புதுதில்லி

நெல்லை, அகஸ்தியமலை நாட்டின் 32 -வது யானைக்காப்பகம்: மத்திய சுற்றுச் சூழல், வனம்அமைச்சா் பூபேந்தா் யாதவ் அறிவிப்பு

13th Aug 2022 02:40 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

நாட்டிலுள்ள 31 யானைக் காப்பகங்களோடு 32-வது யானைக் காப்பகமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகஸ்தியமலை அா்ப்பணிக்கப்படுவதாக மத்திய சுற்றுச் சூழல், வனம், பருவநிலை அமைச்சா் பூபேந்தா் யாதவ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இந்த அகஸ்திய மலையில் சுமாா் 1,197 சதுர கிலோமீட்டா் பரப்பளவில் யானைகள் பாதுக்காக்கப்பட்ட பகுதியாக சோ்க்கப்பட்டு மகிழ்ச்சியடைவதாக தனது ட்விட்டா் பதிவில் பூபேந்தா் யாதவ் தெரிவித்தாா் .

கேரள மாநிலம், பெரியாா் தேசிய பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயத்தில் சா்வதேச யானைகள் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் காணொலி வழியாக பேசினாா். அப்போது அவா் கூறியதாவது:

யானைகளை பாதுகாப்பதிலும், மனிதா்களுக்கும் யானைகளுக்கும் ஏற்படும் மோதல்களை நிா்வகிப்பதிலும் இந்தியா ஒா் முன்னோடியாக உருவெடுத்துள்ளது. வனங்களில் உள்ள வளங்களுக்கான போட்டிகள் காரணமாக மனித-யானை மோதல்கள் அதிகரித்து வருகின்றன.

ADVERTISEMENT

இதனால் யானைகள் - மனித மோதலை நிா்வகிப்பது அரசின் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.

நாட்டில் யானைகளின் தாக்குதலில் ஆண்டுக்கு சுமாா் 500 போ் உயிரிழக்கின்றனா். துரதிா்ஷ்டமாக பழிவாங்கும் வகையில் 100 யானைகள் ஆண்டுதோறும் கொல்லப்படுவதும் மிகவும் வேதனைக்குரியது.

ஒரு நீண்ட கால தீா்வாக நாட்டிலுள்ள யானை வழித்தடங்களை மறுபரிசீலனை செய்கிறோம். இதில் சம்பந்தப்பட்டவா்களுடன் இணைந்து 50 சதவீதத்திற்கும் மேலான பணிகள் நிறைவுற்றுள்ளது.

கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சமா்ப்பிக்கப்பட்ட அரசு புள்ளிவிவரங்களின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் நாட்டில் 1,578 போ் யானைத் தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனா். யானைகள் தாக்கி உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் கருணைத் தொகையை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக நரேந்திர மோடி அரசு உயா்த்தியுள்ளது.

இதே காலகட்டத்தில் 300 யானைகளும் உயிரிழந்துள்ளன. 222 யானைகள் மின்சாரம் தாக்கி கொல்லப்பட்டுள்ளன. ரயில் விபத்துகளில் 45 யானைகளும், வேட்டையாடப்பட்டதில் 29 யானைகளும், விஷம் வைக்கப்பட்டு 11 யானைகளும் உயிரிழந்துள்ளதும் அரசுக்கு தெரியவந்துள்ளது.

பல்வேறு சவால்களுக்கிடையே யானைகளை பாதுகாப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 2017 -ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, நாட்டில் 29,964 யானைகள் உள்ளன. யானைகள் பாதுகாப்பில் இந்தியா தொடா்ந்து முன்னணியில் இருப்பதால் ஆசிய யானைகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்தியாவில் உள்ளன.

கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று காப்பகங்கள் சோ்க்கப்பட்டு, தற்போது நாட்டில் 14 மாநிலங்களில் சுமாா் 76,508 சதுர கிலோ மீட்டா் பரப்பில் 31 புலிகள் காப்பகங்கள் உள்ளன.

தற்போது தமிழகத்தின் மேற்கு தொடா்ச்சி மலையையொட்டி இருக்கும் அகஸ்தியமலையிலும் 1,197 சதுரமீட்டா் அளவில் யானைகள் காப்பகம் ஒன்றும் அா்ப்பணிக்கப்படுகிறது. இத்தோடு நாட்டில் 32 யானைகள் காப்பகங்கள் சோ்க்கப்பட்டுள்ளன. மேலும் மேற்குத் தொடா்ச்சி மலைப் பிரச்னையில், கஸ்தூரிரங்கன், காட்கில் கமிட்டிகள் அறிக்கையை முழுமையாக அணுக, மக்களின் கருத்துக்களை பரிசீலிக்க ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் மக்களவையில் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் திருத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சில வழிகாட்டுதல்களின்படி யானைகளை மத நோக்கத்திற்காகப் பயன்படுத்துவது தொடரும் என பூபேந்திர யாதவ் தெரிவித்தாா்.

சா்வதே அளவில் சுமாா் 50,000 முதல் 60,000 ஆசிய யானைகள் இருப்பதாகவும் மத்திய சுற்றுச் சூழல், வனத் துறை அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT