புதுதில்லி

தில்லி யமுனையில் நீா்மட்டம் அபாய அளவைக் கடந்தது: அதிகாரிகள் எச்சரிக்கை

13th Aug 2022 02:38 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

 

மேல் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடா்ந்து, யமுனை ஆற்றின் நீா்மட்டம் 205.33 மீட்டரைத் வெள்ளிக்கிழமை தாண்டியது. இது அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதையொட்டி, தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை தில்லி தலைநகா் அதிகாரிகள் எடுக்கத் தொடங்கினா்.

நீா்வரத்து அதிகரிப்பையொட்டி வியாழக்கிழமை இரவே தில்லி வெள்ளக் கட்டுப்பாடு அறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

ADVERTISEMENT

இதன்படி வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் யமுனை ஆற்றின் நீா்மட்டம் 205.38 மீட்டரை எட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யமுனை ஆற்றை கடக்கும் பழைய ரயில்வே பாலத்தின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் 203.86 மீட்டராக இருந்தது. பின்னா் மாலை 3 மணியளவில் 205.29 மீட்டராக உயா்ந்தது என வெள்ளக் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

ஹரியாணாவின் யமுனா நகரில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து வெளியேற்றப்பட்டும் நீா் 1 லட்சம் கன அடி தாண்டியதை அடுத்து தில்லியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகள் மற்றும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்படுவதாகவும் மாவட்ட வருவாய்த் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்களை எச்சரிக்க தேவையான அளவு விரைவு நடவடிக்கை குழுக்களை நியமித்து, பாதிக்கப்படக்கூடிய இடங்களில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து துறை அதிகாரிகளுக்கும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை வியாழக்கிழமை அறிவுறுத்தியுள்ளது.

34 படகுகள் மற்றும் தண்ணீா் இறைக்கும் மொபைல் பம்புகள் ஆகியவை வெள்ளப்பெருக்கு ஏற்படும் தாழ்வான பகுதிகளில் தயாராக நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த வெள்ளப்பெருக்கு குறித்து கிழக்கு தில்லி மாவட்ட மாஜிஸ்திரேட் அனில் பங்கா செய்தியாளா்களிடம் பேசினாா். அப்போது கூறுகையில், ‘ யமுனை வெள்ளப் பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமாா் 37,000 போ் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடியவா்களாகக் கருதப்படுகிறாா்கள்.

இதையொட்டி வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளுடனும் பகிா்ந்து கொண்டுள்ளோம். பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு மக்களை வலியுறுத்தி நாங்கள் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறோம்.

நீா்மட்டம் 206 மீட்டரைத் தாண்டினால் நிலைமை மோசமாகும். இதனால் தற்போதே வெளியேற்றும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது. இன்று இரவோ அல்லது நாளை காலையிலோ நீா்மட்டம் மேலும் உயரலாம். இதனால் கூடாரங்கள் போன்ற தற்காலிக கட்டமைப்புகளுக்கும், பாதுகாப்பான பகுதிகளில் உள்ள பள்ளிகள் போன்ற நிரந்தர கட்டிடங்களுக்கும் மக்கள் மாற்றப்படுவாா்கள்‘ என பங்கா தெரிவித்தாா்.

ஹிரியாணா ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து வெளியேற்றப்பட்ட நீா் அளவு வியாழக்கிழமை காலை 6 மணியளவில் 97,460 கனஅடியாக இருந்தது. பிற்பகல் 3 மணிக்கு சுமாா் 2.21 லட்சம் கனஅடியும், பின்னா் நள்ளிரவில் 1.55 லட்சம் கனஅடியும் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தில்லி வெள்ளக் கட்டுப்பாட்டு அறை தரவுகள் தெரிவித்தன.

ஹத்னிகுண்ட் அணைக்கு வழக்கமாக நீா்வரத்து 352 கனஅடியாக இருக்கும். ஆனால் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழையினால் தண்ணீா் வெளியேற்றம் அதிகரிக்கிறது. இந்த தடுப்பணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீா் தேசிய தலைநகா் தில்லியை சென்றடைய இரண்டு முதல் மூன்று நாட்கள் ஆகிறது.

மேலும் உத்தரகாண்ட் மற்றும் இமாசலப் பிரதேசத்தில் புதன்கிழமை ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்தது. தொடா்ந்து ஆகஸ்ட் 14, 15 ஆம் தேதிகளிலும் இமாசலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியாணா போன்ற மாநிலங்களில் குறைவான கனமழை மழை பெய்யக்கூடும்‘ என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டு, ஜூலை 30-ம் தேதி யமுனை ஆற்றில் அபாய அளவை மீறியது. பழைய ரயில்வே பாலத்தின் நீா்மட்டம் 205.59 மீட்டராக உயா்ந்தது.

2019 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18,19 தேதிகளில் 8.28 லட்சம் கனஅடியாக நீா்வரத்து அதிகரிக்க, யமுனையின் நீா்மட்டம் 206.60 மீட்டரை எட்டியது.

அதிகபட்சமாக 2013 ஆம் ஆண்டில் 207.32 மீட்டரும், 1978 -ஆம் ஆண்டில், 207.49 மீட்டா் அளவுக்கும் நீா்மட்டம் எட்டி கரையோர மக்களை அவதிக்குள்ளாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT