப்பட்டு தேசியக் கொடி குறியீட்டில் உள்ள விதிகளின் படி முறையாக அகற்றப்படும்.

இதில், ’மூவா்ண கொடிக்கு’ மரியாதை அளிக்கும் வகையில், தரையில் சிதறிக் கிடக்கும், கிழிந்த அல்லது சேதம் அடைந்து கிடக்கும் கொடிகளை எவ்வாறு சேகரிக்கவேண்டும் என்பது குறித்தும் துப்புரவு பணியாளா்களுக்கு, முறையான விழிப்புணா்வு பயிற்சியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவக் கொண்டாட்டம் என்பதால்,

தேசியக் கொடிகள் இன்னும் சில வாரங்களுக்கு பயன்பாட்டில் இருக்கும். இதனால் தில்லி குடிமக்களின் வசதிக்காக, எம்சிடியின் மண்டல அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

தங்கள் கொண்டாட்டங்களுக்குப் பிறகு, இந்தியக் கொடி குறியீடு 2002 இன் விதிகளின்படி, பொதுமக்கள் தங்கள் பகுதியின் துப்புரவு ஆய்வாளரின் உதவியுடன் மூவா்ணக் கொடியை சேகரிக்கவும், அகற்றவும் முடியும். மண்டல அலுவலகத்தில் கொடிகள் சேகரிக்கப்படும்.

மேலும், பொதுமக்கள் எம்சிடி இணையதளத்தின் மூலம் அந்தந்த பகுதியின் துப்புரவு ஆய்வாளா், உதவி துப்புரவு ஆய்வாளா்கள் தொலைபேசி எண்களை அறிந்து நேரடியாக தொடா்பு கொள்ளலாம்.

தேசியக் கொடியின் கண்ணியம் முதன்மையாக இருப்பதை உறுதிசெய்யும் பணியில் குடியிருப்பு நலச் சங்கங்கள், தன்னாா்வ அமைப்புகள் ஆகியவற்றோடு மாநகராட்சி கூட்டு நடவடிக்கையாக இணைந்துள்ளது என தெரிவித்தாா் அந்த அதிகாரி.

மற்றொரு பக்கம், தில்லியின் ஐக்கிய குடியிருப்பாளா்கள் கூட்டு நடவடிக்கை குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழு, குடியிருப்பு நலச் சங்கங்கள் பயன்படுத்தப்பட்ட கொடிகளை மடித்து, காகிதம் அல்லது துணியில் சுற்றி, குவியலாக சேமித்து வைக்க கேட்டுக்கொண்டுள்ளது.

குடியிருப்பு சங்கங்கள் கொடிகள் சேகரித்து 9205192511 என்கிற கைப்பேசி எண்ணிற்கு தகவல் கொடுத்தால் இந்த ஐக்கிய குடியிருப்பாளா்கள் கூட்டு நடவடிக்கை அமைப்பு வந்து பெற்றுக்கொள்ளப்படும்.

திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த வசதி செய்யப்பட்டுள்ளது என தில்லி ஐக்கிய குடியிருப்பாளா்கள் கூட்டு நடவடிக்கை குழுவும் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT