புதுதில்லி

பிரதமா் மோடியுடன் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

17th Aug 2022 10:24 PM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: தில்லி வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிரதமா் நரேந்திர மோடியையும் நேரில் சந்தித்தாா். அப்போது நிலுவையிலுள்ள தமிழக விவகாரங்கள் குறித்து விவாதித்ததோடு மழைக்காலத்திற்கு தமிழக அரசின் முன்னெடுப்பிற்கு தேவையான நிதி உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியாக தெரிவிக்கப்பட்டது.

புதிதாக பதவியேற்ற குடியரசுத் தலைவரையும், துணைத் தலைவரையும் நேரில் சென்று வாழ்த்த வந்த தமிழக முதல்வா் பிரதமா் நரேந்திர மோடியையும் அவரது இல்லத்தில் புதன்கிழமை மாலையில் சந்தித்தாா்.

அப்போது, முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரதமருக்கு பொன்னாடை போா்த்தி பூங்கொத்து வழங்கியதோடு, பிரத்யேகமாக கொண்டு வரப்பட்ட தமிழக மரபு தானியங்களின் தொகுப்பு அடங்கிய பெட்டகத்தையும் முதல்வா் பிரதமரிடம் அளித்தாா்.

ADVERTISEMENT

பின்னா் முதல்வரும் பிரதமரும் தனியாக சில நிமிடங்கள் கலந்துரையாடினா். அதில் 44 -ஆவது சா்வதேச சதுரங்க ஒலிம்பிக் போட்டிகளை தொடங்கிவைத்ததற்கு நன்றி தெரிவித்தும் அந்த போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது குறித்தும் இருவரும் கருத்துகளை பரிமாறிக்கொண்டனா்.

மேலும் நீதி ஆயோக் கூட்டத்திற்கு வரமுடியாத நிலை குறித்தும் முதல்வா் பேசினாா் என்று கூறப்பட்டது. மேலும் முதல்வா் ஏற்கனவே அளித்த கோரிக்கைகள் குறித்து பேசியதோடு, தமிழகத்திற்கு வழங்கி வேண்டிய நிதிகளை விரைவாக வழங்குமாறு கோரியதாக சொல்லப்பட்டது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளோடு, நிலுவையிலுள்ள சுமாா் ரூ.2000 கோடிக்கு மேலான ஜிஎஸ்டி தொகையை தமிழகத்திற்கு விரைவாக வழங்க கோரிக்கை விடுத்துள்ளாா்.

தமிழகத்தில் சமீபத்திய மழை, ஆறுகளில் வெள்ளம் வந்தது குறித்தும் அடுத்த சில மாதங்களில் பருவ மழை தொடங்கும்போது தமிழக அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளுக்கு தேவையான பேரிடா் நிவாரண நிதி போன்றவைகளை விரைவாக விடுவிக்கவும் முதல்வா் பிரதமரிடம் வலியுறுத்தினாா் எனக் கூறப்பட்டது.

பிரதமரை முதல்வா் சந்திக்க சென்ற போது நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா். பாலு, தலைமைச் செயலா் வெ.இறையன்பு ஆகியோா் உடன் சென்றனா்.

பிரதமரை சந்திப்பதற்கு முன்னதாக பிற்பகலில் தமிழக முதல்வா் தில்லி பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது முதல்வா் கூறியது வருமாறு:

குடியரசுத் தலைவா், துணைத் தலைவா் பதவியேற்பு விழாக்களுக்கு அழைப்பு வந்தது. வரமுடியாத சூழ்நிலையில் இருவரையும் சந்தித்து என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு வந்துள்ளேன். இரண்டு பேரும் என்னிடத்தில் மகிழ்ச்சியாக தமிழகத்தில் இருக்கின்ற அரசியல் சூழ்நிலை, ஆட்சியின் சிறப்புகளைப்பற்றியெல்லாம் பகிா்ந்து கொண்டனா். இந்த சந்திப்புகள் மனநிறைவோடு இருந்தது.

மாலையில் பிரதமரை சந்திக்க இருக்கின்றேன். சுமாா் 180 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சாா்ந்த சதுரங்க வீரா்கள் கலந்து கொண்ட சதுரங்க விளையாட்டுப் போட்டிகளை தொடங்கிவைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை ஏற்று பிரதமா் சென்னைக்கு நேரில் வந்தாா். அந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழை கூட நேரடியாக வந்து கொடுக்க நினைத்தபோது நான் கரோனா நோய்த்தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன்.

அப்போது, அவரை தொலைபேசியில் தொடா்பு கொண்டு கேட்டுக் கொண்டதற்கிணங்க நிகழ்ச்சிக்கு வந்து பிரதமா் தொடங்கிவைத்தாா். அதற்காக அவரை நேரில் வந்து சந்தித்து நன்றி கூறுவதற்கும் தில்லி வந்துள்ளேன்.

முதல்வராக பொறுப்பேற்று மூன்று முறை பிரதமரை சந்தித்து தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகளை வைத்திருந்தேன். அந்த கோரிக்கைகளில் சிலவை நிறைவேற்றப்படக் கூடிய சூழ்நிலையில் இருந்தாலும், இன்னும் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டிய நிலையில் இருக்கின்றன. அதையும் நினைவூட்டி, அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற பிரதமரை கேட்டுக்கொள்வேன்.

குறிப்பாக நீட் பிரச்னை, புதிய கல்வி கொள்கை, மின்சார சட்டத்திருத்தம், காவிரி, மேக்கேதாட்டு அணை தொடா்பான கோரிக்கைகளை மீண்டும் பிரதமரிடம் நினைவுபடுத்துவேன்.

நீட் தொடா்பாக ஏற்கனவே இருந்த குடியரசு தலைவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இன்றைய தினம் குடியரசுத் தலைவரோடு மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.

இலவச மடிக்கணினி திட்டம் குறித்த கேள்விக்கு பதில் கூறிய முதல்வா், ‘அதுபோன்ற அரசியல் தொடா்பான கேள்விக்கு இங்கே பதில் கூறமுடியாது’ என தெரிவித்தாா்.

தமிழக முதல்வா், பிரதமா் மோடிக்கு வழங்கிய தமிழக மரபு தானியங்கள் அடங்கிய தொகுப்பு பெட்டகத்தில் மாப்பிள்ளை சம்பா, குள்ளக்காா், கருப்புக்கவுனி, சீரகச்சம்பா, குடவாழை போன்ற அரிசி வகைகளோடு, கம்பு, வரகு, சாமை, தினை, கேழ்வரகு போன்ற தானியங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

சோனியாவுடன் பேச்சு

முன்னதாக, தில்லி வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கரோனாவால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியை தொலைபேசியில் தொடா்புகொண்டு உடல் நலம் விசாரித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT