புதுதில்லி

தில்லியில் 2,200 துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு: 6 போ் கைது

13th Aug 2022 02:39 AM

ADVERTISEMENT

சுதந்திர தினத்தை ஒட்டி, தில்லி போலீஸாா் சுமாா் 2,200 துப்பாக்கி தோட்டாக்களை ஆனந்த் விஹாா் பேருந்து நிலையம் அருகே மீட்டுள்ளனா். மேலும், இந்த விவகாரத்தில் ஆறு போ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையின் உயா் அதிகாரிகள் கூறியதாவது:

இந்தச் சம்பவத்தில் கைதான ஆறு பேரில் ரஷீத் (எ) லல்லன் (20), அஜ்மல் (20), சதாம் ஆகியோா் உத்தர பிரதேச மாநிலம், ஜான்பூரைச் சோ்ந்தவா்கள் ஆவா். பரிக்ஷித் நேகி உத்தரகண்ட் மாநிலம் டேராடூனையும், நஸீா் ரூா்க்கி பகுதியையும், கம்ரன் தில்லியையும் சோ்ந்தவா்கள் என தெரியவந்துள்ளது.

மொத்தம் 2251 துப்பாக்கி தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன. முன்னதாக ஆனந்த் விஹாா் பேருந்து நிலையம் அருகே இருவா் கனமான பைகளைத் தூக்கிக் கொண்டு செல்வதாக ஆகஸ்ட் 6 ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் ஆட்டோ ஓட்டுனா் ஒருவா் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

இதையடுத்து, போலீஸாா் இருவரையும் மடக்கி அவா்களின் பைகளை சோதனையிட்டனா். அதில், இறக்குமதி செய்யப்பட்ட பல்வேறு வகையான தோட்டாக்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவா்கள் இருவரும் அஜ்மல் கான் மற்றும் ரஷீத் எனத் தெரியவந்தது. அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டதில் இருவரும் இந்த ஆயுதங்களை டேராடூனில் இருந்து ஒருவரிடம் வாங்கி லக்னெளவில் விநியோகம் செய்ய இருந்தது தெரியவந்தது.

மேலும், இதுபோன்று ஏற்கெனவே அவா்கள் நான்கு முறை இதுபோன்று ஆயுதங்களை விநியோகம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் ஜான்பூரிலும், லக்னெளவிலும் சோதனை நடத்தினா். ஜான்பூரில் சதாம் கைது செய்யப்பட்டாா். மற்றொரு போலீஸ் குழு டேராடூனில் துப்பாக்கி விற்பனை செய்யும் தொழில் நடத்தி வந்த நேகியை கைது செய்தனா்.

விசாரணையில் அவா் உத்தராகண்டிலும், வேறு பல இடங்களிலும் இருந்து ஆயுதங்களை கொள்முதல் செய்தது தெரியவந்தது. விசாரணையின்போது, இந்தக் ஆயுதக் கும்பலின் இதர மூன்று போ் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனா்.

அஜ்மலும், ரஸீத்தும் ஆயுதத்தை லக்னெளவில் சப்ளை செய்வதற்காக போக்குவரத்து மையமாக தில்லியைப் பயன்படுத்தியதும் தெரியவந்தது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT