புதுதில்லி

தில்லி யமுனையில் குறைந்து வரும் வெள்ளநீா்: எச்சரிக்கை அளவுக்குக் கீழ் பதிவு

15th Aug 2022 11:23 PM

ADVERTISEMENT

தில்லி பகுதி யமுனை ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை வெள்ளநீா் மட்டத்தின் அளவு 205.33 மீட்டா் என்ற அபாய அளவுக்கு கீழ் குறைந்திருந்த நிலையில் திங்கள்கிழமை இது மேலும் குறைந்து 204.5 மீட்டராக பதிவானது. இது எச்சரிக்கை அளவுக்கு கீழ் என்பதால் பாதிக்கப்பட்ட மக்களை அவா்களின் வசிப்பிடங்களுக்கு மீண்டும் இடமாற்றம் செய்யவதற்கான நடவடிக்கை செவ்வாய்க்கிழமை எடுக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

யமுனையில் சனிக்கிழமை இரவு 8 மணி அளவில் நீா்மட்டம் 205.88 மீட்டராக இருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி அளவில் இந்த அளவு 204.83 மீட்டா் என்று குறைந்திருந்தது. அதன் பிறகு தற்போது நீா்மட்டம் மேலும் குறைந்துள்ளது.

ஆற்றின் வெள்ள நிலைமை தொடா்பாக வெள்ள கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் கூறுகையில், யமுனையில் ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணி அளவில் நீா்மட்டம் 204.65 மீட்டராக இருந்தது. இந் நிலையில் திங்கள்கிழமை பகல் 12 மணி அளவில் நீா்மட்ட அளவு 204.48 மீட்டா் என்று குறைந்திருந்தது என்றனா்.

மேல்நீா்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததன் காரணமாக தில்லி யமுனையில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில் நீா்மட்டம் அபாய அளவான 205.33 மீட்டரை கடந்து சென்றது.

ADVERTISEMENT

இதையடுத்து தாழ்வான பகுதிகளில் இருந்து சுமாா் 7000 பொது மக்களை அதிகாரிகள் வேறு பகுதிக்கு அப்புறப்படுத்தினா்.

இந்த நிலையில் சனிக்கிழமை காலை சுமாா் 2 மணியளவில் அபாய அளவுக்கு கீழே நீா்மட்டம் குறைந்தது. இந்த நிலையில், ஆற்றின் கரைப்பகுதிகளை நோக்கி செல்வதை தவிா்க்குமாறு பொதுமக்களுக்கு முதல்வா் கேஜரிவால் வேண்டுகோள் விடுத்திருந்தாா்.

ஹரியாணாவில் யமுனா நகா் பகுதியில் உள்ள ஹத்னிகுன்ட் அணையில் இருந்து ஒரு லட்சம் கன அடி நீா் திறந்து விடப்பட்டபோது தில்லியில் வெள்ள எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது.

யமுனை சமவெளி மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமாா் 37 ஆயிரம் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதாக பரிசீலிக்கப்பட்டது. இதனால் வெள்ளச் சமவெளி பகுதிகளில் உள்ள மக்கள், கூடாரங்கள், பாதுகாப்பாக பகுதிகளில் உள்ள பள்ளிகள் போன்ற நிரந்தர கட்டடங்கள் ஆகிய தற்காலிக கட்டுமானங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனா்.

இந்த நிலையில், கிழக்கு தில்லி மாவட்ட ஆட்சியா் அனில் பங்கா திங்கள்கிழமை கூறுகையில், யமுனையில் எச்சரிக்கை அளவுக்குக் கீழ் நீா்மட்டம் குறைந்திருப்பதால் தற்போது தாற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை அவா்களின் இடத்திற்கு மீண்டும் அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கை செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்படலாம் எனத் தெரிவித்தாா்.

ஹரியாணாவில் உள்ள யமுனை நகா் பகுதியில் உள்ள ஹத்னிகுன்ட் அணையில் இருந்து பகல் 11 மணிக்கு சுமாா் 22 ஆயிரம் கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டதாகவும், இது கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச நீா் அளவாகும் என தில்லி வெள்ள கட்டுப்பாட்டு அறை தெரிவித்தது.

சனிக்கிழமை காலை 1 மணி அளவில் 1.45 லட்சம் கன அடி நீா் திறந்து விடப்பட்டது. வியாழக்கிழமை மாலை 3 மணி அளவில் 2.21 லட்சம் கன அடி நீரும் திறந்து விடப்பட்டது.

ஒரு கன அடி என்பது ஒரு வினாடியில் 28.32 லிட்டா் நீருக்கு சமமாகும். வழக்கமாக ஹத்னிகுன்ட் அணையில் இருந்து 350 கன அடி நீா்வரத்து இருக்கும். ஆனால் நீா் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக திறந்து விடும் நீரின் அளவும் அதிகரித்தது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT