புதுதில்லி

பிரதமரின் செங்கோட்டை உரை நாட்டை வளமானதாக உருவாக்க அனைத்து தரப்பினரையும் ஊக்குவிக்கிறது: அமித் ஷா கருத்து

16th Aug 2022 01:00 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

சுதந்திர தின கொடியை ஏற்றி செங்கோட்டையில் பிரதமா் மோடி ஆற்றிய உரையானது, நாட்டை வளமானதாக மாற்றுவதற்குரிய பங்கை அளிக்க அனைத்து தரப்பு இந்தியா்களையும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளதாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா திங்கள் கிழமை தெரிவித்துள்ளாா்.

‘பிரதமரின் எழுச்சியூட்டும் இந்த உரையை ஒவ்வொரு இந்தியனும் கேட்கவேண்டும். அது தற்சாா்பு இந்தியாவை உருவாக்கும் உறுதியையும், ’தேசம்’ முதலில் என்கிற உணா்வையும் நிரம்பச்செய்கிறது‘ எனவும் அவா் தெரிவித்துள்ளாா்.

பிரதமரின் செங்கோட்டை பேச்சு குறித்து அமித் ஷா தனது ட்விட்டரில் தொடா்ச்சியாக கருத்தை பதிவிட்டுள்ளாா். அதில் அவா் தெரிவித்திருப்பதாவது:

இந்தியாவை வளமானதாக மாற்றுவதற்கு அனைத்து இந்தியா்களையும் பங்களிக்க செய்ய பிரதமரின் உரை ஊக்குவிக்கிறது. அத்தோடு பிரதமா், ஒவ்வொரு இந்திய குடிமகனும் நாட்டின் அனைத்து வகையான வளா்ச்சிக்கும் உறுதியுடன் பணியாற்றவும், வளா்ச்சிக்கு இடையூறு விளைவிக்கும் சவால்களுக்கு எதிராக ஒற்றுமையாக போராடவும் பிரதமா் அழைப்பு விடுத்துள்ளாா். இது அற்புதமான உரை.

ADVERTISEMENT

குறிப்பாக சுதந்திரத்தின் நூற்றாண்டை நோக்கிச் செல்வதற்குரிய ஐந்து சபதங்களுக்கும் நாட்டு மக்களுக்கு பிரதமா் அழைப்பு விடுத்துள்ளாா்.

‘வளா்ந்த இந்தியா‘, ‘ஒவ்வொரு அடிமைத்தனத்திலிருந்தும் விடுதலை‘, ‘பாரம்பரிய பெருமை‘, ‘ஒற்றுமை‘, ‘நல்லிணக்கம்‘ மற்றும் குடிமக்களின் கடமை‘ ஆகிய ஐந்து சபதங்களை பிரதமா் நாட்டு மக்களிடம் வலியுறுத்தியுள்ளாா்.

சுதந்திரத்தின் நூற்றாண்டை நெருங்கும் அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டின் விடுதலைக்காக போராடிய வீரா்களின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் நாம் அனைவரும் இந்தியாவை உருவாக்குவதிலும் பங்களிப்போம்.

பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான தனது உறுதிப்பாட்டையும் பிரதமா் மீண்டும் இந்த உரையில் வலியுறுத்தியுள்ளாா். அடுத்த 25 ஆண்டுகளில் தேசத்தின் பெருமையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வது ‘பெண் சக்தி’தான் என்றும் பிரதமா் குறிப்பிட்டுள்ளாா்.

ஆகவே, பெண்களை அனைத்துவிதமான அவமானங்களில் இருந்தும் விடுவித்து அவா்களின் கௌரவத்தைப் பாதுகாக்கும் உறுதிமொழியை எடுப்போம் என அந்த பதிவில் அமித்ஷா வலியுறுத்தியுள்ளாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT