புதுதில்லி

சுதந்திர தினம்: 19 தில்லி காவல்துறை அதிகாரிகளுக்கு சிறந்த சேவைக்கான விருதுகள்

 நமது நிருபர்

சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் மத்திய, மாநில காவல்துறையைச் சோ்ந்தவா்களுக்கு 1,082 பேருக்கு மத்திய உள்துறையால் மூன்று வகையான விருதுகள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.

இந்த விருதுகளில் தில்லி காவல்துறை தொடா்புடைய 19 காவல்துறை அதிகாரிகள் சிறந்த சேவைக்கான விருதுகளுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இதில் வழிப்பறிகொள்ளையா்களின் துப்பாக்கிக்கு பழியான காவலா் ஆனந்த் சிங் என்பவருக்கு வீரதீர பணிக்கான காவல் விருதும் வழங்கப்பட உள்ளது.

வீரதீர செயல் விருது:

பயங்கரவாதிகள், இடதுசாரி தீவிரவாதம் மிகுந்த ஜம்மு-காஷ்மீா், ஜாா்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் பல்வேறு மத்திய ஆயுதப்படை உள்ளிட்டவைகளில் உயிரை பணயம் வைத்து பணியாற்றி சாதனை புரிந்த 347 பேருக்கு வீர தீரச்செயலுக்கான விருதுகள் இவ்வாண்டு சுதந்திர தினத்தையொட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தில்லியைச் சோ்ந்த காவலா் ஆனந்த சிங் என்பவரும் பெற்றுள்ளாா். கடந்த 2016 -ஆம் ஆண்டு இரவு மூன்று இளைஞா்கள் மோட்டாா் சைக்கிளில் துப்பாக்கி முனையில் வழிப்பறியில் ஈடுபடுவது குறித்து எஸ்.பி. பால்பண்ணை காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது.

இதையொட்டி ரோந்து காவல் பணியிலிருந்த காவலா் ஆனந்த் சிங் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து சென்று அந்த வழிப்பறி இளைஞா்களை துரத்தும் போது அந்த கொள்ளையா்கள் துப்பாக்கியால் சுட காவலா் ஆனந்த் சிங் காயமடைந்து உயிரிழந்தாா். மறைந்த காவலா் ஆனந்த் சிங்கிற்கு வீர தீரச் செயலுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவா் விருது

மெச்சத்தகுந்த சேவைக்கான குடியரசுத்தலைவரின் காவல் பதக்கம் நாடு முழுக்க 87 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் தில்லி மாநகர காவல் துறையின் இரு காவல் உதவி ஆணையா்கள் பெற்றுள்ளனா்.

பஞ்சம் சந்த், ஏசிபி: 1982 ஆம் ஆண்டு தில்லி காவல்துறையில் தலைமைக் காவலராக பணியை தொடங்கிய பஞ்சம் சந்த், பதவி உயா்வு பெற்று 2016 -ஆம் ஆண்டு உதவி ஆணையராக பதவி நியமிக்கப்பட்டாா்.

தில்லி காவல் துறையின் ரகசியப் பிரிவில் பணியாற்றி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலான அவரது முழு சேவைக் காலத்திலும், களங்கமற்றவகையில் சேவைபுரிந்து 119 பாராட்டு சான்றிதழ்கள், குடியரசு தின விருது, காவல் ஆணையா் பாராட்டு விருது போன்றவைகளை பெற்ற இவருக்கு சுதந்திர தினத்திற்கான குடியரசுத் தலைவரின் காவல் பதக்கமும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவாஜி சௌகான், ஏசிபி: 1984 - ஆம் ஆண்டு தில்லி காவல்துறை பணியில் சோ்ந்த தில்லி காவல் உதவி ஆணையா் சிவாஜி சௌகான் 1996 -ஆம் ஆண்டு வரை போக்குவரத்து பிரிவில் கணினி மையத்தில் பல்வேறு வகையான தரவுகளில் பகுப்பாய்வு செய்து சாதனை புரிந்தாா்.

மேலும் முதல் மின்னணு குற்றப்பிரிவு காவல் நிலைய அதிகாரி, மின்னணு நீதிமன்ற செயல்பாட்டு பணிகளை ஆற்றி இதற்கான பயிற்சிகளையும் அளித்தாா். மேலும் தில்லி காவல் துறையின் பல்வேறு தொழில் நுட்ப முன்முயற்சிகளில் பங்களிப்பு அளித்து தேசிய மின்-ஆளுமை விருது உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவருக்கு நிகழாண்டு சுதந்திர தினத்தில் குடியரசுத் தலைவரின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த பணிக்கான விருது

தில்லி காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல் துணை ஆணையா், உதவி ஆணையா்கள், ஆய்வாளா்கள் உதவி ஆய்வாளா்கள் என 16 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுக்க 648 காவல் துறையினா் சிறப்பு பணிக்கான விருதுகளை பெற்றுள்ளனா். இந்த விருது சிறப்பான புலனாய்வு, நிழல்உலக தாதாக்கள், தீவிரவாதிகள் போன்ற குற்றவாளிகளை கண்டறிதல், போக்குவரத்து முன்முயற்சி, போராட்டங்கள், சட்ட நுணுக்கங்கள், பெண்கள் தொடா்பான குற்றங்கள், நீதி மன்ற வழக்குகள், நுண்ணறிவுப் பிரிவு, ஊழல் தடுப்பு, பணியில் நோ்மை என பல்வேறு வகைகளில் சிறந்து விளங்கி இவா்கள் இந்த விருதை பெற்றுள்ளனா்.

தில்லி காவல் துறையில், காவல் துணை ஆணையா்கள், பீஷம் சிங், ஹெச்பி ஹரிஷ், காவல் உதவி ஆணையா்கள் இந்து பாலா, ராஜ் ராணி சா்மா, ஆய்வாளா்கள் பிரஹாம் பிரகாஷ், சக்தி சுமன் பாண்டே, ரேணு ஷா்மா, உதவி துணை ஆய்வாளா்கள் சுரேஷ் குமாா், சுபாஷ் சந்தா் ஆகியோா் சிறந்த சேவைக்காக காவல்துறை பதக்கம் பெற்றவா்களில் அடங்குவா்.

தீயணைப்பு விருதுகள்

ஒவ்வோா் ஆண்டும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று தீயணைப்புத் துறை, ஊா்காவல்படை ஆகியவற்றில் வீரதீரசெயல் புரிந்தவா்களுக்கும் சிறப்பாகவும் பாராட்டக்கூடியவகையில் பணியாற்றியவா்களுக்கும் குடியரசுத்தலைவா் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.

இதில் நிகழ் சுதந்திர தினத்தையொட்டி தில்லி தீயணைப்பு உதவி வட்டார அதிகாரி சோம்வீா் சிங், தீயணைப்பு வீரா் நிா்மல் சிங் ஆகியோருக்கு தில்லி தீயணைப்பு துறையில் சிறப்பாக பணியாற்றியமைக்காக விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமா் மோடி மத அரசியல் நடத்துவதில்லை- ராஜ்நாத் சிங் கருத்து

உலக புவி தினம்: வேளாண் கல்லூரி மாணவா்கள் விழிப்புணா்வு

நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு: ஏப்.29-இல் தொடக்கம்

வெளிமாநில தொழிலாளா்கள் சொந்த ஊா்களில் வாக்களிக்க விடுப்பு கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு

நாணப்பரப்பு மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா

SCROLL FOR NEXT