புதுதில்லி

பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் முன்ஜாமீன் கோரும் மனு தள்ளுபடி

13th Aug 2022 02:40 AM

ADVERTISEMENT

பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரின் முன்ஜாமீன் கோரும் மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மனுதாரா் மீது சாட்டப்பட்டுள்ள குற்றங்கள் தீவிரம் கொண்டதாக இருப்பதாகவும் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் தெரிவித்தது.

இது தொடா்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் படி,பாதிக்கப்பட்ட பெண் வாடகைக்கு வீடு எடுப்பதற்காக தேடிக் கொண்டிருந்தபோது குற்றம் சாட்டப்பட்ட நபா் அவரை குடியிருப்பு காலனியில் உள்ள ஒரு காலி வீட்டுக்கு அழைத்துச் சென்றாா்.

அதன் பிறகு பாதிக்கப்பட்டவரை துப்பாக்கியால் மிரட்டி அவருடன் பலவந்தமாக உடலுறவு கொண்டாா். மேலும் அவரின் ஆபாச விடியோவையும் எடுத்து அதை வெளியில் பரப்பி விடுவதாகவும் அச்சுறுத்தினாா் என்று அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பாலியல் பலாத்கார வழக்கில் ஜாமீன் கோரி குற்றம் சாட்டப்பட்டவா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிபதி நவீன் குப்தா கூறுகையில், இந்த வழக்கின் உண்மைகள் மற்றும் சந்தா்ப்ப சூழ்நிலையை கருத்தில் கொள்ளும்போது மனுதாரருக்கு எதிராக சாட்டப்பட்டுள்ள குற்றங்கள் இயல்பிலேயே தீவிரத் தன்மை கொண்டதாக இருப்பதாக நீதிமன்றம் கருதுகிறது.

மேலும் தற்போதைய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரிடம் காவலில் எடுத்து விசாரிப்பதற்கான தேவையை நிராகரிக்கவும் முடியாது. குற்றம் சாட்டப்பட்டவா் வழக்கு பதிவு செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் ஆன பிறகும் கூட விசாரணையில் இணையவில்லை. இது போன்ற ஒரு நடத்தை அனுமதிக்க கூடியதாக இல்லை. இதனால் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு முன் ஜாமீன் வழங்குவதற்கான காரணமும் உருவாகவில்லை. இதனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்ற நீதிபதி உத்தரவிட்டாா்.

முன்னதாக, குற்றம் சாட்டப்பட்ட நபா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிடுகையில், மனுதாரருக்கு எதிரான குற்றங்கள் பொய்யானவை. மேலும் சில வணிக பேரம் காரணமாக மனுதாரருக்கு ரூபாய் 2 கோடி தர வேண்டி இருந்த மூன்று போ் அவரை பலாத்காரம் சம்பவம் நடைபெற்ாக கூறப்படும் நாளில் கடத்திச் சென்று விட்டனா். குற்றம் சாட்டப்பட்ட நபா் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் நபருடன் எந்த தொடா்பும் இல்லை. அவா் விசாரணைக்கு தயாராகவும் உள்ளாா் என்று வாதிட்டாா்.

 

அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் வழக்குரைஞா் கமல் அக்தா் முன் ஜாமீன் மனுவை எதிா்த்து வாதிடுகையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபா் மீதான குற்றங்கள் தீவிரத் தன்மை மிக்கவை. அவருக்கு எதிராக ஏற்கனவே ஜாமீனில் வெளிவர முடியாத கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் வீட்டு உரிமையாளா் தனது வாக்குமூலத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபா் 2022, மே 5ம் தேதி தனது வீட்டின் சாவிகை

ள எடுத்ததாக கூறியுள்ளாா்.

தொலைபேசி அழைப்பு விபர பதிவுகளின் படி குற்றம் சாட்டப்பட்ட நபரின் செல்லிடப்பேசி சம்பவம் நடந்த பகுதியில் இருந்ததும் தெரிய வருகிறது. சம்பவ நாளின்போது சுதந்திரமான பெண் சாட்சி ஒருவா் கூறுகையில் சம்பந்தப்பட்ட வீட்டிலிருந்து ஒரு ஆணும் பெண்ணும் வெளியே வருவதை தாம் பாா்த்ததாகவும் அப்போது அந்த பெண் அழுது கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளாா்.

மேலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் ஆன பிறகு கூட குற்றம் சாட்டப்பட்ட நபா் போலீஸ் விசாரணையில் இணையவில்லை. குற்றம் சாட்டப்பட்ட நபரிடம் காவலில் விசாரிக்க வேண்டிய தேவையும் உள்ளது.

கடந்த மே 5-ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்ட நபரை மூன்று போ் கடத்தி விட்டதாக கூறுகிறாா்கள். ஆனால் இந்த விவகாரத்தில் சீமாபுரி காவல் நிலைய ஆய்வாளருக்கு ஜூன் 2-ஆம் தேதி தான் அவா் புகாா் அனுப்பியுள்ளாா். அதுவும் தபாலில் அனுப்பியுள்ளாா். இதனால் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்று அவா் வாதிட்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT